’என்னோட க்ரஷ்கள் எல்லாமே அப்பாவுக்கு தெரியும்’ : திவ்யா சத்யராஜ் கலகல பேட்டி

”சரியான ஃபிட்னெஸ் பயிற்சியாளர் அல்லது நியூட்ரிஷியன் மேற்பார்வை இல்லாம மத்தவங்க சொல்றத பொதுமக்கள் ஃபாலோ பண்ணினா, உள்காயம் அல்லது உடலமைப்பில் வித்தியாசமோ வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு.”

Divya Sathyaraj nutritionist
ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ்

பெரும்பாலான சினிமா நட்சத்திரங்களின் பிள்ளைகள் தங்கள் அப்பா / அம்மாவைப் போலவே நடிப்புக்குள் வந்து விடுவார்கள். அதிலிருந்து விலகி தனக்கென தனிப்பாதையை அமைத்துக் கொள்பவர்கள் வெகு சிலரே… அப்படியான ஒருவர் தான் திவ்யா சத்யராஜ். நடிகர் சத்யராஜின் மகளான இவர், இன்று சென்னையின் வெற்றிகரமான ஊட்டச்சத்து நிபுணராக வலம் வருகிறார். தானுண்டு என்றிருக்காமல், தன்னால் சமூகத்திற்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை தொடர்ந்து செய்துக் கொண்டு வருகிறார்.

உலகின் மிகப்பெரிய மதிய உணவு திட்டமான ’அக்‌ஷய பாத்திரா’வின் விளம்பரத் தூதுவராக செயல்பட்டு வருகிறார் திவ்யா. ‘வேர்ல்டு விஷன்’ என்ற அமைப்புடன் இணைந்து கிராமப்புற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, இந்தியாவில் குறிப்பிட்ட கம்பெனியின் மருந்துகளை தடை செய்ய வேண்டும் எனவும், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் விரிவாக விளக்கி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அங்கிருந்து சரியான பதில் வராவிட்டாலும், தற்போது அந்த கம்பெனி மருந்துகள் சந்தையில் இல்லை என நிம்மதி பெருமூச்சு விடுகிறார். அதோடு மருத்துவ துறையில் நடக்கும் முறைக்கேடுகள் குறித்தும், நீட் தேர்வை எதிர்த்தும், பிரதமருக்கு திவ்யா எழுதிய கடிதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. தற்போது அமெரிக்காவின் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் அவரை தொடர்புக் கொண்டோம்…

டாக்டர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, எப்படி உணர்கிறீர்கள்? என்றோம்…

ஊட்டசத்து துறையில் நான் செஞ்ச வேலைகளை அங்கீகரித்து எனக்கு இந்த டாக்டர் பட்டம் கொடுத்திருக்காங்க. இதுக்கு அமெரிக்க சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வனுக்கு என்னோட நன்றியை தெரிவிச்சுக்கிறேன். வருமானத்தில் பின் தங்கியவங்களோட உடல் நலனை உயர்த்துறதுக்கு எனக்கு இது கண்டிப்பா ஊக்கமளிக்கும்.

Nutritionist Divya Sathyaraj with Sathyaraj
அப்பாவுடன் திவ்யா…

மருத்துவம் சார்ந்த துறையில் மிளிர்கிறீர்கள்… அப்படியெனில் பெரிய படிப்பாளியாக இருக்கணுமே?

நிச்சயமா இல்ல. நான் ஸ்கூல், காலேஜ்ல எல்லாம் ரொம்ப இண்டலிஜெண்ட் ஸ்டூடெண்ட் கிடையாது. நம்ம அறிவாளியா இருக்குறத விட, உழைப்பாளியா இருக்கணும்ன்னு அப்பா எப்போவுமே சொல்வார். அந்த வகைல நான் கடின உழைப்பாளி.

அப்பா பெரிய நடிகர்.. நீங்கள் எப்படி ஊட்டச்சத்து துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?

