முடி உதிர்வு இன்றைய தலைமுறைக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்காக அறிவியல் முறையிலும் சரி, பாரம்பரிய முறையிலும் சரி மக்கள் தீர்வு தேடிக்கொண்டே தான் இருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் கூந்தலை பராமரிக்க அதிக விலைக் கொடுத்து தயாரிப்புகளை வாங்க எந்த அவசியமும் இல்லை. அதைவிட சிறந்த தீர்வு உங்கள் வீட்டிலேயே இருக்கிறது. இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது. முடி உதிர்வை தடுப்பதோடு முடி வளர்ச்சியையும் தூண்ட உதவக்கூடியது.
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் -2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 200 கிராம்
எப்படி செய்வது?

முதலில் மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனியாக வைக்கவும். அதைப் போல வெந்தயத்தையும் அரைத்து தனியாக வைக்கவும். இப்போது அடுப்பில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் உடன், ஏற்கெனவே அரைத்து வைத்த வெந்தயம், கருஞ்சீரகம் பொடியை சேர்த்து கலக்கவும். இந்த கிண்ணத்தை கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்தில் வைக்கவும், கிண்ணம் தண்ணீரில் மூழ்கி விடமால் பார்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் மிதமாக சூடானதும், அதை தனியாக எடுத்து வைக்கவும்.
தலைக்கு குளிப்பதற்கு ஓரு மணி நேரத்துக்கு முன்பு இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவவும். முடி நன்றாக வளர இதை வாரத்துக்கு ஒருமுறை தவறாமல் செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“