2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பூனேவிலுள்ள 6 வயது சிறுமி ஒருவர் வறுமை காரணமாக இதய அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கவே, பிரதமர் மோடியின் உதவியை நாடினார். மோடியும் மாவட்ட நிர்வாகம் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய வழிவகுத்தார். அந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் முடிந்து தற்போது நலமாக உள்ளார். இந்நிலையில், அச்சிறுமியின் குடும்பம், சிறுவன் ஒருவனுக்கு இலவச அறுவை சிகிச்சை புரிய வழிகாட்டிய நெகிழ்ச்சிகரமான சம்பவம் அண்மையில் நடைபெற்றது.
பூனேவை சேர்ந்த 6 வயது சிறுமி வைஷாலி. இதய நோயால் பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய பல லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் கூறினர். அந்த மருத்துவ செலவை சந்திக்க சிறுமியின் குடும்ப பொருளாதார நிலைமை இடம் கொடுக்கவில்லை.
அந்த சிறுமி தன் பெற்றோர் உதவியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திரமோடிக்கு தன் அறுவை சிகிச்சைக்கு உதவிபுரிய வேண்டி கடிதம் எழுதினார். உடனேயே மோடியும், மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு இலவசமாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவிபுரிந்தார். பின், சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்றார். அதன்பிறகு, சிறுமி மோடியை நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்நிலையில், தங்கள் வீட்டு பிள்ளைக்கு ஏற்பட்ட கஷ்டம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது எனக்கருதி, இதேபோல் மருத்துவ சிகிச்சைகளுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் சிறுமி வைஷாலியின் குடும்பத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/7bd13318-672b-11e7-99b4-5703255acffe-300x169.jpg)
நர்சீன் என்ற 11 வயது சிறுவன் ஒருவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் தவித்தபோது, அவனது பெற்றோர் வைஷாலி குடும்பத்தினரின் உதவியை நாடி வந்தனர். அப்போது, வைஷாலியின் குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் அரசு திட்டம் ஒன்றின் கீழ் இலவச அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதை தெரிவித்து வழிகாட்டினர். அதன்படி, அச்சிறுவனுக்கும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளான்.
குழந்தைகளின் அறுவை சிகிச்சைகளுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பங்களின் மனவேதனை எந்தளவிற்கு இருக்கும் என்பதை உணர்ந்ததாலேயே வைஷாலியின் பெற்றோர் தாங்கள் அனுபவித்த வேதனையை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது என மற்றவர்களுக்கு உதவி வருகின்றனர்.