திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள்: பிரிக்க நினைக்கும் பெற்றோர்கள்

ஒருவர் மீது ஒருவர் காதல் ஏற்படவே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து வீட்டிலிருந்து வெளியேறி கோரமங்கலா எனுமிடத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், மாறுபட்ட பாலின விருப்பங்களை கொண்டவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், காதலுக்காகவும் குரல் கொடுத்து பேரணி, திரையிடல்கள் என நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூரில் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொண்ட 2 பெண்களை பிரிக்க அவர்களது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஓரினச் சேர்க்கையாளர்களான 2 பெண்கள் இணைந்து கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த ஒரு பெண்ணின் பெற்றோர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெங்களூரை சேர்ந்த சஹானா(25), ஷில்பா(21) (பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன) இருவரும் தூரத்து உறவினர்கள். ஷில்பா, பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருக்கிறார். அவரது குடும்பம் கட்டுக்கோப்பானது.

உறவினர்கள் என்பதால் ஷில்பாவும் சஹானாவும் அடிக்கடி சந்தித்து வந்தனர். ஷில்பாவின் குடும்பம் கட்டுப்பாடான குடும்பமாக இருப்பதால், சஹானா ஷில்பாவை நவீன உலகத்துக்கு ஏற்றவாறு மாற்ற முயற்சி எடுத்தார்.

ஷில்பாவை மால்களுக்கு அடிக்கடி அழைத்துச் சென்று மாடர்ன் உடைகள், ஆடம்பரமான பரிசுகள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தார் சஹானா.

இதையடுத்து, இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் காதல் ஏற்படவே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து கடந்த மே மாதம் வீட்டிலிருந்து வெளியேறி கோரமங்கலா எனுமிடத்தில் தனியாக வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.

இருவரும் வீட்டில் இருந்து வெளியேறியதால் ஆரம்பத்தில் இருவரும் காணாமல் போய்விட்டதாக இருவீட்டார் பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் இருவரையும் தேடி கண்டுபிடித்தபோது தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வருவது தெரியவந்தது.

இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் ஆத்திரமடைந்தனர். இரு பெண்கள் திருமணம் செய்து கொள்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், இருவரையும் பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சஹானாவின் பெற்றோர் இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், இரு பெண்களும் ஒருவரையொருவர் பிரிய மறுத்து தங்கள் பெற்றோருடன் செல்ல சம்மதிக்கவில்லை.

ஆனால், இந்தியாவில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளுதல் சட்டத்திற்கு புறம்பானது என்பதால், காவல் நிலையத்தில் அவர்கள் மீது பிரிவு 377-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் பிரிக்க இருவீட்டார் பெற்றோர்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அதனால், இருவருக்கும் கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. காவல் துறையினரும், இரு பெண்களையும் பிரித்து அனுப்புவதில் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close