Advertisment

கல்வியே சரியான தீர்வு; குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதா?

அனைத்துத்துறை அலுவலர்களும் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Has child labor been completely curbed

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் இன்று (ஜூன்12) கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்களே இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரியதாகவே இருக்கின்றது.

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில்; அனைத்துத்துறை அலுவலர்களும் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஓவ்வொருஆண்டும் ஜுன்-12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தொழிலாளர்நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ‘குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும், “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தைமாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன்,தொழிலாளர் உதவி ஆணையர் இ.வெங்கடேசன், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேநேரம், திருச்சிக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்துக்குப் பிறகு குடும்பங்களின் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது; திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரைக் காட்டிலும் புறநகர் பகுதிகளில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காய்கறிக் கடை, இறைச்சிக் கடை, பேனர் மற்றும் சாமியானா பந்தல் அமைத்தல், கட்டிட வேலை போன்ற பல்வேறு பணிகளில் சிறார்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாநகரிலும் வாகன பழுது பார்க்கும் கடைகள் மற்றும் உணவகங்களில் சிறார்கள் பணியில் இருப்பதைக் காண முடிகிறது. இதேபோல, கட்டிட வேலை மற்றும் இரும்பு தொழிற்சாலைகளில் வடமாநில சிறார்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக, திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் மோகன் தெரிவித்ததாவது; குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அவ்வப்போது கண்டறியப்பட்டு, மீட்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு மீட்கப்படும் குழந்தை களிடம் விசாரணை நடத்தியதில், பெரும்பாலான குழந்தைகள் வேலைக்கு வருவதற்கு பொருளாதார நெருக்கடியே காரணமாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த சிறார்கள் பிற மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வேலை தேடி வருகின்றனர். அவர்களை பெற்றோரே அழைத்து வருவதை பேருந்து நிலையங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. அண்மைக் காலமாக, ஹவுரா உள்ளிட்ட வடமாநில ரயில்களில் வரும் வடமாநில குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் 15 சிறுமிகள் உட்பட 500 பேர் மீட்கப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது போன்று, மீட்கப்படும் சிறார்கள் வடமாநிலத்தவர் என்றால், மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு, கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, அவர்களின் பொருளாதார நெருக்கடியே காரணமாக இருக்கும் நிலையில், அதிலிருந்து சிறார்களை மீட்டு, கல்வியை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே குழந்தைகள் நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment