Advertisment

‘ஆயில் பாத்’தும் அறிவியல்தாங்க..! இயற்கை மருத்துவர் ஒய்.தீபா ‘தீபாவளி’ ஸ்பெஷல் தகவல்கள்

Traditional Deepavali: ‘செரடோனின்’ ஹார்மோன் நமக்கு ஈஸியா கிடைக்கும். இது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்! 

author-image
shalini chandrasekar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Deepavali Oil Bath, diwali celebrations 2019

Deepavali Oil Bath

Diwali 2019: தீபாவளி என்றதுமே புதுத்துணியும், பலகாரமும், பட்டாசும் தான் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகை குறித்து புராணங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான மக்கள், நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள் தீபாவளி என்பதை தான் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இன்னொரு புறம் யோசித்தால், தீபாவளிக்கும் அன்று நாம் கடைபிடிக்கும் சில வழிமுறைகளுக்கும் அறிவியல் ரீதியான தொடர்பிருப்பது தெரிந்தது. இந்த சந்தேகத்தைத் தீர்க்க, இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபாவை தொடர்புக் கொண்டோம்...

Advertisment

ஸ்ட்ரெஸ் பஸ்டர்

’முதல்ல தீபாவளி ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்’ எனப் பேசத் தொடங்கினார் தீபா. ”தீபாவளி வர்ற ஐப்பசி மாசம் எப்போவுமே மழையடிக்கும். சாதாரண புல்லுல இருந்து மனிதர்கள் வரைக்கும் எனர்ஜியா இருக்க, சூரிய ஒளி அவசியம். ஆனா, ஐப்பசில அது கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால டல்லா இருப்போம். எப்போவும் மாதிரி எனெர்ஜியா இருக்க முடியாது. விடாம பெய்ற மழைனால, உடலும், மனமும் சோர்வடைஞ்சிருக்கும். ஸோ, இதுல இருந்து வெளில வரணும்ன்னா, ஒரு கொண்டாட்டம் அவசியம். அது தான் தீபாவளி.

சும்மாவே புதுத்துணி போட்டா எல்லாரும் குஷியாகிடுவாங்க. புதுத்துணி, பட்டாசு, பலகாரம்ன்னு பிடிச்சதெல்லாம் கிடைக்கும் போது மனசு லேசாகி, பாஸிட்டிவிட்டி படரும். தீபாவளில விளக்கு முக்கியத்துவம் பெருது. காரணம், வெளிச்சம்ங்கறது எப்போதுமே எனர்ஜிக்கான குறியீடு. பண்டிகைக்கு சொந்த பந்தங்கள்லாம் வந்திருக்கும் போது, விளக்கேத்தி, ஒண்ணா உக்காந்து சாப்பிட்டு, பழைய கதைகளை பேசி சிரிக்கும் போது, தானாகவே பாஸிட்டிவ் வைப்ரேஷன் ஏற்படும். ஸோ, சைக்கலாஜிக்கலா தீபாவளியும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர்!

Diwali Oil Bath, Deepavali 2019 இயற்கை நல மருத்துவர் ஒய்.தீபா

எண்ணெய் குளியலும் இயற்கை மருத்துவமும்

சரி இப்போ தீபாவளிக்கும் அறிவியலுக்கும், மருத்துவத்துக்கும் உள்ள தொடர்புகளை சொல்றேன். தீபாவளிக்கு எண்ணெய் தேச்சு குளிக்கிறது நம்ம ஊர்ல பாரம்பரியமா பாக்கப்படுது. உண்மையிலேயே நம்ம உடம்புக்கு எண்ணெய் குளியல் ரொம்ப நல்லது. இதை இயற்கை நல மருத்துவத்துல ‘அப்யகாசனா’ன்னு சொல்வோம். உடல் சூடு, உடல் வலி, தசை வலி, சோர்வு போன்ற பல விஷயங்களுக்கு உடனடி நிவாரணி தான் இந்த எண்ணெய் குளியல். உச்சந் தலையில இருந்து உள்ளங்கால் வரைக்கும் எண்ணெய் தேச்சுட்டு, கொஞ்ச நேரம் சூரிய ஒளில நின்னுட்டு வெந்நீர்ல குளிக்கிறது ரொம்ப நல்லது. இந்த எண்ணெய் குளியல் இயற்கை மருத்துவத்துல ரொம்ப முக்கியம்.

தீபாவளி வர்ற ஐப்பசி மாசத்துக்கு முந்தைய மாசம் புரட்டாசி. அப்போ அசைவ உணவுகளை ஏன் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா? புரட்டாசி, ஐப்பசி-ல காலநிலை மாறி, பெரும்பாலும் டல்லா இருக்கும். சரியான சூரிய ஒளி இல்லாததால, ஹெவியான உணவு சாப்பிடும் போது நமக்கு ஜீரண பிரச்னைகள் ஏற்படும். பழம், காய்கறிகளை வருஷத்துல ஒரு மாசமாச்சும் நிறைய சாப்பிடட்டும்ன்னு தான் புரட்டாசில அசைவம் வேண்டாம்ன்னு சொல்றாங்க. இந்த காலநிலை மாற்றத்தால நமக்கு நோயெதிர்ப்பு சக்தியும் குறைஞ்சிடும். அதனால தான் தீபாவளிக்கு எண்ணெய் தேச்சு குளிச்சு நோன்பு இருப்பாங்க.

உடற்கழிவை வெளியேற்றும் நோன்பு

சாப்பிடாம வெறும் வயித்துல நோன்பு இருக்கக் கூடாது. நிறைய பழம், பழச்சாறு, காய்கறிகள்ன்னு லைட்டான உணவுகளை சாப்பிடணும். இதுனால நம்ம உடம்புல இருக்க கழிவுகள் வெளியேறி, உடல் புத்துணர்வு பெறும். அதோட நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நம்மள்ல நிறைய பேருக்கு பித்த உடம்பு இருக்கும். உணவு, தூக்கம், வேலைப்பளு போன்ற காரணங்களால உடல் சூடு அதிகமாகியிருக்கும். உடம்புல சூடு ஏற ஆரம்பிச்சிட்டாலே பிரச்னையும் ஆரம்பம்ங்கறத மட்டும் மனசுல வச்சிக்கோங்க. காரணம், சூட்டு உடம்பு இருக்கவங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தியே அதிகரிக்காது. பொதுவா வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேச்சு குளிக்கிறது ரொம்ப நல்லது. அதை கடைப்பிடிக்க முடியாதவங்க, குறைஞ்சபட்சம், தீபாவளிக்காவது எண்ணெய் தேச்சு குளிங்கன்னு, சொல்லாம சொல்றது தான் தீபாவளி.

மகிழ்ச்சி ஹார்மோன்

இந்த எண்ணெய் குளியல பொறுத்தவரைக்கும், குளிர்ச்சியான உடல் கொண்டவங்க, இது நமக்கு தேவையில்லைன்னு நினைப்பாங்க. ஆனா எல்லாருமே எண்ணெய் தேச்சு குளிக்கலாம். வீசிங் இருக்குறவங்க உச்சத்தலை, உள்ளங்கால், உள்ளங்கை, தொப்புள் ஆகிய இடங்கள்ல சில சொட்டு நல்லெண்ணை அப்ளை பண்ணிக்கோங்க. ஆனா, எண்ணெய் தேச்சாலே எனக்கு சளி பிடிச்சிடும் என்பது எல்லாம் வீண் கற்பனை. முக்கியமா எண்ணெய் தேச்சிட்டு, வெயில்ல நிக்கும் போது சூரியன்ல இருக்க, ‘செரடோனின்’ ஹார்மோன் நமக்கு ஈஸியா கிடைக்கும். இது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்! எப்போதெல்லாம் நீங்க மகிழ்ச்சியா இருக்கீங்களோ அப்போல்லாம் இந்த ஹார்மோன் சுரக்கும். பதற்றத்தை தணித்து, மன அமைதிக்கு வழிவகுக்கும்.

இயற்கை மருத்துவத்தின் படி, எண்ணெய் தேச்சு குளிச்சிட்டு, ஹெவியா எதையும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டா ஜீரணக்கோளாறு வரும். ஆனா, தீபாவளியையும், அசைவத்தையும் பிரிக்க முடியாத காரணத்துனால, குளிச்சு முடிச்சதும் துளசி தீர்த்தம் குடிக்கிறது ரொம்ப நல்லது. நாம சாப்பிட போற உணவுகள் சீக்கிரம் ஜீரணமாக இது ரொம்ப முக்கியம். தீபாவளி லேகியம் சாப்பிடாதவங்க நிச்சயம், இந்த தீர்த்தத்தைக் குடிக்கலாம். மழைக்காலம்ங்கறதுனால நீர்தொற்று அதிகமா இருக்கும். ஸோ, என்ன பலகாரமா இருந்தாலும் வீட்ல செஞ்சு சாப்பிடுங்க. குறிப்பா தீபாவளிக்கு செய்ற அதிரசம் வெல்லப் பாகுல செய்வோம். வெல்லத்துல நிறைய இரும்புசத்து இருக்கு. டிரெண்டியான மத்த இனிப்புகளை விட அதிரசம் ரொம்ப நல்லது. அதனால தீபாவளிக்கு இதையெல்லாம் மனசுல வச்சிக்கோங்க”

என மருத்துவர் தீபா சொல்லி முடித்த போது, நல்ல நல்லெண்ணெய் எங்கே கிடைக்கும் என்ற அடுத்த தேடலை தொடங்கினோம் நாம்..!

Diwali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment