scorecardresearch

லேட் நைட் டின்னர்..? சுகர் அபாயத்தை தடுக்க முதலில் இதைப் பண்ணுங்க!

இந்தியாவில் தோராயமாக 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லேட் நைட் டின்னர்..? சுகர் அபாயத்தை தடுக்க முதலில் இதைப் பண்ணுங்க!
Diabetes symptoms and prevention

உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இந்தியாவில் தோராயமாக 18 வயதுக்கு மேற்பட்ட 7.7 கோடி பேர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையத்தின் இளையோர் நீரிழிவு பதிவுகளின்படி, இந்தியாவில் 25 வயதுக்கு உட்பட்ட நான்கு பேரில் ஒருவர் டைப்-2 நீரிழிவு வகையின் லேசான அறிகுறிகளை கொண்டிருக்கின்றனர்.

நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.

நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

இதுதவிர அதிக மது குடிக்கும் பழக்கம், புகை பிடித்தல், உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆகியவை நீரிழிவு, மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம்.

எனவேதான், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமாக இதயப் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும்.

அறிகுறிகள் என்ன?

அதிக தாகம், இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்தல், அதீத மயக்கம், எந்த வித முயற்சியும் இன்றி எடை குறைதல், காலில் தொற்று ஏற்படுதல், மங்கலான பார்வை, மற்றும் காயங்கள் குணமடையாதது ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகள் என பிரிட்டிஷ் தேசிய சுகாதர சேவை அமைப்பு கூறுகிறது.

எனினும், இது போன்ற எந்த அறிகுறியும் இன்றியும் கூட நீரிழிவு நோய் நேரிட வாய்ப்புள்ளது.

குறைந்த ரத்தச் சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்தப் பிரச்சினை ஏற்படும்.

பொதுவாக, இரவில் தாமதமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் உணவுக்கான நமது கிளைசெமிக் எதிர்வினை அதிகமாகவும் குறைவாகவும், சீரற்ற முறையில் இருக்கும்.

நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது.

நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க

நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் வருவதைத் தள்ளிப்போடலாம் அல்லது வந்த பிறகு கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க சமச்சீரான உணவு அவசியம். தினமும் வேளாவேளைக்குச் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் நன்மை கிடைக்கும்.

சர்க்கரை நிறைந்த இனிப்புகளுக்கு மட்டுமின்றி, சோடா, பிஸ்கெட்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள், கேக், வறுக்கப்பட்ட உணவுகள் மற்றும் இதர பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளக்கூடாது. மது குடிப்பது, புகை பிடிப்பது, குளிர்பானங்கள் குடிப்பதை அறவே நிறுத்த வேண்டும்.

ஆரஞ்சு, தர்பூசணி,  கொய்யா, புரதம் நிறைந்த பீன்ஸ், பருப்பு வகைகள், குறைந்த கொழுப்புள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட கார்ப்போஹைட்ரேட் இல்லாத உணவுகளை உண்ணலாம். பச்சைக் காய்கறிகள், முழு தானியங்கள், ஓட்ஸ், அரிசி கேக்குகள், பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் முந்திரி ஆகியவை உடல்நலனுக்கு நல்லது. ஆலிவ் எண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை 2-3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது. டைப் 2 நோயாளிகள் ஹெச்பி.ஏ.1.சி. எனப்படும் மூன்று மாத ரத்த சர்க்கரை சராசரி அளவையும் எடுத்துப் பார்க்க வேண்டும். அதில் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கும்.

மேலும் இந்தியாவின் நீரிழிவு நோய் வழிகாட்டு முறைகளில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நீரிழிவு நோய் இருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Health tips diabetes symptoms and prevention