சின்ன வயசுல சரியா சாப்பிட மாட்டேன். பயமுறுத்தி சாப்பிட வைக்கிறதுல அப்பா அம்மாவுக்கு உடன்பாடு இல்ல. அதனால எந்த உணவு எதுக்கு நல்லதுன்னு அதோட பயன்களை சொல்லி, சொல்லி கொடுக்க ஆரம்பிச்சாங்க, அப்போவே எனக்குள்ள உணவு சார்ந்த ஒரு ஈடுபாடு உருவாகிடுச்சு. நான் பொறந்து, வளந்து படிச்சது எல்லாமே சென்னை தான். படிப்புக்காக நான் வெளிநாடுகளுக்கு போனதே இல்ல, போறதுல எனக்கு இண்ட்ரெஸ்டும் இல்ல. காரணம் வெளிநாட்ல நியூட்ரிஷியன் படிச்சிருந்தா, அது அங்க இருக்கவங்களோட மெட்டபாலிஸம், க்ளைமேட் கண்டிஷனை பொறுத்து தான் இருந்திருக்கும். ஆனா அத நம்ம மக்களுக்கு அப்ளை பண்ண முடியாது. இங்க படிச்சா தான் நம்மாளுங்கள பாத்துக்க முடியும்ங்கறதுல உறுதியா இருந்தேன்.

எந்த மாதிரியான படம் பாப்பீங்க?

க்ளினிக் நேரத்தை பொறுத்து தியேட்டருக்கு போவேன். முடிஞ்சளவு எல்லா படத்தையும் பாக்க முயற்சி பண்ணுவேன். சில சமயம் அது மிஸ்ஸாகும். ஆனா வாரத்துக்கு அட்லீஸ்ட் ஒரு படமாச்சும் பாத்துடுவேன். திங்கட்கிழமை எனெர்ஜிக்கு அது தான் காரணம். திரும்பவும் எப்போ சத்யம் தியேட்டர் திறப்பாங்களோ…

நீங்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்குறீங்க?

எனக்கு தென்னிந்திய உணவுகள் தான் ஃபேவரிட். இட்லி, தோசை, பொங்கல், ரைஸ் எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஆனா கேர்ஃபுல்லா சாப்பிடுவேன். ஞாயிற்றுக் கிழமை மட்டும் காஃபி குடிப்பேன். இந்த பாஸ்தா, பீட்ஸா எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது. எனக்கு டயட் ஃபாலோ பண்றதுல நம்பிக்கை இல்ல. ஆரோக்கியமா சாப்பிடுவேன், ஆனா அளவுக்கு மீறி சாப்பிட மாட்டேன். சாஃப்ட் ட்ரிங்க்ஸ் குடிக்கிறது, நூடுல்ஸ் சாப்பிடுறது இந்த பழக்கம் எல்லாம் என்கிட்ட இல்ல.

எல்லாப் பொண்ணுங்க மாதிரி திவ்யாவும் டாடி’ஸ் கேர்ள் தானே?

சந்தேகமே வேணாம், நான் அப்பா பொண்ணு தான். எங்கப்பா ஸ்ட்ரிக்டே கிடையாது. அவருக்கிட்ட நான் தான் ஸ்ட்ரிக்டா இருப்பேன். அவருக்கு திட்டவே தெரியாது. மினி ஸ்கார்ட் போட, பசங்க கூட வெளில போக, லேட் நைட் அவுட்டிங்ன்னு எதுக்குமே எனக்கு தடை போட்டதில்ல. என்னோட க்ரஷ்கள்ல இருந்து, பீரியட் பிரச்னை வரைக்கும் எல்லாமே என்னப் பத்தி அப்பாவுக்கு தெரியும். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், ‘கூலஸ்ட் ஃபாதர் டாட்டர்’ன்னு சொல்வாங்க. ஆனா உலகத்துல அதிகம் சண்டை போடுற அப்பா – மகள் லிஸ்ட்ல நாங்க தான் வருவோம். அதுக்கு நான் தான் காரணம். எங்க ரிலேஷன்ஷிப்ல நான் தான் பிக் பாஸ். அவர் ரொம்ப சில் அண்ட் ஈஸி டைப்!

அப்பா கூட ஷூட்டிங் போன அனுபவம்?

சின்ன வயசுல ஸ்கூல் முடிச்சிட்டு அப்பாவோட நிறைய ஷூட்டிங் போயிருக்கேன். அப்பாவோட கரியர்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்ன்னா, அது அவரோட ஹீரோயின்ஸ் கூட பேசி பழகினது தான். எனக்கு அவங்கக் கூட பேசுறது அவ்ளோ பிடிக்கும். குஷ்பூ ஆண்டி, பானு ஆண்டி, அம்பிகா ஆண்டி, சீதா ஆண்டி இவங்க எல்லாருமே எனக்கு பெரிய ரோல் மாடல். பெண்கள்ன்னு எடுத்துக்கிட்டா, அம்மாவுக்கு அப்புறம் என் லைஃப்ல இவங்களோட பங்கு தான் அதிகம். அவங்க ஒவ்வொருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கை பயணத்துலயும் கத்துக்க நிறைய இருக்கு, தைரியமான பெண்கள்.

உங்களுக்குப் பிடித்த சத்யராஜ் படங்கள்?

கஷ்டம் தான், பட் ட்ரை பண்றேன். அமைதிப்படை, பூவிழி வாசலிலே, நடிகன், வால்டர் வெற்றிவேல், பெரியார், பாகுபலி.

நீங்கள் யாருடைய ஃபேன்?

நிச்சயம் சத்யராஜ் ஃபேன். அவரை தவிர இன்னொருவர் என்றால், அது ‘தல’ தான். தீவிர அஜித் ரசிகை நான். அவர் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுவேன். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படம் எல்லாம் நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன்.

ஊட்டச்சத்து நிபுணராக கொரோனாவைப் பற்றி?

இந்த மாதிரி ஒரு சவாலான நேரத்தை நம்ம யாருமே பாத்திருக்க மாட்டோம். இதுக்கு முன்னாடி சின்ன சின்ன வைரல் அவுட் பிரேக் வந்திருந்தாலும், ஒட்டு மொத்த உலகத்தையே தலைகீழா திருப்பிப் போட்டது இந்த கொரோனா தான். இந்த நேரத்துல மருந்து விலையெல்லாம் கண்ணா பின்னான்னு ஏறியிருக்கு. அதை கட்டுப்படுத்த அரசு எதாச்சும் பண்ணணும். ஏன்னா, எல்லாருமே அவங்கவங்க நிலைல பொருளாதார பற்றாக்குறைய எதிர் கொண்டு இருக்காங்க. மருந்து அல்லது மளிகைப் பொருட்கள் வாங்கப் போறவங்க, தயவுசெஞ்சு தேதியை செக் பண்ணுங்க. ஏன்னா இந்த பொதுமுடக்கத்துல சப்ளை செயின் பெரியளவுல பாதிக்கப்பட்டிருக்கு. ஸோ, சில மளிகை மற்றும் மருந்து கடைகள்ல காலாவதியான பொருட்கள வச்சிருக்காங்க. அவசரத்துல நம்மளும் அத செக் பண்ணாம வாங்கிட்டு வந்திடுறோம். அதனால எல்லாரும் ப்ளீஸ் தேதியை செக் பண்ணுங்க. மாஸ்க் போடுறது, கை கழுவுறது, சமூக விலகல் பெரும்பாலானவங்க ஃபாலோ பண்றாங்க, இது நல்ல விஷயம்.

இந்த நேரத்துல எல்லாருமே இம்யூனிட்டி பத்தி பேச ஆரம்பிச்சுருக்காங்க. தென்னிந்திய உணவுகள்ல இருக்க மஞ்சள், இஞ்சி, பூண்டு, பட்டை எல்லாமே நம்ம நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதுல மல்ட்டி விட்டமின்ஸ், இரும்புச்சத்து ரெண்டுமே முக்கியம். இத வசதியான வீட்ல இருக்கவங்க, எளிதா ஃபாலோ பண்ணிக்குவாங்க. ஆனா வசதி இல்லாத வீட்ல இருக்கவங்களுக்கும் இதெல்லாம் கிடைக்கணும். அவங்களுக்கும் நோயெதிர்ப்பு சக்தி முக்கியம். நான் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்து பற்றாக்குறை இருக்குண்ணு ஒரு ஆய்வு பண்ணேன்அதுல அரசு பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்குறது தெரிய வந்துச்சு. ஸோ அவங்களுக்கு இரும்புச்சத்து கொடுக்க சம்பந்தப்பட்டவங்க கிட்ட பேசிருந்தேன். அதுக்கு அரசும் ஒத்துழைப்பு தர்றேன்னு சொன்னாங்க. துரதிர்ஷ்டவசமா இந்த கொரோனாவால ஸ்கூல் எல்லாம் மூடிட்டாங்க. சரியானதும் சொன்னதை செய்வாங்கன்னு எதிர்பாக்குறேன். இந்த நேரத்துல சிறு விவசாயிகளும், மீனவர்களும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க. குறிப்பா சிறு விவசாயிகள் அவங்களோட பொருட்களை விற்க முடியல. மீனவர்களால கடலுக்கு போக முடில. அதனால அரசு ஒரு குழு அமைச்சு, அவங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு தரணும். அதோட துப்புறவு தொழிலாளர்கள் அவங்க உயிர பணயம் வச்சு, நம்மளுக்காக வேலை செய்றாங்க. அதனால அவங்களுக்கும் அரசாங்கம் உதவி செய்யணும்.

Divya Sathyaraj Exclusive Interview
திவ்யா சத்யராஜ்

பொதுமக்களுக்கு ஒரு முக்கிய விஷயம். தொடர்ந்து கொரோனா பத்தின செய்திகளை பாத்துட்டே இருக்காதீங்க. இது மனரீதியா நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். நமக்கும் இருக்குமோங்கற பயம் தானாவே வந்துடும். அதனால் ஒருநாளைக்கு ஒருமுறை மட்டும் இந்த செய்தியை தெரிஞ்சுக்கிட்டு, உங்களோட தனிப்பட்ட முன்னேற்றத்துல கவனம் செலுத்துங்க.

அப்புறம் இன்னொரு விஷயம், எப்படி ஒரு தோல் நிபுணர் தான், அது சார்ந்த விஷயங்கள பத்தி பேசணுமோ, ஒரு இ.என்.டி நிபுணரால தான், காது, மூக்கு, தொண்டை பத்தின பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியுமோ, ஒரு மகப்பேறு மருத்துவரால தான் மாதவிடாய் பத்தி பேச முடியுமோ அந்த மாதிரி, அதுக்கான தகுதி கொண்டவங்க தான் ஃபிட்னெஸ் அண்ட் டயட் பத்தி பேச முடியும். பட் இந்த நேரத்துல எல்லாருமே இம்யூனிட்டி பத்தி பேசுறாங்க. அத சாப்பிடுங்க, இத சாப்பிடுங்கன்னு சொல்றாங்க. குறிப்பா, சில பிரபலங்கள் அவங்களோட யூ-ட்யூப் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கங்கள்ல ஒவ்வொரு ஐடியாவா சொல்றாங்க. லட்சக் கணக்கான ஃபாலோயர்ஸ் வச்சிருக்க இவங்க கொஞ்சம் பொறுப்போட நடந்துக்கணும். சரியான ஃபிட்னெஸ் பயிற்சியாளர் அல்லது நியூட்ரிஷியன் மேற்பார்வை இல்லாம அவங்க சொல்றத பொதுமக்கள் ஃபாலோ பண்ணினா, உள்காயம் அல்லது உடலமைப்பில் வித்தியாசமோ வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு. ஒரு விஷயம் ஒருத்தருக்கு ஒர்க் அவுட் ஆச்சுன்னா, அது எல்லாருக்கும் வேலை செய்யும்ங்கறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்ல. அதனால உடல் எடையை கட்டுக்கோப்பா வச்சிக்கணும், சத்தான சாப்பாடு சாப்பிடணும்ன்னு நினைக்கிறவங்க, தயவு செஞ்சு தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் கிட்ட ஆலோசனை பெறனும்ங்கறது என்னோட தாழ்மையான வேண்டுகோள்.

எளிமையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? 

