சென்னை: பகலில் வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும் சரி இந்த கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க படாத பாடு பட வேண்டியிருக்கிறது. சிறிது நேரம் நடந்தால் கூட சிலருக்கு வியர்வை ஆறு போல உடலில் ஓடத்தொடங்கி விடும்.
குறிப்பாக வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அணிந்திருக்கும் உடையானது, அலுவலகத்திற்கு செல்வதற்குள் வியர்வையில் நனைந்து விடும். இந்த வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் சில சமயங்களில் அருகில் இருப்பவர்களை முகம் சுழிக்க வைத்துவிடும்.
வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை தடுப்பது குறித்து நிபுணர்கள் கூறும் பயனுள்ள தகவல்களை தற்போது அறிந்து கொள்வோம் வாருங்கள்.
2 முறை குளிப்பது அவசியம்:
உடலில் அதிகமாக வியர்க்கிறது என்றால் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களில் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உடலில் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கலாம்.
ஆடை அணியும் முன் என்ன செய்யனும்?
ஆடை அணியும் முன்னர் உடலில் ஈரம் இல்லாதவாறு நன்றாக துவட்ட வேண்டும். ஈரமாக இருக்கும் உடலில் ஆடை அணிந்தால் அது துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமையுமாம். ஆகவே, உடல் ஈரமாக இருந்தால் துண்டால் முழுமையாக துவட்டிய பின்னர் தான் ஆடை அணிய வேண்டும்.
தலைமுடியை பராமரித்தல்:
முடி அதிகமாக வைத்திருப்பவர்கள் அவற்றை முறையாக பராமரித்தல் மிகவும் அவசியம். ஏனெனில், அவற்றினால் ஏற்படும் வியர்வை, சில சமயங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். மேலும், இந்த வெப்பநிலையில் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக வளரக் கூடியது. அதனால், தேவையில்லாமல் அதிகமாக இருக்கும் முடியை அகற்றுவது நல்லது.
ஆன்டி-பாக்டீரியா சோப்பு:
ஆன்டி-பாக்டீரியா சோப்புகள் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படக் கூடியவை. அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை போக்குவதுடன், துர்நாற்றத்தில் இருந்து பாதுகாக்க வல்லது. ஆகவே, சரும பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின மருத்துவரின் சரியான ஆலோசனையின் படி ஆன்டி-பாக்டீரியா சோப்புகளை பயன்படுத்தலாம்.
எலுமிச்சையின் மகிமை :
வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்குவதற்கு, துர்நாற்றம் ஏற்படும் பகுதிகளில் எலுமிச்சை சாற்றை தடவலாம். மேலும், குளிக்க பயன்படுத்தும் நீரில் எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.
சரியான உடை:
பாலிஸ்டர் துணி போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடைகளானது வியர்வையை தேக்கி வைத்துக் கொள்ளும் திறன் படைத்தது. ஆகவே அவ்வாறான உடைகளை தவிர்த்து விடுவது நலம். இருக்கமான ஆடைகளை அணியாமல், விசாலமான பருத்தி ஆடைகளை அணிவது தான் சிறந்தது. மேலும், ஷூ அணியும் போது காட்டன் சாக்ஸையே பயன்படுத்தினால் இந்த கோடை காலத்தில் வியர்வை துர்நாற்றத்தில் இருந்து சிறிது விலகி இருக்க முடியும்.
வாசனை திரவியங்கள்:
பகலில் வெளி இடங்களுக்கு செல்லும் போது வாசனை திரவியங்களான டியோடரண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவைகள் வியர்வையினால் வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு, அதிகமாக வியர்ப்பதையும் கட்டுப்படுத்துமாம்.
இந்த கோடை காலத்தில், இவ்வாறு சில விஷயங்களை நாம் கடைப்பிடித்தால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றததில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.