விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு புதன்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்குகிறது,
Advertisment
விநாயகர்' செல்வம், அறிவியல், அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் கடவுள் என்று அறியப்படுகிறார், அதனால்தான் இந்துக்கள், எந்த முக்கியமான வேலையைத் தொடங்குவதற்கு முன்பும், அவரை நினைவில் வைத்து, அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள்.
விநாயக சதுர்த்தி வரலாறு
சிவன் மற்றும் பார்வதியின் இளைய மகன் விநாயகர். அவரது பிறப்புக்குப் பின்னால் பல்வேறு கதைகள் உள்ளன.
அதில் பிரபலமானது, சிவன் இல்லாத நேரத்தில் அவளைக் காக்க பார்வதியால், விநாயகப் பெருமான் படைக்கப்பட்டார். அவள் குளிக்கும்போது தன் குளியலறை நுழைவு வாயிலை பாதுகாக்கும் பணியை அவனுக்குக் கொடுத்தாள். அப்போது, சிவன் வீடு திரும்பி பார்வதி தேவியை பார்க்க முயன்றார். ஆனால், சிவன் யார் என்று தெரியாத விநாயகர் அவரைத் தடுத்தார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கோபமடைந்த சிவன் விநாயகரின் தலையை துண்டித்தார்.
இதையறிந்த பார்வதி ஆத்திரமடைந்தார்; பிறகு சிவபெருமான், விநாயகரை மீண்டும் உயிர்ப்பிப்பதாக உறுதியளித்தார். தேவர்கள், வடக்கு நோக்கி ஒரு குழந்தையின் தலையைத் தேட அனுப்பப்பட்டனர், ஆனால் அவர்களால் யானையின் தலையை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. சிவன் யானையின் தலையை குழந்தையின் உடலில் பொருத்தினார், இப்படித்தான் விநாயகர் பிறந்தார்.
விநாயகரை வழிபடும் பக்தர்களின் ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து, அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்தாற்போல இருக்க வேண்டும். இந்த இலையில் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்வது சிறப்பு. அதனுடன் எள்ளுருண்டை, பாயசம், வடை உடன் நைவேத்யம் படைக்கலாம். மேலும் பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
இந்த விரதத்தை கடைபிடிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பது நம்பிக்கை.
பிறகு இந்த விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கின்றனர். பாரம்பரியமாக இது, விநாயகர்’ நம் கவலைகள் அனைத்தையும் அகற்றி, அவருடைய ஆசீர்வாதங்களை விட்டுச் செல்வதாகக் கருதப்படுகிறது.
பூஜை நேரங்கள்
த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, ஆகஸ்ட் 31 அன்று காலை 11:05 மணி முதல் மதியம் 01:38 மணி வரை விநாயகர் பூஜை முகூர்த்தம். விநாயக சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
சதுர்த்தி திதி ஆகஸ்ட் 30 ஆம் தேதி, பிற்பகல் 03:33 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 03:22 மணிக்கு முடிவடைகிறது. விநாயகர் தரிசனம் செப்டம்பர் 09, 2022 அன்று நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“