நம்ம உடம்புலயே நோயெதிர்ப்பு சக்தி இருக்கும். அத இன்னும் பலப்படுத்துற தன்மை இந்திய சமையல்ல உபயோகப்படுத்துற மஞ்சள், இஞ்சி, பூண்டு, பட்டைபொடில நிறைய இருக்கு. அதனால் இந்த நேரத்துல வழக்கமா யூஸ் பண்றத விட இந்த பொருட்கள கொஞ்சம் அதிகமா உணவுல சேத்துக்கணும்.

விட்டமின்களை பொறுத்தவரைக்கும் ஏ, பி, சி, டி, இ, கே இதெல்லாம் கலந்த உணவுகளை சாப்பிடணும். சப்ளிமெண்ட்ஸ் எடுக்குறதா இருந்தா உங்க மருத்துவரோட ஆலோசனையோட எடுத்துக்கோங்க. கர்ப்பிணிகள் மகப்பேறு மருத்துவரோட ஆலோசனையோட ஃபோலிக் ஆசிட் கலந்த உணவுகளை சாப்பிடணும். சைவம் சாப்பிடற கர்ப்பிணிகள் கட்டாயம் புரோட்டீன் நிறைஞ்ச உணவுகள்ல கவனம் செலுத்தனும்.

குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து முக்கியம். கால்சியம் பால்லயும், இரும்புச்சத்து ராகிலயும் நிறைய இருக்கு. அதனால குழந்தைகளுக்கு ராகி கஞ்சி (பாலும் சேர்த்துக் கொள்ளலாம்) நிறைய கொடுக்கலாம். முதியவர்களுக்கு எலும்பு எல்லாம் தேஞ்சி போயிருக்கும் அதனால அவங்களுக்கும் கால்சியம் ரொம்ப முக்கியம்.

இந்த நேரத்தில் வெளியில் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்கவும். முடிந்தளவு வீட்டிலேயே சமைத்து சாப்பிடவும்.

அரசியலுக்கு வரப்போற அறிகுறி தெரியுதே..?

Divya Sathyaraj
திவ்யா சத்யராஜ்

கண்டிப்பா… அதுவும் சீக்கிரமே. அதுக்கு முன்னாடி அரசியல் அல்லாத இயக்கம் ஒண்ண ஆரம்பிக்கிற முயற்சில இப்போ இருக்கேன். வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கவங்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் கொடுக்குறது தான் அதோட நோக்கம். இந்த கொரோனா நேரத்துல மட்டுமில்லாம, தொடர்ந்து இந்த நலப்பணி நடைபெறும். இது என்னோட கனவுன்னே சொல்லலாம். அதுக்கு இது தான் சரியான நேரம்ன்னு நினைக்குறேன்.

எங்க வீட்ல ஸ்போர்ட்ஸ் பத்தி பெருசா பேச மாட்டோம். உணவு, சினிமா, அரசியல் தான் எங்களோட பேசு பொருளா இருக்கும். அரசியல் பத்தி நிறைய படிக்கிறதோட, களப்பணியும் செஞ்சுட்டு இருக்கேன். பொதுவா பிரபலங்களோட வாரிசுன்னாலே எல்லாரும் ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’னு நினைச்சுக்குறாங்க. வசதியா வாழ்ந்த இவங்களால அரசியலுக்கு வந்தா உழைக்க முடியாதுன்னு யோசிக்கிறாங்க. ஆனா அது உண்மையில்ல. நான் ரொம்ப சின்ன வயசுலயே சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்,பொருளாதார ரீதியா யாரையும் சார்ந்திருக்கல.

பிடித்த அரசியல் தலைவர்?

இப்போ இருக்கவங்கள்ல நல்லக்கண்ணு ஐயாவ ரொம்ப பிடிக்கும். தன்னலமற்ற தலைவர் அவர். நானும் கம்யூனிச சிந்தனை கொண்டவள். பெரியாரிஸ்ட் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு தந்தை பெரியாரை ரொம்ப பிடிக்கும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் பிடிக்கும். சர்வதேச அரசியலில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா, நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆடனும் என்னோட ஃபேவரிட்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Divya sathyaraj nutritionist political entry immunity for coronavirus

Next Story
சிவகார்த்திகேயனுடன் டான்ஸில் கலக்கியவர்… விஜய் டிவி ஐஸ்வர்யாவா இது?vijay tv aishwarya prabhakar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express