கடந்த 50 ஆண்டுகளாக பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பூமி தினத்தில், சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபடுவர். அவர்கள், கோவிட் – 19 தொற்றுநோயால், தற்போது தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.
தியா மிர்சா, கட்டுரையாளர்.
யாம் ரக்சாந்தி அஸ்வப்பனா விஷ்வ தனீம் தேவா பூமிம் பிரித்விம் அப்ரமாடாம்நான் பூமியின் மேல் இருந்து தியானிக்கிறேன். அது உறக்கமின்றி, விழிப்புணர்வுடன் தேவர்களால் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில் அவளே எல்லாவற்றையும் அருள்பவள். அனைத்து வகையான உயிரினங்களும் பூமித்தாயை நம்பியே வாழ்கின்றன.
(பூம சுக்தா வசனம் : 7 அதர்வன வேதத்தில் இருந்து)
இனிய பூமி தின வாழ்த்துக்கள்!
ஆமாம், பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு காரணமான ஒரு கோளில் பல தலைமுறைகளாக நாம் வாழ்ந்து வருகிறோம். ஆகவே நம்மை வாழ வைக்கும் இந்த பூமித்தாய்க்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இந்த வெளிர் நீல புள்ளி, உயிர்கோளம், காடுகள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், பாலைவனங்கள், மலைகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பலவிதமான, அனைத்தையும் எப்போதும் வழங்கிக்கொண்டும், அனைத்து உயிர்களையும் இணைக்கும், இந்த பூமி மட்டுமே உண்மையில் நம் வீடு.
1970ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 22ம்தேதி பூமி தின இயக்கத்தை அமெரிக்காவில் சுற்றுச்சூழல் ஆர்வலர் டென்னிஸ் ஹாயேஸ் என்பவர் துவக்கினார். இந்தாண்டு அதன் 50வது பொன்விழா ஆண்டாகும். சுற்றுச்சூழல் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராக உலகளவில் போராடும் ஒரு இயக்கமாகும்.
ஆச்சர்யமான வெற்றி பெற்ற இயக்கம் இருந்தாலும், சுற்றுச்சூழல் வளர்ச்சியில் பல தசாப்தங்களை கடந்தாலும், கொடிய, பல்வேறு வகையான சுற்றுச்சூழல் சவால்களை உலகளவில் சந்தித்து வருகிறோம். பல்லுயிர் வளம் முதல், காலநிலை மாற்றம், நெகிழி ஏற்படுத்தும் மாசு போன்ற அனைத்துமே ஏதாவது செய்து அவற்றை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக ஹாயேஸ் கூறுகிறார்.
கடந்த 50 ஆண்டுகளாக பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பூமி தினத்தில், சுற்றுச்சூழலை காக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபடுவர். அவர்கள், கோவிட் – 19 தொற்றுநோயால், தற்போது தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர். மற்றவர்கள் சுற்றுச்சூழல் போராளிகளின் அவசர எச்சரிக்கைகளை கண்டுகொள்ள மாட்டார்கள். அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, தொழில்சாலைகள், நிறுவனங்கள் என்று ஒன்றும் நகராமல், நம் அன்றாட வாழ்வு அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காற்று சுத்தமாக உள்ளது, தெருக்கள் அமைதியாக உள்ளன, பறவைகளின் மொழிகள் மனிதர்களுக்கு புரிகிறது மற்றும் இந்த புதிய வாழ்க்கை முறையை வாழும் வழிமுறைகளை மக்கள் கண்டுபிடித்து வருகிறார்கள். தற்போது ஒரு சிலர் மட்டும் தனியாகவே உள்ளனர். சிலர் வாழ்வின் எளிய விஷயங்கள் எவ்வளவு மகிழ்ச்சி கொடுக்கின்றன என்பதை உணர்கின்றனர். முன்பு எப்போதையும்விட தாங்களே பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக பல லட்சம் மக்கள் எண்ணுகின்றனர். விலங்குகளை தனிமையில் கைதிகளைப்போல் அடைத்து வைத்திருப்பது எவ்வளவு வலி மிகுந்தது என்று சிலர் உணருகின்றனர்.
