பயணம் என்பது எப்போதுமே சுக அனுபவங்களை மட்டுமே தரும் என்று சொல்லிவிட முடியாது. பலவித உணர்வுகள், சாகச அனுபவங்கள், மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள், அதிபயங்கரமான சம்பவங்கள் என அனைத்தின் கலவையாகத்தான் பயணங்கள் அமையும். பயணங்களின்போது நாம் சந்திக்கும் மனிதர்களும் பலவிதங்களில் இருப்பார்கள்.
மும்பையை சேர்ந்த துருவ் தோலக்கியா, தன் பயணங்களின்போது இத்தகைய பலதரப்பட்ட அனுபவங்களை பெற்றிருக்கிறார். தன் புல்லட்டை உற்ற நண்பனாக கொண்டிருக்கும் துருவ், 16 மாதங்களில் 29 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
”இந்த உலகம் ஒரு புத்தகம். பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கின்றனர்”, என்ற செயிண்ட் அகஸ்டினின் மேற்கோள் தான் துருவுக்கு மிகவும் பிடித்தமான, பொருத்தமான கூற்று.
தான் பயணங்களின்மீது தீரா காதல் ஏற்பட்டதற்கு காரணமாக Scoopwhoop.com இணையத்தளத்துக்கு அவர் ஒருமுறை அளித்த பேட்டியில், “நான் மும்பையை சேர்ந்தவர். இயல்பாகவே, எங்கள் குடும்பத்தில் பணத்துக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. ஒருமுறை திரிபுராவில் உள்ள உனாகோட்டி மாவட்டத்துக்கு சென்றபோது, ஒரு ஏழை மனிதர் எனக்கு இலவசமாக அவர் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதித்தார். உணவு கொடுத்தார். நான் பணம் கொடுத்தாலும் அவர் வாங்கவில்லை. அந்த சம்பவம்தான் வாழ்க்கை மீதான புரிதலை எனக்கு மாற்றியது”, என்கிறார்.
இந்த சம்பவம்தான் பணம் தான் எல்லாமே என்றிருந்த துருவுக்கு, பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. பயணம் தான் தன்னை முழு மனிதனாக்கும் என்று அவர் நம்புகிறார்.
இந்த பயண அனுபவங்களுக்காக அவர் இழந்தவை ஏராளமானவை. அவருடைய மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றார். விவாகரத்தும் ஆகிவிட்டது. வேலையும் போய்விட்டது.
ஒருமுறை ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டில் பெருங்காயம் ஏற்பட்டும், அவர் பயணத்தை விடவில்லை.
எல்லாமே தன்னைவிட்டு சென்றாலும், பயணங்களின் வழியே உலகை ரசிப்பதை மட்டும் துருவ் நிறுத்திவிடவில்லை.