தன்னுடைய அம்மாவை ‘பிஸி’யாக வைத்துக்கொள்ளவும், அவர் ஜாலியாக பொழுதுபோக்கவும் கூகுளில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விளையாட்டாக நண்பர்களிடையே ஆரம்பித்த உணவு பறிமாற்றம், இன்று மும்பையில் இவருடைய ‘தி போஹ்ரி கிச்சன்’-ஐ தெரியாத ஆட்கள் யாருமே இருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான முனாஃப் தான் அந்த இளைஞர். உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவருடைய அம்மா நஃபிசா ‘போஹ்ரி’ வகை உணவுகளை சூப்பராக சமைப்பவர்.
2013-ஆம் ஆண்டில் ஒருநாள் முனாஃபி-க்கு ஒரு ஐடியா உதிர்த்தது. தன்னுடைய அம்மாவை பிஸியாக வைத்துக்கொள்ள அவர் ஒரு முடிவெடுத்தார். அதனால், தன்னுடைய 50 நண்பர்களுக்கு ஒரு மெயில் அனுப்பினார் என்ன தெரியுமா? தன் அம்மாவின் ‘போஹ்ரி’ வகை உணவுகளை அதற்கான பணத்தை செலுத்தி சாப்பிட வாருங்கள் என்று.
இப்படித்தான் முனாஃப் இன்று முக்கிய உணவகம் தொழிலில் இவ்வளவு பெரிய ஆளாக உயரும் அளவுக்கு உயர்த்தியது. நண்பர்களை அவ்வாறு உணவு சாப்பிட அழைத்தபோது ரூபாய் 700-ஐ அதற்கான கட்டணமாக வசூலித்தார். ஒவ்வொரு முறை நண்பர்கள் அவர்களுடைய வீட்டிற்கு வருகை தந்து உணவு உண்டு முடிக்கும்போதும் ஒருவித புதிய சுவை அனுபவத்தைப் பெற்றிருந்தனர். அனைவரும் பாராட்டினர். அவர்களுக்கு அது ஊக்கத்தை அளித்தது.
அதன்பிறகு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை என நண்பர்களை உணவு சாப்பிட அழைத்தனர். ஈ-மெயில் வாயிலாக மட்டுமே கம்யூனிகேஷன். 8 பேருக்கு மட்டும்தான் அழைப்பு. நாட்கள் செல்ல செல்ல நண்பர்களைத் தொடர்புகொண்டு அவர்களை உணவு உண்ண அழைப்பது ‘வொர்க்-அவுட்’-ஆகவில்லை.
அதனால், அதற்கென ஒரு முகநூல் பக்கம் ஒன்றை ஆரம்பித்தார். முகநூலிலேயே, உணவு உண்பதற்கென நிகழ்வுகளை உருவாக்கினார். பிறகு வாரத்திற்கு ஒருமுறை என அவர்களுடைய உணவு வியாபாரம் விரிவடைந்தது. அதன்பிறகு, உணவு சாப்பிட ஒருவருக்கு ரூ.1,000 என்றானது.
அப்படியே முன்னேறி ‘தி போஹ்ரி கிச்சன்’ என்ற பெயரில் ஒரு உணவகத்தை ஆரம்பித்தார். இந்த உணவு தொழிலில் முனாஃப் மிகவும் ‘பிஸி’ ஆனதால் கூகுள் நிறுவனை வேலையிலிருந்து புறக்கணித்தார். இப்போது அவர் ‘போஹ்ரி கிச்சன்’ மூலம் ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்.
நண்பர்களுக்கென முதலில் ‘சமோசா’ விற்க ஆரம்பித்து இப்போது இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் முனாஃபிற்கும் அவரது தாயாருக்கும் ‘சபாஷ்’ போடலாம்.