Advertisment

உறவுகளை உணர்த்தும் திருவோணம்

ஆண்டு தோறும் அத்தம் நட்சத்திரம் தொடங்கித் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்கள் மாவேலியை வரவேற்க கேரள மக்கள், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் கண்விழித்துக் காத்திருப்பர்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Onam

Happy Onam 2023

தெருவெல்லாம் பூக்கோலம், வீடெல்லாம் மகிழ்ச்சியின் ஆரவாரம் இதுவே கேரள மாநிலத்தின் இன்றைய அடையாளம். அதுவே திருவோணப் பண்டிகையின் அற்புதம்.

Advertisment

மாவேலி மன்னன் நாடாண்ட காலத்தில் செங்கோலாட்சி தழைத்தோங்கி, மாதம் மும்மாரிப் பொழிந்து, வயல்வெளி செழித்து, வருமானம் பெருகி, மக்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர்.  இதனால் அந்நாட்டில் கொள்வாரும் இலர் கொடுப்பாரும் இலர் என்னும் நிலை நிலவியது.

மட்டுமின்றி மக்களிடையே எவ்வித ஏற்றத்தாழ்வுகளுமின்றி அனைவரும் ஒருதாய் மக்களாய் வாழ்ந்தனர் என்பதை “மாவேலி மன்னன் நாடு வாணிடும்கால் மனுஷரெல்லாம் ஒண்ணுபோலே” என்னும் மலையாளப் பாடல் வரிகளால் உணர முடிகிறது. இதனால் மக்கள் மன்னனைப் போற்றி புகழ்ந்தனர்.

இது மாவேலியின் மனதிற்குள் ஒருவித மமதையை ஏற்படுத்தி, இனி தேவலோகத்தையும் ஆள வேண்டும் எனும் பேராசையை உருவாக்கி, அவரின் அழிவுக்கு வித்திட்டது. 

Happy onam 2023

மாவேலியால் தங்களுக்கு ஆபத்து விளையும் எனக் கருதிய தேவர்கள், அபயம் வேண்டி மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவரும் அண்டி வந்தோருக்கு அடைக்கலம் கொடுப்பது தன் கருமம் எனக் கருதி, வாமன அவதாரம் பூண்டு மண்ணுலகு வந்து மாவேலியிடம், தனக்கு யாகசாலை அமைக்க மூன்றடி மண் மட்டும் வேண்டி நின்றார்.

மூன்றடி மண்ணுக்குள் மர்மம் இருக்கிறது என்ற சூச்சுமத்தை அறியாத மவேலி, எல்லாம் உணர்ந்த தன் குரு சுக்கிராச்சாரியரின் அறிவுரையையும் மீறி, மூன்றடி மண்ணை தாரைவார்த்தார் வாமனனுக்கு. மறுநிமிடம் எல்லாம் மாறிவிட்டது. இரண்டடியில் வானமும் பூமியும் அளந்த வாமனன் மூன்றாவது அடிக்கு கண்சிமிட்டி நிற்க, தலைதாழ்த்தி நின்றார் மாவேலி.

பாதாளம் செல்வது உறுதியென உணர்ந்தவர், வரமொன்று வேண்டினார் மகாவிஷ்ணுவிடம். ‘ஆண்டுக்கொரு முறை நாட்டுக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும், அனுமதி அளித்தருளும்’ என யாசித்து நின்றார் ஆணவம் அடக்கி. ‘அப்படியே ஆகட்டும்’ என்றார் அவரும். அதன் பிறகு ஆண்டு தோறும் அத்தம் நட்சத்திரம் தொடங்கித் திருவோண நட்சத்திரம் வரை பத்து நாள்கள் மாவேலியை வரவேற்க கேரள மக்கள், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் கண்விழித்துக் காத்திருப்பர் என்பது தான் திருவோணப்பண்டிகையின் ஐதீகமாகக் கருதப்படுகிறது.

Thiruvonam story onam

திருவோணப்பண்டிகையின் ஐதீகம் இப்படி ஒருபுறம் இருக்க, இன்றையக் காலகட்டத்தில், கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, உறவுகள் அனைத்தும் உடைந்து சின்னாபின்னமாகியிகும் நிலையில், இந்த திருவோணப் பண்டிகை உறவுகளை இணைக்கும் ஓர் அற்புதமான பண்டிகையாக திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

பொதுவாக கேரள மாநிலத்திலுள்ள மக்கள், பெருவாரியாக வெளிநாடுகளில் சென்று தங்கள் வாழ்வாதரத்தை பெருக்கிக் கொண்டிருப்பது கண்கூடு. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திருவோணப்பண்டிகையை கொண்டாடும் பொழுது அனைத்து மக்களும் எவ்வித சிரமமும் பார்க்காமல் தங்கள் சொந்த இடத்திற்கு வந்து, குடும்பத்துடன் கூடியிருப்பதை, வாழ்க்கையின் பெரும் பேறாகக் கருதுகின்றனர்.

அவர்களின் கொண்டாட்டம், அவரவர் வீட்டோடு மட்டும் நின்று விடாமல், இந்தப் பத்து நாள்களும் பண்ட பலகாரங்களுடன் உறவுகளையும் நாடிச் சென்று, அவர்களையும் உற்சாகப்படுத்தி, சொந்த பந்தங்களைப் பலப்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக்கியுள்ளனர்.

எனவே திருவோணப்பண்டிகையானது, வெறும் ஆட்டம்… பாட்டம்… கொண்டாட்டம்… என்னும் நிலையோடு மட்டும் நின்று விடாமல், சிதைந்து வரும் உறவு முறைகளை மீட்டுருவாக்கம் செய்து, கட்டிக்காக்கும் அற்புதமான உறவுகளின் உற்சாகத் திருவிழாகவும் திகழ்ந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை.

ஆண்டுதோறும் மாவேலியை வரவேற்போம்! மனெல்லாம் மகிழ்ந்திருப்போம்!!  

முனைவர் கமல. செல்வராஜ்.

அருமனை.

அழைக்க: 9443559841

அணுக: drkamalaru@gmail.com

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment