scorecardresearch

மாரடைப்புக்கும், வானிலைக்கும் தொடர்பு உள்ளதா? நிபுணர் சொல்வது என்ன?

மாரடைப்புக்கும், வானிலைக்கும் தொடர்பு உள்ளதா? பதில் ஆம் எனில், குளிர்காலத்தில் அதிகம் மாரடைப்பு ஏற்படுகிறதா?

மாரடைப்புக்கும், வானிலைக்கும் தொடர்பு உள்ளதா? நிபுணர் சொல்வது என்ன?
heart health

மாரடைப்பு எப்போதும், எவருக்கும் வேண்டுமானாலும் வரலாம். எனவே உயிரிழப்பைத் தடுக்க எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். ஆனால் மாரடைப்புக்கும், வானிலைக்கும் தொடர்பு உள்ளதா? பதில் ஆம் எனில், குளிர்காலத்தில் அதிகம் மாரடைப்பு ஏற்படுகிறதா?

புது தில்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் கார்டியாக் சயின்சஸ் சேர்மேன் மருத்துவர் பல்பீர் சிங் முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், குளிர்காலம் பெரும்பாலும் பலரால் விரும்பப்படும் பருவமாகக் கருதப்படுகிறது ஆனாலும், இந்த சமயத்தில் தான், பெரும்பாலான மாரடைப்பு ஏற்படுகிறது.

சுவாச நோய்கள் மற்றும் வைரஸ்களின் ஊடுருவல் மட்டுமல்ல, இதய நோய்களும் குளிர்காலத்தில் கவலையை ஏற்படுத்தும். எனவே குளிர்காலம் முன்னெப்போதையும் விட மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். குளிர்காலத்தில் மாரடைப்பு, இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் அரித்மியா போன்ற இருதய நிகழ்வுகள் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கூறுவதால், இந்த பருவம் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும், என்று அவர் கூறுகிறார்.

குளிர் காலத்துக்கும், மாரடைப்புக்கும் என்ன தொடர்பு?

மருத்துவரின் கூற்றுப்படி, நமது உடலின் உடலியல் மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி இதயத்தை பாதிக்கும் முதன்மையான காரணங்களில் ஒன்று. சிம்பத்தெட்டிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலம் உடலின் உயிரியல் நிலை தடைபடுகிறது, இது நம் உடலில் இருக்கும் இரத்த நாளங்களை சுருக்குகிறது. இது ‘வாசோகன்ஸ்டிரிக்ஷன் (vasoconstriction) எனப்படும். இந்த செயல்பாட்டின் போது, ​​உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தை அழுத்துவதால், இரத்த அழுத்த அளவு அதிகரிக்கிறது.

குளிர் மாதங்களில், வெப்பநிலையில் பரந்த வேறுபாடுகள் இருக்கலாம், மற்றும் உங்கள் உயிரியல் அமைப்புகளை வெப்பமாக வைத்திருக்க உற்பத்தி செய்யப்படும் வெப்பம்’ தீவிர நிலைகளில் ஆபத்தை ஏற்படுத்தலாம். இது இதயத்தின் இரத்த நாளங்களை சேதப்படுத்தும் ‘ஹைப்போதெர்மியா’வை (hypothermia) ஏற்படுத்துகிறது என்று அவர் விளக்குகிறார்.

குளிர்காலம் முன்னெப்போதையும் விட மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்

இதய நோயாளிகள் மனதில் கொள்ள வேண்டியவை

ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. வெப்பநிலையில்’ சமநிலையை பராமரிக்க இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டும். மேலும் ஆக்ஸிஜன் தேவைகள் அதிகரிப்பதால், இது கடுமையான நிகழ்வுகளில் மாரடைப்பைத் தூண்டும்.

மோசமான இதய செயல்பாடு கண்டறியப்பட்ட நோயாளிகள், நுரையீரலில் திரவம் திரட்சியின் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இது ஒரு நபர் சாதாரணமாக சுவாசிக்க கடினமான சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும் இந்த காலகட்டத்தில் சுவாச நோய்கள் மிகவும் பொதுவானவை என்பதால், அதிக ஆக்ஸிஜனுக்கான ஒட்டுமொத்த இதயத் துடிப்பை அதிகரிப்பதன் மூலம் அவை அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர் சிங் விளக்குகிறார்.

குளிர் காலத்தில் இதய ஆரோக்கியத்துக்கு என்ன செய்யலாம்?

ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகளை அணிவதன் மூலம் உங்கள் உடலை சூடாக வைத்திருங்கள், இது உடல் வெப்பநிலையை மிகவும் திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது.

அதிகப்படியான மது அருந்துதல் அல்லது புகைபிடிப்பதைத் தவிர்ப்பது அவசியம்.

குளிர்காலத்தில், இதய ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளுக்கு பதிலாக சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதய செயல்பாட்டை மேம்படுத்த தினசரி ஓட்டபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். உங்கள் மன அழுத்தத்தை ஆரோக்கியமாக நிர்வகித்தல், பணிச்சுமையை குறைத்தல் மற்றும் தினசரி சீரான தூக்கம் ஆகியவற்றை உறுதி செய்யவும்.

நீங்கள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் இதய பிரச்சினைகளை மோசமாக்கும் அனைத்து காரணிகளையும் கண்காணிப்பது அவசியம்.

வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக உங்கள் இருதய மருத்துவரைச் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆரம்பகால நோயறிதல் எந்தவொரு அடிப்படை சிக்கல்களிலும் இருந்து உங்களை பாதுகாக்க உதவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Heart attack symptoms cardiac arrest heart health