Advertisment

இ.சி.ஜி வசதி இல்லாமல் கிராமப்புற மாரடைப்பு தடுப்பு திட்டம் சாத்தியமா? அரசுக்கு மருத்துவர் புகழேந்தி கேள்வி

ஆரம்ப சுகாதார மைய அளவில் மாரடைப்பை உறுதி செய்ய வேண்டிய ECG பரிசோதனை வசதி பெரும்பாலான சுகாதார மையங்களில் கிடையாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu

Tamil Nadu government STEMI Program

ECG வசதி நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் உள்ளபோது, கிராமப்புற அரசு மருத்துவ மையங்களில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் வீ. புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.

Advertisment

தமிழக அரசின் கிராமப்புற மாரடைப்பு சிகிச்சைத் திட்டத்தின் குறைப்பாடுகளும்,அதை களையும் நடைமுறை ஆலோசனைகளும் குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலரும் மருத்துவருமான வீ. புகழேந்தி தனது பதிவில் கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் இருதயநோய்/ மாரடைப்பால் அதிகம் பேர் இறந்து வரும் சூழலில் கிராமப்புறங்களில் உரிய சிகிச்சையை உடனடியாக அளிக்க, அனைத்து அரசு கிராமப்புற(10,999 ) மருத்துவமனைகளிலும் (8,713 துணை சுகாதார மையங்கள்,2,286 ஆரம்ப சுகாதார மையங்கள்) உடனடி ரத்தம் உறைந்ததை உடைக்கும் மருந்துகள் (Streptokinase) தயார் நிலையில் வைக்கப்பட்டு,நோயாளிகள் வந்தவுடன் உடனே மருந்தை கொடுத்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக, அருகிலுள்ள வசதிகள் கூடுதலாக இருக்கும் அரசு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பும் திட்டம் ஜுன் 27 முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. 

இதனால் மாரடைப்பு இறப்புகளை கிராமப்புறங்களில் பெருமளவு குறைக்க முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை 3 பேருக்கு மட்டுமே (1 மாத காலத்தில்) தஞ்சாவூரில் உள்ள ஆலத்தூர் ஆரம்ப சுகாதார மையத்தில் அம்மருந்து கொடுக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (பிற இடங்களில் இது ஏன் நடைமுறைப் படுத்தப்படவில்லை?)

இந்தியாவில் 50 சதவீத மாரடைப்பு 50 வயதிற்கு கீழானவர்களை பாதிக்கிறது என்பதும், 25 சதவீத பேர் 40 வயதிற்கு கீழானவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் ரத்தக்கொதிப்பே இந்தியாவில் நிகழும் 24% மாரடைப்புக்கு காரணமாக உள்ளது.

இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள்

ஆரம்ப சுகாதார மைய அளவில் மாரடைப்பை உறுதி செய்ய வேண்டிய ECG பரிசோதனை வசதி பெரும்பாலான சுகாதார மையங்களில் கிடையாது. 

ஆக, நெஞ்சுவலி மாரடைப்பால் தான் ஏற்பட்டது என்பதை ஆரம்ப சுகாதார மையங்களில் எப்படி உறுதிபடுத்துவது?

ECG வசதி இல்லாமல் இருந்தால் மாரடைப்பை எப்படி உறுதிபடுத்துவது?. அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், ECG வசதியை ஏற்பாடு செய்யாமல், மாரடைப்பு சிகிச்சை ஏன் தவறாக பயன்படுத்தப்பட கூடாது என்ற கேள்விக்கு விடை என்ன?

மேலும் ஆரம்ப சுகாதார மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறதா? செயல்பட்டாலும் போதிய பணியாளர்கள் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ளனரா?

ஆக, அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும்  ECG எடுக்கும் வசதியும் அதற்கான பணியாளர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் அவை செயல்பட்டால் மாரடைப்பு சிகிச்சை எதிர்பார்த்த பலனை கொடுக்கலாம். 

அது இல்லாமல் இருக்கும் தற்போதைய சூழலில் அவை பெரும் பயனை கொடுக்குமா?

துணைசுகாதார மையங்களின் நிலை

பெரும்பாலான துணை சுகாதார மையங்கள் வாரத்திற்கே 10 மணி நேரம் மட்டுமே செயல்படுவதால் இந்த மாரடைப்பு சிகிச்சைத் திட்டம் எவ்வளவு தூரம் பயனளிக்கும் என்பது பெரும் கேள்விக்குறியே.

மேலும் இங்கும் ECG வசதி துளியும் இல்லாமல் இருப்பதுடன், மருத்துவர்களும் அங்கு பணியில் இல்லவே இல்லை என்பதிலிருந்து மாரடைப்பை முறையாக கண்டறியும் பயிற்சியை செவிலியர்களுக்கு திறம்பட கற்றுகொடுக்கப்படவில்லை எனில் பிரச்சனையே. 

அங்கும் தேவையின்றி அம்மருந்து பயன்படுத்தபடுமோ என்ற கேள்வி எழுகிறது.

ECG வசதி நகர்ப்புற அரசு மருத்துவமனைகளில் உள்ளபோது கிராமப்புற அரசு மருத்துவ மையங்களில் இருக்க வேண்டும் என்பதே சமூகநீதி என்பதை அரசு உணர வேண்டாமா?

ஆக, உரிய ,தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்திய பின் மாரடைப்பு சிகிச்சையை நடைமுறைப்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும்.

குதிரைக்குமுன் வண்டியை பூட்டுவது சரியா?

அரசு மேற்சொல்லப்பட்ட கருத்துகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து மாரடைப்பு சிகிச்சையை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

மற்றுமொரு முக்கிய குறைப்பாடு

மாரடைப்பு தடுப்பிற்கு உரிய முக்கியத்துவம் ஏன் அளிக்கப்படவில்லை?

சமச்சீர் சத்துணவு, உப்பை குறைத்த ல்(3-5கிராம்/நாள்), போதிய உடற்பயிற்சி/ நடைப்பயிற்சி, மன அழுத்தத்தை குறைப்பது, கொழுப்பை குறைப்பது, 7 மணி நேர நிம்மதியான தூக்கம்.... போன்றவை குறித்து தக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் மாரடைப்பு வந்த பின் சிகிச்சை அளிப்பது மட்டும் எதிர்பார்த்த பலனை கொடுக்குமா?என அரசு சிந்தித்து செயல்பட வேண்டாமா? என்று, மருத்துவர் புகழேந்தி தனது பதிவில் கேள்வி எழுப்பி உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment