History of Madras Chennai Street wise story Sowkarpet and Mint Street : சென்னை... நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் பேசும் முக்கிய பொருளாக, இடமாக, உணர்வாக மாறிப்போன வார்த்தை தான் சென்னை. வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் தெருக்களுக்கென்று ஒரு மணம் இருக்கிறது. ஒரு குணம் இருக்கின்றது. அதன் வரலாறோ நீண்டதாகவும், யாராலும் மறக்க இயலாததாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கிக் கொண்டு வருவதாகவும் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் இம்மண்ணில் அடியெடுத்து வைத்த நாட்களுக்கு முன்பில் இருந்து துவங்கியிருக்கிறது சென்னையின் வரலாறு. இன்று போல் அன்று மக்கள் நெருக்கடியும் கூட்டமும் குறைவாய் இருந்ததால், எந்த பகுதியில் எப்போது, எந்த மக்கள் வந்து குடியேறினர் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையிலும் இருந்தது. சென்னை மாகாணத்தின், இன்றைய மாநகரின், வரலாற்றில் முதல் அடியை நாம் சௌகார்பேட்டை சாலைகளில் எடுத்து வைப்போம்.
இதோ நம் முன்னே நீண்டு, நெடுதுயர்ந்து, கொஞ்சம் கோணல் மாணலுமாய் தான் இருக்கிறது இந்த தங்க சாலை . ஆங்கிலத்தில் 'மிண்ட் ஸ்ட்ரீட்’ என்று அழைக்கப்படும் இந்த சாலையில் உங்களின் அனைத்து தேவைகளுக்குமான பதிலும் தங்கு தடையின்றி கிடைக்கும். ஆனால் பல மொழிகளில் கிடைக்கும். இது பன்மொழிப் பூங்காவாக திகழ காரணம் என்ன? இந்த சாலைக்கு ஏன் தங்கசாலை தெரு என்று பெயர் வந்தது? இந்த பகுதிக்கு ஏன் சௌக்கார்பேட்டை என்ற பெயர் வந்தது? மார்வாரிகளும், குஜராத்திகளும் அதிகமாக இந்த பகுதியில் வாழ்வதற்கான வரலாற்று பின்னணி என்ன? முன்னொரு காலத்தில் அதிக அளவில் சினிமாக்கள் திரையிடப்பட்ட இடமாகவும், பஜனைகள் நடைபெற்ற இடமாகவும் இருந்த “கலாச்சார மையத்தின்” இன்றைய நிலை என்ன என்பதை அறிந்து வர நாங்கள் சௌகார்பேட்டை சென்றோம்.
மிண்ட் சாலை (அ) தங்கசாலை தெரு
பழைய ஜெயில் சாலையில் துவங்கி, சென்னை மத்திய ரயில் நிலையம் வரை நீண்டிருக்கும் சென்னையின் மிகப்பெரிய தெரு தான் இந்த மிண்ட் தெரு அல்லது தங்கசாலை தெரு. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த பெயர்களுக்கான சரியான காரணங்களும் உண்டு. மிண்ட் என்பது ஆங்கிலேயர்களால் நிர்வகிக்கப்பட்ட ஒரு நிறுவனம். 1640ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த இந்நிறுவனம் மதராஸ் பகோடாகள், ஃபனாம்கள், கேஷ், மற்றும் டூடூஸ் போன்ற நாணயங்களை சென்னை ஜார்ஜ் கோட்டையில் உருவாக்கியது. பிறகு முகலாயர்கள், அவர்களின் தங்க மொஹர்கள் மற்றும் வெள்ளி ரூபாய்களை தயாரிக்கும் பொறுப்பினை மிண்ட் நிறுவனத்திடம் 1692ம் ஆண்டு ஒப்படைத்தனர். பின்னர் ஆங்கிலேயர்கள் பகோடாக்களுக்கு பதிலாக ரூபாய்களையும், அணாக்களையும், பைசாக்களையும் தயாரிக்கத் துவங்கியது வேறு கதை. 1841ம் ஆண்டு மிண்ட் என்ற கம்பெனி இந்த சாலையில் இயங்க துவங்கியது. 1804ம் ஆண்டு அரைவை மில்லாக இருந்த பகுதி இடிக்கப்பட்டு மிண்ட் கட்டிடம் உருவாக்கப்பட்டது. தங்கத்தினையும், வெள்ளியையும் உருக்கி நாணயங்கள் உருவாக்கப்பட்டதால் இந்த தெரு ”தங்கசாலை” என்று அழைக்கப்பட்டது. நாணயங்களை ”மிண்ட்” செய்ததால் இந்த தெரு மிண்ட் சாலை என்றும் வழங்கப்பட்டது. இந்த மிண்ட் கட்டிடம் 1807ம் ஆண்டிலேயே நிறுவப்பட்ட போதும், அப்போது மிண்ட் செய்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை. பின்னர் 1841ம் ஆண்டில் இருந்து இந்த பகுதியில் நாணயங்கள் தயாரிக்கும் பணி துவங்கியது. ஆனால் இன்று சென்னையில் நாணயங்கள் உருவாக்கப்படவில்லை. மிண்ட் கட்டிடமோ, அரசின் அச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது.
சௌகார்பேட்டையும் பன்மொழிப் பூங்காவும்
பெருநகரங்களில் தவிர்க்கவே முடியாத ஒன்று தான் பன்மொழிகளின் கலவை. இந்தியில் இருந்தும், குஜராத்தியிலும் தமிழக்கு பலசொற்கள் தாரை வார்க்கப்பட்டிருக்கலாம். தமிழில் இருந்து பல சொற்கள் குஜராத்திக்கும், ராஜஸ்தானிக்கும், தெலுங்குக்கும், ஆங்கிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். இந்த பகுதியில் குஜராத் சமணர்களும், ராஜஸ்தான் மார்வாரிகளும் அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதியில் இந்தியும், குஜராத்தியும், ராஜஸ்தானியும் தவிர்க்கவே முடியாத ஒன்று.
இங்கிலாந்திற்கு லண்டன் எப்படியோ, அமெரிக்காவிற்கு லோயர் மன்ஹாட்டன் எப்படியோ அப்படித்தான் அன்றைய மெட்ராஸூக்கு இந்த ஜார்ஜ் டவுன். கறுப்பர் நகரமாக உதயமாகி, பின்னர் ஜார்ஜ் டவுனாக மலர்ந்த இந்த பகுதியின் ஒரு அங்கமாக இருக்கிறது சௌக்கார்பேட்டை. வடமொழியில் சௌக்கார் என்றால் “செல்வ செழிப்பு மிக்கவர்கள் ” என்று பொருள். மார்வாரிகளும், குஜராத் வணிகர்களும் அந்த நிலையில் தான் அன்று இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே அங்கு அடைக்கலம் புகுந்தவர்கள் நம் சுந்தர தெலுங்கு சகோதர்கள் தான். அன்று ஜார்ஜ் கோட்டையில் பணியாற்றிய அரசு ஊழியர்களின் ஆடைகளை வெளுக்கவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவையான பருத்தி துணிகளை நெய்வதற்கு நெசவாளர்களும், அந்த துணிகளுக்கு சாயம் போடுபவர்களும் எழும்பூர் ஆற்றங்கரையில் (இன்றைய பங்கிங்காம் கால்வாய்) குடி பெயர்ந்தனர். ஒரு காலத்தில் மிண்ட் தெரு ”வாஷர்ஸ் தெரு” என்றும் அழைக்கப்பட்டது. துணி துவைப்பவர்களும், சாயம் இடுபவர்களும் பெரும்பான்மையாக ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
துணி வர்த்தகத்தில் ஈடுபட்ட சௌராஷ்டிரர்கள் மிண்ட் தெருவில் மத்திய மேற்கு பகுதியில் குடி பெயர்ந்தனர். அவர்கள் மட்டுமின்றி பணப்புழக்கம் அதிகம கொண்ட மார்வாரிகளின் வருகையும் அங்கு அதிகரிக்கத் துவங்கியது. துணி மற்றும் இதர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அனைத்து தரப்பு மக்களின் வாழிடமாக மாறியது இந்த மிண்ட் சாலை. வட இந்தியாவில் வந்தவர்கள் பலரும் இன்று தமிழகத்தை தாயகமாக கொண்டுள்ளனர். தமிழர்களைக் காட்டிலும் நல்ல தமிழ் பேசுகின்றார்கள். அந்த சாலையில் அதிகாலையில் தமிழ் இந்து கோவில்களின் மந்திரம் ஒலிக்கும். அதே நேரத்தில், சமணர் கோவில்களில் பஜனையும், மார்வாரி இந்து கோவில்களில் பூஜை ஒலிகளும் ஒருங்கே கேட்க முடிகிறது.
நான்கு கிலோ மீட்டர் சாலையில் நாங்கள் கண்டது என்ன?
மிண்ட் என்ற பெயருக்கு ஏற்றவாறு இன்றும் அங்கு தங்கம் மற்றும் வெள்ளியை உருக்குகின்றார்கள். அது மட்டுமில்லை, இந்த மாநகரில் இருக்கும் அனைத்து உணவகங்களின் பாத்திர தேவைகளை தீர்க்கும் பொருட்டு ஈயம், பித்தளை, எவர் சில்வர் பாத்திரங்களால் நிரம்பி வழிகின்றது, சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து இரண்டாவது இடது பக்கம் திரும்பி மிண்ட் சாலையின் உள்ளே நுழையும் போது. ஆரம்பத்தில் மிகவும் அகன்று விரிந்திருக்கும் இந்த சாலை, போகப் போக மிகவும் குறுகலாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பண்ட பாத்திரங்களை தாண்டிச் சென்றால், அங்கே ஆபரணத் தங்கங்களின் அணி வகுப்பு தான். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் பெண்கள் அணிந்து கொள்ளும் வகையில் கம்மல்கள், வளையல்கள் என நிரம்பி வழிகின்றது இந்த தெரு.
அதனை தாண்டிச் செல்லும் போது இரண்டு பக்கமும், நிச்சயமாக இது வட இந்தியாவில் ஒரு பகுதி தான் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது துணிக்கடைகள். வட இந்தியர்களின் நிறங்களுக்கு பொருந்திப் போகும் வகையிலான அடர்த்தியான நிறங்களில் சேலைகளும், செர்வானிகளும், லெஹங்காக்களும், மேலாடைகளுக்கு வைக்கப்படும் தங்க நிற பார்டர்கள், பட்டன்கள் என்று பட்டன் ஹவுஸ்களும், கொஞ்சமும் ஓய்வென்பதை மறந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.
அதைத் தாண்டிப் போனால் நம்முடைய ஏரியா! எங்கும் மணக்கும் சாட்களின் மணம். சுவையான வட இந்திய இனிப்பு வகைகள், கார சாட்கள், லஸிக்கள், கரும்பு ஜூஸ் என்று பட்டியல் நீள்கிறது. நாங்கள் ”ஆலு டிக்கி” உண்ட மயக்கத்தில் அங்கிருந்து நகர மறந்துவிட்டோம். இந்த நான்கு கிலோ மீட்டர் நீள தெருவிலும் ஒவ்வொரு கிளை பிறக்கிறது. ஒவ்வொரு கிளைக்கு பின்னும் ஒரு சரித்திரம். நம் மக்களின் வாழ்வியல். அவர்களின் அன்றாடம் என கிளைத்து கிளைத்து நம்மை மீண்டும் மீண்டும் சரித்திர பின்புலத்திற்கு அழைத்துச் செல்கிறது.
மதங்களும் கோவில்களும்
பன்மொழிப் பூங்கா என்றால் அங்கு கோவில்களுக்கு பஞ்சம் இல்லை என்று தான் அர்த்தம். 500 ஆண்டுகளுக்கும் பழமையான பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த குறுகலான அடர்த்தி மிகுந்த சாலையில் அங்கே ஒரு கோவில் இருக்கிறதா என்றெல்லாம் கேள்வி வந்தாலும், அங்கே அவ்வளவு பிரம்மாண்டமான கோவில் இருக்கிறது. பைராகி மடம் என்று அழைக்கப்படும் இந்த கோவில், ஒரு வட இந்திய கோவிலை ஒட்டியவாறே அமைந்திருக்கிறது. இந்த கோவிலை வெளியாட்கள் அறிந்து கொள்ள அங்கு வாய்ப்பே இல்லை. பைராகி மடம் (Bairagi Math) என்று அழைக்கப்படும் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோவில், ஜெனரல் முத்தையா 6வது தெருவில் அமைந்திருக்கிறது.
வட இந்தியாவில் இருந்து ராமேஸ்வரத்திற்கும், பல தென்னிந்திய புனித தலங்களையும் பார்வையிட புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு அன்று போதுமான இடவசதியும் மடங்களும் மதராஸப்பட்டினத்தில் இல்லை என்பதை மனதில் கொண்டு லால் தாஸ் என்பவர் இந்த கோவிலை சுற்றி மடத்தினை கட்டி எழுப்பினார். 530 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டுவதற்காக பொதுமக்கள் நிதி உதவி அளித்ததுள்ளனர். அலர்மேலு மங்கை தாயார், ஆஞ்சிநேயர், நரசிம்மன், ஆண்டாள் போன்ற தெய்வங்களும் இங்கு வணங்கப்படுகிறது.
ஆய்மாதாஜி திருக்கோவில்
மார்வாரி இந்துக்கள் வணங்கும் இந்த கோவில் மிண்ட் சாலையிலேயே மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. அங்கு இந்துக்கள் மட்டுமின்றி ஜெய்ன்களுக்கும் கோவிலுக்குள் அனுமதி உண்டு என்று கூறுகிறார் அந்த கோவிலின் பூசாரி கணேஷ் மகாராஜ். தென்னிந்திய இந்து கோவில்கள் போன்று இவை இல்லாமல் முழுக்க முழுக்க வட இந்திய கலையில் கட்டப்பட்டிருக்கிறது இந்த கோவில்.
சமணர்களின் கோவில்களுக்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமை மார்பிள்களால் கட்டப்பட்டிருப்பது தான். இந்து கோவில்களை கட்டுவதற்காகவே ராஜஸ்தானின் பிந்துவாரா பகுதியில் இருக்கும் சொம்புரா (Sompura) பிராமணர்களை அழைத்து வருகின்றனர். அவர்களின் உழைப்பில் மார்பிள்களால் இழைக்கப்பட்டிருக்கிறது இந்த கோவில். ஆய்மாதாஜி அம்மனை தவிர்த்து கோவில் பிரகாரத்தில் பிள்ளையாரும், சீத்தள அம்மனும் அருள் தருகின்றனர். இந்த கோவில் கட்டி 5 வருடங்கள் தான் ஆகின்றது.
சமணர்கள் கோவில்
குஜராத் சமணர்களும் இங்கு பெருவாரியாக குடிபெயர்ந்துள்ளனர். அங்கு இருக்கும் சமணர் கோவில்களுக்கு காலையிலேயே பூஜை செய்ய பாரம்பரிய உடையுடன் கோவிலுக்கு வருகின்றனர். காலையில் குளித்து முடித்தவுடன், உணவு ஏதும் அருந்தாமல் நேராக கோவிலுக்கு தான் வருகின்றார்கள். இந்து மதத்தினரைப் போல் வகுப்பு வேறுபாடுகள் ஏதும் இல்லை. அனைத்து பொதுமக்களும் இறைவனின் சந்நிதியில் சமம். சமணர்கள் அனைவரும் இந்த கோவிலுக்குள் சென்று இறைவனை தொட்டு வழிபடலாம் என்கிறார் இந்த கோவிலின் மேலாளராக பணியாற்றும் படேல் சமூகத்தை சேர்ந்த பாபுபாய் படேல். (மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்) .
ஸ்ரீ பித்பஞ்சன் பஷ்வநாத் ஸ்வேதம்பரர் கடவுளாக வணங்கப்படுகிறார். இந்த கோவிலை ஸ்ரீ குஜராத்தி ஸ்வேதம்பரர் மூர்த்தி பூஜக் ஜெய்ன் சங்கம் நடத்துகிறது. இது சமணர்களுக்கான கோவிலாக இருந்தாலும் இந்துக்களும், மார்வாரிகளும், தமிழர்களும் வந்து போவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறுகிறார் பாபுபாய் படேல். கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஆண்களோ, பெண்களோ நிச்சயமாக பாரம்பரிய உடையில் தான் வர வேண்டும். ஜீன்ஸூடன் வரும் பெண்களுக்கு நிச்சயமாக அனுமதி கிடையாது.
24 தீர்த்தங்கரர்களில் 23வது தீர்த்தங்கரரான மூலநாயக்கின் கோவில் இது. 31 வயது பழைமை வாய்ந்த இந்த கோவிலின் பிரதான கடவுள் சிலை செமி பிரிஸியஸ் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள். கோவிலில் சென்று கடவுளை தொட்டு வணங்கும் நபர்கள் வாயை மூடிக் கொண்டு தான் கடவுளை வணங்க வேண்டும் என்ற நடைமுறையும் பழக்கத்தில் உள்ளது. கடவுளுக்கான பூஜைகள் முடித்து கொண்டு மோதிர விரலில் தான் சந்தனமும் குங்குமமும் கலந்த கலவையை தடவ வேண்டும் என்கிறார் படேல். படேல் இந்த கோவிலின் மேலாளாராக 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பணியாற்றினார். குஜராத்திற்கு சென்ற அவரை மீண்டும் அந்த நிர்வாகம் அழைக்க, 2017ம் ஆண்டு பணியில் வந்து இணைந்தார். அவருக்கு துணையாக பணியாற்றும் அர்ஜூன் குமார் ஒரு குஜராத் சத்திரியர் என்று பெருமை மேலோங்க கூறுகிறார் படேல். பெருமையும், கலாச்சார மரபினையும் தூக்கிச் சுமக்கும் ஒரு சமூகத்தில் சாதியத்தினையும், அதன் வாசத்தினையும் எதிர்பார்க்காமல் இருக்க முடியவில்லை.
மகராஜ்ஷாகிப்களும் சமணத் துறவறமும்
படேலிடம் பேசிக் கொண்டிருந்த போதே, அவர்கள் அடிக்கடி கூறியது துறவறம் குறித்து தான். அருகில் இருக்கும் ஸ்ரீ குஜராத்தி ஸ்வேதம்பரர் மூர்த்தி பூஜக் ஜெய்ன் சங்கம் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் 24 துறவிகள் வந்து தங்கியிருப்பதாக கூறினார். அவர்கள் அனைவரும் பெண்கள் என்று கூறியவுடன் ஆர்வம் தொற்றிக் கொண்டது. எதன் உந்துதலால் அவர்கள் இல்லறவாழ்க்கையை துறந்து துறவறம் மேற்கொள்கின்றார்கள் என்று கேட்பதற்காக நாங்கள் அங்கே சென்றோம். அங்கு 24 பெண்கள், தலையை முழுமையாக சவரம் செய்து, வெள்ளை நிற துணி அணிந்து, தலையில் முக்காடிட்டு தங்களுடைய வகுப்பில், மூத்தவர் சொல்லும் வார்த்தைகளை கவனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தனர். யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக சில நேரம் அங்கே அமர்ந்திருந்தோம். பின்னர் சில நிமிடங்கள் அமைதிக்கு பிறகு அங்கே இருக்கும் நபரிடம் எங்களைப் பற்றி கூறவும், ஒரு பெண் துறவி எங்களிடம் பேச ஒப்புக் கொண்டார்.
தமிழ், குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் உங்களுக்கு எந்த மொழியில் பதில் அளிக்க வேண்டும் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார் பபிதா என்று முன்பொரு காலத்தில் அழைக்கப்பட்டு இன்று துறவியாக இருக்கும் ஜின் பிரபா. அவர்கள் இந்த உலக வாழ்க்கையில் அமைதியை மட்டுமே நாடிச் செல்வதால் தங்களுக்கான அனைத்தையுமே துறக்கின்றனர். பபிதாவும் அப்படியே தன் பெயரையும், தன் உறவுகளையும் துறந்து சென்னையில் இருந்து சந்நியாசியாக வெளியேறினார். 26 வருடங்கள் கழித்து மீண்டும் துறவியாக சென்னைக்கு வந்த அவரை சந்திக்க அவருடைய அப்பாவும், சகோதரரும் வந்திருப்பது எங்களை கொஞ்சம் கலங்க வைத்தது.
இந்த உலகில் எதுவுமே நிலையில்லை. எங்கும் பிரச்சனைகளும், கூச்சல்களும் குழப்பங்களுமே நிலவுகிறது. அதில் இருந்து வெளியேறத்தான் நாங்கள் அனைத்தையும் துறக்கின்றோம். எங்களுக்கு எங்கள் குடும்பங்கள் மீதான பற்று அற்றுப் போவதற்காகவே நாங்கள் எங்கள் பெயரையும் துறக்கின்றோம் என்று கூறுகிறார். பிடித்த நிறம் என்று ஒன்று வந்தால், அதன் சார்பில் ஆசைகளும் அபிலாஷைகளும் உருவாகும். அதனால் தான் வெண்மை. எந்த உயிருக்கும் நாங்கள் தீங்கிழைப்பதில்லை. நாங்கள் உணவுகளும் சமைப்பதில்லை. மண்ணுக்கு அடியில் இருந்து வரும் உணவுப் பொருட்கள் எதையும் நாங்கள் ஏற்பதில்லை. கிழங்குகள், பூண்டு, வெங்காயம் என எதையும் நாங்கள் தொடுவதில்லை. வெறும் காலில் தான் நடக்கின்றோம். ஒரு இடத்தில் 10 நாட்களுக்கு மேல் தங்குவதில்லை என்று கூறிய ஜின் பிரபா பெங்களூரில் இருந்து இந்த குழுவுடன் நடந்தே சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
24 நபர்களுக்கும் சேர்த்து 5 நபர்கள் பிச்சை எடுத்து வருவார்கள். அதனையே உணவாக உட்கொள்கின்றனர் இந்த சமண துறவிகள். கொஞ்சம் திகிலூட்டும் விசயமாக இருந்தது ஒன்று தான். அவர்களின் தலைமுடியை சவரம் செய்வதற்கு பதிலாக கையாலே அனைத்தையும் பறித்து எடுக்கின்றார்கள். முடியை தொடும் போதெல்லாம் அந்த உணர்வு நீங்கும் பாடில்லை. குடும்ப உறவுகள் அனைத்தையும் உதறி செல்லும் இவர்கள், வழியில் இருக்கும் சமண மடங்களில் எல்லாம் தங்கி, தங்களின் மதம் சார்ந்த புரிதல்களை சமணர்களுக்கு போதித்து அவர்களை ஆசிர்வதிக்கின்றார்கள். வகுப்புகள், பிச்சை எடுத்தல் ஆகியவை போக மீதி நேரங்களில் அவர்கள் பொதுவாக சமண சமயம் சார்ந்த புத்தக வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள். புகைப்படங்கள் அனுமதி இல்லை. ஆனால் எங்களின் முகம் தெரியாமல் புகைப்படம் எடுத்தல் உங்கள் கையில் தான் இருக்கிறது என்றார்கள். எங்களின் கேமரா மெதுவாக, பொறுமையாக கொஞ்சம் பொறுப்புடன் புகைப்படம் எடுக்க துவங்கியது.
அச்சுகூடங்கள்
உணவுகளுக்கும் பண்ட பாத்திரங்களுக்கும் மட்டும் பெயர் போன இந்த பேர் போன இந்த பகுதியில் தான் தமிழகத்தில் மிக முக்கியமான பத்திரிக்கைகளையும் உருவாக்கியது. தமிழ் மொழியில் சிறப்பான உரைநடைகள் வளர்வதற்கு மிகவும் உறுதுணையாக நின்ற ஆறுமுக நாவலர், பெரிய அச்ச இயந்திரத்தை வாங்கி இந்த தெருவில் தான் 1860ம் ஆண்டு ”வித்தியானுபாலன இயந்திரசாலை” என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். இலக்கண நூல்கள் மற்றும் சங்க இலக்கியங்களை பிழையின்றி பதிப்பித்து கொடுத்தது இவருடைய அச்சகம். இன்று தமிழர்களின் காலைகளை அலங்கரிக்கும் தி இந்து பத்திரிக்கை, அன்று வாரத்தில் மூன்று முறை தான் அச்சில் ஏறியது. தி இந்து பத்திரிக்கை 1880ம் ஆண்டு இந்த தெருவில் இருந்த அச்சகத்தில் இருந்து அச்சாகி தான் மக்களை சென்றடைந்தது. அதே போன்று ஆனந்த விகடனும் ஆரம்ப காலத்தில் இங்கு தான் அச்சிடப்பட்டு வெளியானது. ஆறுமுக நாவலரின் அச்சகம் இன்று அங்கில்லை என்றாலும் அவருடைய அறக்கட்டளை தொடர்ந்து இயங்கி வருகிறது. 1900-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சாஸ்திர சஞ்சீவிநி அச்சகம் இன்றும் அந்த பெயர் பலகையை தாங்கி தங்கசாலைத் தெருவில் நிலைத்து நிற்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் சாஸ்திர நூல்களை அச்சிட்டு வழங்கியது இந்த அச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மிண்ட் சாலையின் மடியில் தவழ்ந்த கர்னாடிக் இசை
பஜனை வடிவங்களில் தான் கர்னாடிக் சங்கீதம் வளர்ந்தது. புகழ் பெற்றது. இன்று தமிழக கலாச்சாரங்களில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இந்த இசை மாறியிருக்கின்றது என்றால் அதில் தங்கசாலையில் பங்களிப்பும் கலந்து இருக்கிறது. அந்த தெருக்களில் அதிக அளவில் பஜனைக்கூடங்கள் இருந்துள்ளது என்றும் வராலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இங்கு இருக்கும் வேத விநாயகர் திருக்கோவிலில் தான் டி.என். ராஜரத்தினம் தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார் என்று கூறப்படுகிறது. இன்று இந்த சாலையில் கர்னாடக சங்கீதம் இசைக்கவில்லை. ஆனாலும் பஜனைக் கூடங்களை மங்கும் ஒளியில் காணும் போது யாரோ பாடும் கீர்த்தனை காதில் இசைக்காமலும் இல்லை. தற்போது இந்தத் தெருவில் இருக்கும் சுமைதாங்கி ராமர் கோவில், முன்பு பஜனை மடமாக இருந்தது என்று கூறுகின்றார்கள். நாங்கள் பார்த்த பஜனை கூடமோ இருட்டடைந்து அமைதியே உருவாக இருந்தது.
ஒவ்வொரு வேலையும் ஒவ்வொரு ரகம்
முன்பு கூறியது போலவே இந்த சாலையில் ஒரு எல்லைப்புறத்தில் ஒரு பகுதியினர் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்கின்றார்கள் என்றால், இந்த தெருநெடுக நீங்கள் பல்வேறு வேலைகளை செய்யும் அன்றாட மக்களை பார்க்கலாம். மும்பை மற்றும் கொல்கத்தாவில் மிகவும் அதிகமாக பார்வைக்குப்படும், தமிழகத்தில் 1973-லேயே முடுக்கு போடப்பட்ட ரிக்ஷாக்களை நீங்கள் இங்கு காணலாம். வட சென்னையில் சௌகார் பேட்டை நீங்கலாக வெறு சில பகுதிகளில் மட்டுமே இதனை நீங்கள் காண முடியும். இப்பகுதியில் வாழும் தமிழர்கள் சிலர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நான்கு கிமீ ஸ்ட்ரெச்சில் ஒவ்வொரு இடத்திற்கு செல்ல ஒவ்வொரு கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
உணவகங்கள்
இனிப்பான சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்ற காக்கடா ராம்பிரசாத் கடையில் மாலை 3 மணிக்கு மேலே சூடாக, சுவையாக ஜாங்கிரி தயாராகின்றது. பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அப்போதே சுவையாக, சூடாக உணவு பரிமாறுவதை இந்த கடை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.
காக்டா ராம்பிரசாத் உணவகத்திற்கு மிக அருகிலேயே 17 விதமான சுவைகளில் லஸ்சியையும், மசாலா மோரினையும் தயாரித்து வழங்கும் அன்மோல் மோஹித் பட்டியாலாவில் ஒரு க்ளாஸ் மசாலா மோர் குடித்தால் அனைத்தும் தெளிந்துவிடும். அத்தனை ருசி.
உண்டியல் கடைகள்
54 ஆண்டுகளாக இதே தெருவில் வசிக்கும் சேகர், அலுமினிய டப்பாக்களில் உண்டியல்கள் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அருகில் இருக்கும் சாய்பாபா கோவில்களில் இருந்து வந்து உண்டியல்களை வாங்கிச் செல்கின்றார்கள். இந்த பகுதியில் இது போன்று மொத்தமே 7 கடைகள் தான் இருக்கிறது.
செட்டிகள் தெருவில் மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெற்று வருகிறது. சென்னையின் அனைத்து கடைகளிலுக்கும் அனுப்பப்படும் மசாலாப் பொருட்கள் இங்கிருந்து தான் பெறப்படுகிறது. செட்டி வீதியில் அமர்ந்து தானியங்களில் கல் பார்க்கும் பாட்டி.
600 ஆண்டு கால வரலாறு, ஒவ்வொரு நாளையும் தாண்டிப் போகும் போது புதிதாக மலரும் தெருக்கள், தொழில்கள், மக்கள், மாற்றங்கள் என மற்ற தெருக்கள் போன்றே இந்த தெருவும் பரிணமித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் சிதிலமடைந்த கோவில்கள், வீடுகள், பூட்டியிருக்கும் பல ஜன்னல்கள் வைத்த அடுக்குமாடி குடியிருப்புகள், பஜனைக் கூடங்கள், இடிக்கப்பட்டு தொலைந்து போன திரையரங்குகள் என எல்லாம் நம்முடைய வரலாற்றை நினைவு கூறுகிறது. ஒரு கலாச்சாரம் என்பது மண் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் தான் தோன்றி, வளர்ந்து, செழித்து, வாழ்ந்து, மறைந்தும் விடுகிறது. வெகு சிலவே, அன்றைய பஜார் தெருக்கள் போன்று உயிர்ப்புடன் இருக்கிறது. அதில் இந்த சௌக்கார்பேட்டையும், 4 கிலோ மீட்டர் தங்கசாலைத் தெருவும் அடங்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.