உடல் எடையைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ பெரும்பாலானோர் நம்பியிருக்கும் ஒரு இடம் ஜிம். வாக்கிங், ஜாகிங், யோகா என எவ்வளவோ உடற்பயிற்சிகள் நம் வீட்டிலேயே செய்ய முடியும் என்றாலும், அதையெல்லாம் நாம் தினமும் செய்ய மாட்டோம். ஏனென்றால், அவற்றை செய்யவில்லை என்றால், யாரும் நம்மை எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஜிம்முக்கு பணம் செலுத்தி செல்லும்போது, “ஐயோ, நம் பணம் வீணாகிறதே”, என்ற நினைப்பிலாவது தினமும் செல்வோம். சரி, ஜிம்மில் என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதில் சிலவற்றை காண்போம்.
செய்யக்கூடாதவை:
1. முதல் விஷயம், ஜிம்மில் உங்களுடைய செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள். முடிந்தவரை, செல்ஃபோனை ஜிம்முக்கு எடுத்து செல்வதை தவிர்த்திடுங்கள். முழு நேரமும் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலேயே கவனம் செலுத்துங்கள்.
2. ஜிம்மில் பெரும்பாலும் நம் நேரத்தை வீணடிப்பது புறம் பேசித்தான். மற்ற ஜிம்மெட்டுகளுடன் சேர்ந்து மற்றவர்களின் கதைகளை பேசினால் நேரம் விரயமாகும். அப்புறம் ‘வொர்க் அவுட்’ செய்ய முடியாமல் போய்விடும்.
3. நீங்கள் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை முன்னரே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த குறித்த நேரத்திற்கு சரியாக ஜிம்முக்கு சென்றுவிடுங்கள். நீங்கள் தாமதமாக சென்றால், பாதி பயிற்சிகள் முடிந்துவிடும். அதனால், மொத்த பயிற்சியுகளுக்கும் இடையூறு ஏற்படலாம்.
4. தினமும் உங்கள் உடல் எடையை செக் செய்யாதீர்கள். உங்களுக்குள் ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, குறிப்பிட்ட காலை இடைவெளியில் எடையை சோதனை செய்து பாருங்கள்.
5. ஜிம்முக்கு புதிதாக செல்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். சிறிய பயிற்சிகளை ஒரு வாரம் முதல் 10 நாட்கள் மேற்கொண்ட பின் கடுமையான உடற்பயிற்சிகளுக்கு செல்லலாம்.
செய்ய வேண்டியவை:
1. உங்களுக்கு வலிமையை தரும் உணவுப்பொருட்களை ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு சாப்பிடுங்கள். புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலான பழச்சாறு, உலர் பழங்கள், க்ரீன் டீ, லெமன் டீ ஆகியவற்றை உட்கொள்ளலாம். சாப்பிடாமல் சென்றால் கொஞ்ச நேரத்திலேயே உடல் சோர்வாகிவிடும்.
2. உங்களுக்கு தேவையான தண்ணீரை வீட்டிலிருந்தே எடுத்து செல்லுங்கள். வெட்டிய எலுமிச்சை பழம், வெள்ளரி துண்டு, புதினா ஆகியவற்றை கலந்த தண்ணீர் சிறந்த நச்சுநீக்கியாக செயல்படுகிறது. அதனை ஒருநாள் முழுவதும் குடிக்க தேவையான அளவு தயாரித்து, உபயோகிக்க பழகுங்கள்.
3. உடல் எடை குறைய வேண்டும் என நினைப்பவர்கள், ட்ரெட் மில் உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் உடற்பயிற்சி செய்வதைக் காட்டிலும், அவற்றை தவிர்த்துவிட்டு நீங்களாகவே வயிறு, தொடை பகுதிகளுக்கென உள்ள ‘ஆப்ஸ்’ பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
4. உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் உடைகளை அணிந்துகொண்டு ஜிம்முக்கு செல்லுங்கள். மிகவும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம்.
5. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால், சாப்பிட்ட பின் 3 மணிநேரம் கழித்தபின்பே உடற்பயிற்சி செய்ய வேண்டு. இதனை மனதில் வைத்துக்கொண்டு ஜிம்முக்கு செல்லும் நேரத்தை தீர்மானியுங்கள்.