மனிதர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்றதொரு நிலையை நம் வாழ்நாளில் சந்திக்கிறோம் என்பதை நம்ப முடியாதவர்களாக இருக்கின்றனர். இந்த சமூகத்திற்கும், அரசிற்கும் அறிவியலாளர்கள் பல ஆண்டுகளாக, பூமியில் ஏற்பட்டுள்ள 75 சதவீதத்திற்கும் அதிமான மாற்றங்கள், இதுபோன்தொரு பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கின்றனர். தற்போது இந்த உலக மக்கள் அனைவரும் அனுபவிக்கும் நிலை, முன்னரே அறிவியலாளர்களால், கணிக்கப்பட்டது. ஆனால், மக்கள் அதை காதுகொடுத்து கேட்க மறுத்துவிட்டனர். இன்று அந்த தவறுகளுக்கான விலையை நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
நமது அலட்சியங்களால் இயற்கை பொங்கியெழுந்து, காட்டுத்தீ, அடிக்கடி உருகிவரும் பனிப்பாறைகள், வறட்சி, வெள்ளம், தண்ணீர், காற்று, உணவு மாசு ஆகியவற்றை ஏற்படுத்தும் உச்சகட்ட வானிலை மாற்றங்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அடிப்படையில், நாம் வாழ்க்கையை உறுதியில்லாததாக்கி, பல லட்சம் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையை அழிக்கிறோம். தற்போதைக்கு, ஏதுமற்ற ஏழைகளே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களும், நாட்டின் தலைவர்களும் பாதிக்கப்பட்டாலும் காப்பாற்றப்படுகிறார்கள். மக்கள் வாழ்வில் ஏற்படக்கூடிய இடையூறுகளே, இந்த பேரழிவைவிட அதிகமாக உள்ளது.
உண்மையில் நாம் செய்துகொண்டிருக்கும் தொழிலுக்கு திரும்பிச்செல்ல முடியாது. இல்லாவிட்டால், பெரியதோ, சிறியதோ திரும்பிச்செல்வதற்கு தொழிலே இருக்காது. இந்த எளிய உண்மையைதான் இந்த உலகளவிலான ஊரடங்கு நமக்கு கோடிட்டு காட்டுகிறது. லண்டன் பொருளாதார பள்ளியைச்சேர்ந்த லார்ட் நிக்கோலஸ் ஸ்டெர்ன், பொருளாதாரம் முழுவதும் சுற்றுசூழலின் துணையோடு தான் உள்ளது என்பதை நமக்கு அடிக்கடி நினைவுபடுத்துவார்.
கொரோனா வைரசுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை நான் உங்களுக்கு தற்போது கூறுகிறேன்.
அறிவியலாளர்களைப் பொறுத்தவரையில், 75 சதவீதம் உள்ள தொற்றுநோய்கள் அனைத்தும் விலங்கு வழி ஏற்படும் தொற்றுகளாகும். நோய்கிருமி விலங்குகளில் உருவாகி, அவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. சுற்றச்சூழல் மாற்றங்களினாலேயே விலங்கு வழி தொற்றுநோய்கள் தோன்றுகின்றன. மனிதனின் செயல்பாடுகளால், சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எளிமையாக கூறவேண்டுமெனில், மனிதனே அதை தூண்டுகிறான். விலங்குகளின் வாழ்விடங்களை அழிப்பது மற்றும் காடுகளை அழிப்பது, சுரங்கங்கள் அமைப்பது, தொழிற்சாலைகள் அமைப்பது போன்றவை சுற்றுச்சூழல் மாற்றங்களை ஏற்படுத்தி, அவை விலங்கினங்களில் அழிவை ஏற்படுத்தி, பல்லுயிர் சூழலை குறைக்கிறது. இதனால் புதிய சுற்றுச்சூழல் உருவாகி, அது பூமிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய வகையிலான நோய் தொற்றுகள் தோன்ற காரணமாகின்றன. இதனால், லட்சக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்படுகின்றனர். பல லட்சம் பேர்களின் இறப்புக்கு இது காரணமாகிறது.
68 சதவீதம் பேர் (அதாவது மூன்றில் இரண்டு பங்கு) 2030ம் ஆண்டுக்குள் நகரில் வசிப்பார்கள் என்று திட்டமிடப்பட்டுள்ளது. எனில், நாம் பூமியை எந்த அளவிற்கு மாற்றியிருக்கிறோம் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள். நம்மிடம் அறிவியல் உள்ளது, தீர்வுகள் உள்ளது, தொழில்நுட்பம் உள்ளது, உலகில் சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய திறன் உள்ளது. அதற்கு நாம், இயற்கையையும், மனிதனையும் சமமாக எடுத்துச்செல்லக்கூடிய வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும். நம்மைப்போன்ற வளரும் நாடுகள், சுகாதாரம், உணவு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை தனது 1.3(பூமியிலேயே மக்கள்தொகை அதிகமுள்ள இரண்டாவது நாடு) பில்லியன் மக்களுக்கும் வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு நமது இயற்கை வளங்கள், விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் காடுகள் ஆகியவற்றை மேலும் அழிவதற்கு அனுமதி அளிக்கமாட்டேன் என்ற மன உறுதியை பொதுமக்களும், நமது அரசியல் அமைப்பும் ஏற்க வேண்டும். மனிதனின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி சுற்றுச்சூழல் அமைப்போடு நாம் ஒன்றிணைந்து வாழும்போதுதான் சாத்தியமாகிறது. எப்போதும்போல் வணிகம் என்பது தேர்வு கிடையாது. நமது உயிர்க்கோளத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை கொண்டுதான், அனைத்து நாடுகள் மற்றும் மக்களின் எதிர்காலம் இருக்கப்போகிறது.
கண்ணுக்குத் தெரியாத கிருமி, இந்த பூமியை சமன் செய்யும் கருவியாகி, இயற்கையைவிட பெரியது இந்த உலகில் ஒன்றுமில்லை என நிரூபித்திருக்கிறது. நாம் நமது பல்லுயிர் கோளத்தை பாதுகாக்காமல் விட்டாலோ, மனிதனின் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பை புரிந்துகொள்ளாமல் விட்டாலோ, நாம் அழிந்துவிடுவோம் என்று இதன்மூலம் நமக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக நமக்கு இன்னும் நேரம் உள்ளது. இது பிழைப்பதற்கான புரட்சி என்ற புதிய துவக்கத்திற்கான காரணமாக இருந்து, இயற்கையின் அடிப்படையிலான தீர்வுகளை கண்டுபிடிக்க திறன் உள்ளது பல மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதனுக்கு உள்ள நன்மையாகும்.
2020ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பூமி தினத்தின் கருப்பொருள் காலநிலை நடவடிக்கை என்பதாகும். 2016ம் ஆண்டு பூமி தினத்தில் பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது சுவாரஸ்யமான ஒன்று. அதன் தீர்மானங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டுவிட்டன. பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள், இரண்டும் நமக்கும் நான்காண்டுகளுக்கு முன்னரே வழிகாட்டியாக இருந்தன. உயிர்கோளம் அனுப்பிய செய்தியை நாம் தவிர்த்துவிட்டதை தற்போது கோவிட் – 19 நமக்கு நினைவுபடுத்துகிறது.
நான் ஒரு உண்மையான கூற்றுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். இயற்கை தானாவே தன்னை சரிசெய்துகொள்கிறது என்பதே அந்த கூற்றாகும். கடந்த இரண்டு மாதங்களாக வியக்கும் வகையில் இங்கு நடந்தவற்றை நாம் பார்த்தோம். பல லட்சம் பேருக்கு, கொடுப்பதோ அல்லது எடுத்துச்செல்வதோ இரண்டில் இயற்கையின் சக்தி என்ன என்பது நினைவூட்டப்பட்டுள்ளது. இந்த தொற்று நமக்கு, நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவும். அனைத்து உயிரினங்களின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற நம்பிக்கையை மனிதர்களிடத்தில் விதைக்கும் மற்றும் அதன் மூலம் நாம் நல்ல விஷயங்களை மட்டுமே செய்ய முயல்வோம் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்த காலநிலை நடவடிக்கை என்ற கருப்பொருள், தேர்வு குறைவாக உள்ளதால் மட்டும் ஏற்படாது. இந்த அழகிய நீல நிற கோளில் உள்ள ஒவ்வொரு உயிரும், ஒன்றையொன்று சார்ந்தது என்ற புரிதல் மற்றும் பச்சாதபம் என்பதன் அடிப்படையிலே அது ஏற்படும். அனைவரும் நல்லவை மட்டுமே நடக்கட்டும் என்ற பேராசை கொள்வோம்.
இக்கட்டுரையை எழுதிய தியா மிர்சா, திரைக்கலைஞர், தயாரிப்பாளர், ஐநா சுற்றுச்சூழல் திட்ட நல்லெண்ண தூதர், நிலையான வளர்ச்சி இலக்கின் ஐநா செயலாளர்.
தமிழில்: R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.