கொரோனாவால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கால் பலர் உடற்பயிற்சி கூடத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மூன்றாவது அலை வந்ததும் மறுபடியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கடந்த மாத இறுதியில்தான் உடற்பயிற்சிக் கூட்டங்களில் 50 சதவீதம் பேர் வரை அனுமதித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது.
உடற்பயிற்சி கூடத்துக்குச் செல்ல வேண்டும் ஆனால், நல்ல உடற்பயிற்சி கூடத்தை தேர்ந்தெடுப்பது எப்படி என்று தெரியவில்லையா? அப்போ இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தெருவிலும் 3 அல்லது 4 உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. விளையாட்டு பயிற்சி மையங்களும் இருக்கின்றன. நீங்கள் இப்போதுதான் முதல்முறையாக ஜிம்மில் சேரப் போகிறீர்கள் என்பதால் உங்கள் ஃபிட்னஸ் கோலை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் சதீஷ்.
இனி அவரது வார்த்தைகளில் கேட்போம் வாருங்கள்.
அதாவது, நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்கப் போகிறீர்களா அல்லது உடல் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டுமா என்பது மாதிரி கூறுகிறேன். சிலர் எடை குறைப்பிலும், எடையை அதிகரிப்பதிலும் விருப்பப்பட மாட்டார்கள். மாறாக, இருக்கும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
சிலர் விளையாட்டுத் துறையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். நாம் எதற்காக ஜிம் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்வது அவசியமானதாகும். அதைத் தெடார்ந்து, உங்கள் உடல் குறித்து கொஞ்சமாவது தெரிந்து கொள்ளுங்கள். உடல் இயக்கம் குறித்தும், தசைகள், எலும்புகள் ஆகியவை குறித்தும் அடிப்படை அறிவு இருந்தால் இன்னும் சிறப்பு.
உடற்பயிற்சி செய்வதற்கான உபகரணங்களும் சாதாரணமாகவே இருக்கும். கொஞ்சம் அதிக கட்டணம் செலுத்தி ஜிம்மில் சேர்ந்தீர்கள் என்றால் குளிர்சாதன வசதியுடன் சிறப்பான உடற்பயிற்சி உபகரணங்கள் இருக்கும். உங்கள் பைகளை வைத்துக் கொள்ள தனி பாதுகாப்பு அறை, கழிப்பிடம், குடிநீர் வசதி உள்ளிட்டவை இருக்கும்.
அவ்வப்போது ஜிம்மை தூய்மை செய்ய பணியாட்கள் இருப்பார்கள். அத்துடன், உங்களுக்கென பிரத்யேகமாக ஒரு பயிற்சியாளரும் இருப்பார்.
இருப்பினும், நல்ல ஜிம்மை தேர்வு செய்வதை விட நல்ல பயிற்சியாளர் இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தை தேர்வு செய்து அவரிடம் பயிற்சி எடுப்பது சிறந்ததாகும்.
அதற்கு நீங்கள் உங்கள் உடல் குறித்து ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏன் இதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் என்றால் உங்கள் பயிற்சியாளர் ஏதாவது தெரிந்து வைத்து இருக்கிறாரா என்பதையும் நீங்கள் சோதித்து தெரிந்துகொள்ளலாம் அல்லவா? அதற்காகத்தான் கூறுகிறேன்.
மேலும், அந்தப் பயிற்சியாளர் உடற்பயிற்சி திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறார். உணவு அட்டவணை வைத்திருக்கிறாரா என்பதையெல்லாம் கவனியுங்கள்.
எந்த உடற்பயிற்சி கூடத்துக்கும் செல்லலாம். ஆனால், பலர் வியர்வை சிந்தி உடற்பயிற்சி செய்யும் இடம் என்பதால் தூய்மையாக இருக்கிறதா என்று முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் சானிடைசரும் கொண்டு செல்லுங்கள்.
இன்றைய அசாதாரண சூழ்நிலையில் அடிக்கடி சுத்தம் செய்யும் ஜிம்மை தேர்வு செய்வது நல்லது என்கிறார் சதீஷ்.
என்ன.. சரியான ஜிம்மை தேர்வுசெய்ய தயாராகி விட்டீர்கள்தானே..!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “