விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தவறாமல் பார்ப்பவர்களுக்கு டிஜே பிளாக் பற்றி தெரியாமல் இருக்காது. என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும், யார் நடுவராக, தொகுப்பாளராக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக டிஜே பிளாக் இருப்பார்.
வியாசர்பாடி கன்னிகாபுரம் தான் இவர் ஊர். படித்தது எல்லாம் அரசு பள்ளியில். அரசு மாணவர்களுக்கு கொடுத்த இலவச லேப்டாப் தான் சுதன் வாழ்க்கையை மாற்றியது. அப்போது நண்பர்களிடம் கேம்ஸ், மூவி, சாங்ஸ் என கேட்டு வாங்கி லேட்பாட்டில் ஏற்றி உள்ளார். அதில் ஒரு கேம் உடன் தற்செயலாக டிஜே சாஃப்ட்வேரும் இருந்துள்ளது. அது என்ன என்று சுதன் ஆராயும் போதுதான், அவரது நண்பர்கள் இதை ஏன் நீ ஒரு வேலையாகவே செய்யக்கூடாது என்று ஆலோசனை சொல்ல சுதனும் சுயமாகவே அதை கற்க ஆரம்பித்து, அதில் மூழ்கிவிட்டார்.
பிறகு உறவினர்கள், நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகள், சின்ன சின்ன விசேஷங்கள் என பிளே பண்ண ஆரம்பித்துள்ளார். டிஜே மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அதுவரை படித்து வந்த பொறியியல் படிப்பை பாதியிலே விட்டு, விஸ்காம் படிப்பில் சேர்ந்தார். தனது விடாமுயற்சி, அயாராத உழைப்பு மூலம் விஜய் டிவி வரை சென்ற சுதன், இன்று தமிழ்நாட்டின் பிரபல டிஜேவாகி இருக்கிறார்.
இப்போது சுதன் சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அப்போது எடுத்த வீடியோவை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த சுதன் அதில், “இது ஒரு கனவு நனவான தருணம். ஓலா காரில் இருந்து சொந்த கார் வரை. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஆசீர்வாதங்களுடன் இந்த மாற்றத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் எனது சிறந்த நபர்களுடன் இந்த சிறந்த தருணத்தை பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
விஜய் டெலிவிஷன் குடும்பத்திற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி மற்றும் எனக்கு வழிகாட்டியாக இருந்த டிஜே கெளதம் அண்ணாவுக்கு நன்றி” என்று உணர்ச்சிப்பொங்க பதிவிட்டுள்ளார். டிஜே பிளாக் புது கார் வாங்கும் போது விஜே பிரியங்கா, மாகாபா, சாம் விஷால், மீடியா மசன்ஸ் நிறுவனர் ரவுஃபா உள்ளிட்ட பலரும் அவருடன் இருந்தனர்.
புது கார் வாங்கிய டிஜே பிளாக்குக்கு இப்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“