நாள்தோறும் நாம் செய்யும் பணிகளை விரைவாக முடித்தால் நன்றாக இருக்கும் என எல்லோரும் கருதுவார்கள். அப்படி எளிமையாக்கும் சில வழிகளை இணையதளத்தில் தேடும் பழக்கத்தை சிலர் கடைபிடிப்பார்கள். அதன்படி, சில எளிமையான டிப்ஸை தற்போது பார்க்கலாம்.
வீட்டில் சிறிதான அளவு பூண்டு இருந்தாலே அதனை உரித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். இந்த சூழலில் கிலோ கணக்கில் பூண்டுகள் உரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதனை செய்து முடிப்பதற்கு நீண்ட நேரமாகும். இதனை எப்படி எளிதாக மாற்றலாம் என இதில் பார்க்கலாம்.
முதலில் அடுப்பின் மீது தோசைக் கல்லை வைத்து சூடு படுத்த வேண்டும். தோசைக் கல் சூடானதும் நெருப்பின் அளவை குறைத்து விட்டு, அதன் மீது பூண்டுகளை போட வேண்டும். பூண்டு தோலில் சூடு ஏறும்படி அதனை திருப்பி போட வேண்டும். சுமார் 3 நிமிடங்களில் பூண்டு சூடாகி விடும்.
பின்னர், பூண்டுகளை தனியாக எடுத்து அவற்றின் மீது அரிசி மாவை தூவிக் கொள்ள வேண்டும். இப்போது, அனைத்து பூண்டுகளையும் ஒரு பைக்குள் போட்டு, தரையில் நன்றாக தட்ட வேண்டும். இப்படி செய்தால் பூண்டு தோல் அனைத்தும் உரிந்து விடும்.
இதேபோல், பூ கட்டுவதற்கு எளிமையான முறை உள்ளது. ஒரு ஜல்லி கரண்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கரண்டியின் கைப்பிடி பகுதியில் இருக்கும் துவாரத்தில் நூலைக் கொண்டு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். நூலின் மற்றொரு நுனிப்பகுதியை கரண்டியின் மேற்புறம் இருக்கும் துவாரம் வழியாக கட்டி, மீண்டும் கரண்டியின் நுனிப்பகுதிக்கு கொண்டு வர வேண்டும்.
இப்போது, பூக்களை எடுத்து இறுக்கமாக கட்டிய நூலில் வைத்து கட்ட ஆரம்பிக்கலாம். இப்படி கட்டுவதன் மூலம் பூக்கள் நெருக்கமாக இருக்கும். இதையடுத்து, பூ கட்டிய பின்னர் மீதமிருக்கும் நூலை வெட்டி பூக்களை தனியாக எடுத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“