ஹர்மன்பிரீத் கவுர்...27 வயதான பஞ்சாபியை சேர்ந்த இந்த இளம்பெண் பற்றி இன்று நாடே பேசிக் கொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கான ஆட்டம் என்றிருந்த நேரத்தில், பெண்களும் கிரிக்கெட் விளையாடுவதில் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டியவர்கள் வரலாற்றில், நம் நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் நிச்சயம் இடம் உண்டு.
வெறும் வாய் வார்த்தை மட்டுமில்லை ”வீரர்கள் உலககோப்பையை தவறிவிட்டால் வீராங்கனைகள் நாங்கள் அதை தட்டி எடுப்போம்” என்றார்கள். அதற்கான முழு முயற்சியிலும் களம் கண்டார்கள். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் கேப்டன் மிதாலி ராஜூக்கு பிறகு அதிகம் கவனிக்கப்பட்டவர் தான் ஹர்மன்பிரீத் கவுர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டி-20 கேப்டனாக உள்ள ஹர்மன்பிரீத் கவுர்,கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரின் (ஒருநாள்) நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் 171 ரன்களை குவித்தது மட்டுமல்லாமல்,தனது துடிப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை இறுதி போட்டிக்கு வரை எடுத்துச்சென்றார். அன்றைய நாள் அவரின் சூறாவளி ஆட்டத்தை பார்த்து வியந்து பாராட்டாத முன்னாள்,இன்னாள் கிரிக்கெட் வீரர்,வீராங்கனைகளே இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/it-girl-lavanaya.jpg)
கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைப்பெற்ற பெண்கள் கியா சூப்பர் லீக் டி-20 போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அடித்த சிக்சர், மைதானத்தில் இருந்த வேனின் கண்ணாடியை பதம் பார்த்தது. இந்தப் போட்டியில் கவுர் 6 சிக்சர்கள் அடித்தார். அதில் இரண்டு சிக்சர்கள் வரலாற்றில் இடம்பிடித்தன. ஆட்டம் முடிந்ததும் இங்கிலாந்து அணியின் கோட்ச் ஒருவர், கவுரை அழைத்து ”கொஞ்ச நேரத்தில நானே மிரண்டுட்டேன் என்ன ஆட்டம்” என்று பாராட்டினார். இங்கிலாந்தின் தொலைக்காட்சிகளிலும் கவுர் அடித்த சிக்சர் பற்றிய பேச்சு தான்.
பயிற்சி ஆட்டம் தொடங்கி, டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி என தன்னை முழுவதுமாக கிரிக்கெட் உடன் அர்பணித்துக் கொண்ட ஹர்மன்பிரீத் கவுர் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.சி.சி கனவு அணியில் இடம்பெற்ற வீரர் வீராங்கனைகளின் பெயர் அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வீராங்கனைகள் இடம்பெற்றிருக்கின்றனர்.
அதில், ஹர்மன்பிரீத் கவுர் ஒருவர்.இப்படி ஏகப்பட்ட சாதனைகளை செய்த கவுர், நேற்று நிகழ்த்திய சாதனை வரலாற்றில் நீங்காதவை. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது.இதில்,சதமடித்ததன் மூலமாக டி20 போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்று இருக்கிறார். ஹர்மன்பிரீத் கவுர்.
அதே போல் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் 4-வது அதிகபட்ச ஸ்கோராக இதுவே உள்ளது . மேலும் உலக கோப்பையில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும் ஹர்மன்பிரீத் கவுர் சொந்தக்காரி ஆகியுள்ளார். இப்படி ஏகப்பட்ட சாதனைகளை செய்து வரும் கவுர் பெண்கள் கிரிக்கெட்டில் அனைத்து வீராங்கனைகளுக்கு ஒரு ரோல் மாடல் என்றால் அது மிகையல்ல.
அதே சமயம், கவுர் செய்த ஒரு மிகப்பெரிய தவறு அவரின் புகழை உடனே கீழே தள்ளியதும் உண்மைத்தான்.
ஹர்மன்பிரீத் கவுரின் விளையாட்டு திறனை பாராட்டும் விதமாக பஞ்சாப் மாநில முதல்வர் அமிர்ந்தர் சிங் அவருக்கு டிஎஸ்பி பதவி வழங்கி கவுரவப்படுத்தினார்.கடந்த மார்ச் 1-ஆம் தேதி பஞ்சாப் போலீசில் டிஎஸ்பியாக பொறுப்பெற்றுக்கொண்ட ஹர்மன்பிரீத் கவுரின் கல்வி சான்றிதழ்களை பஞ்சாப் மாநில தேர்வு வாரியம் சரிபார்த்து.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/jio-3.jpg)
ஹர்மன்பிரீத் கவுர் சமர்பிக்கபட்ட சான்றிதழில் மீரட்டில் இருக்கும் சவுதாரி சரன் சிங் பல்கலைகழகத்தில் பயின்றதாக கூறியது பொய்யானவை என தெரியவந்தது. போலிச் சான்றிதழால் கடும் அதிர்ச்சியடைந்த பஞ்சாப் மாநில அரசு ஹர்மன்பிரீத் கவுரை டிஎஸ்பி பதிவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்து,12-ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கு ஏற்ப கான்ஸ்டபிள் பதவி அளிக்கப்பட்டது.
கவுரின் இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. செய்தித்தாள்களில் இந்த செய்தி முகப்பு பக்கத்தில் இடம்பெற்றன. ஹர்மன்பிரீத் கவுர் இதற்கு கருத்து கூற மறுத்தார். இந்திய அணிக்காக அவர் செய்த சாதனைகளை கருத்தில் கொண்டு அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இருப்பினும் போலியான சான்றிதழ் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் அர்ஜூனா விருதுக்கு சிக்கல் ஏற்படும் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.இந்த சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், ஹர்மன்பிரீத் கவுரின் அடுக்கடுக்கான சாதனைகள் இவை எல்லாவற்றையும் மறைய வைத்தது. இன்று அவரின் சாதனைகளைத்தான் அனைவரும் பேசி வருகின்றனர்.