கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் பெண்களுக்கு வருங்காலத்தில் இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
Paediatric & Perinatal Epidemiology எனும் இதழில் இந்த ஆராய்ச்சி வெளியானது. இந்த ஆய்வுக்காக, முதல்முறை கர்ப்பமான 1,46,748 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களின் பிரசவத்திற்குப் பிறகு, நான்கரை வருடங்கள் கழித்து அதில், 997 பேருக்கு இதய நோய்களும், 6,812 பேருக்கு உயர் ரத்த அழுத்தமும் ஏற்பட்டது இந்த ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு வருங்காலத்தில் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மற்ற பெண்களை விட 2.2 மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
அதேபோல், அவர்களுக்கு பிரசவத்திற்கு பிறகு மீண்டும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு, மற்ற பெண்களை விட 5.6 மடங்கு அதிகம் என அந்த ஆய்வு கூறுகிறது.
“கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது, அப்பெண்ணின் வாழ்நாள் முழுவதும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. அதனால், கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட பெண்கள் பிற்காலத்தில் இதய நோய்கள் வராமல் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”, என ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சோனியா க்ராந்தி கூறுகிறார்.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் (PIH) பிரீக்ளாம்ப்ஸியா என்றழைக்கப்படும் தீவிர நிலைக்கு வழிவகுக்கலாம். இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு தீவிரமான, ஆபத்தான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடர் மருத்துவ பரிசோதனைகள், உப்பு மற்றும் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுதல், தினந்தோறும் உடற்பயிற்சி, உணவில் தினமும் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நவீன வாழ்வியல் முறைகளால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களில் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.