ஞாயிறு மாலைக்கு வந்துவிட்டோம்... நாளை திங்கட்கிழமை. ஞாயிற்றுக் கிழமை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் குஷி தான். தினம் லேட்டாக எழுந்திருப்போர் கூட, சண்டே அன்று தூங்கி பொழுதை கழிக்க விரும்பாமல் காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவார்கள். சினிமா, ஷாப்பிங், பீச், பார்க் என கொண்டாட்டம் தான். ஆனால் மறுநாள், திங்கட் கிழமை என்ற எண்ணம் சிலருக்கு முதல் நாள் இரவே சோர்வைத் தருகிறது. தாமதமாகத் தூங்கி, திங்கள் காலையில் சோம்பலாய் எழுந்து, கிளம்ப மனம் இன்றிக் கிளம்பி, தாமதமாக அலுவலகம் வந்து, அரைகுறையாய் வேலைகளைச் சொதப்பி, அவர்களும் டென்ஷன் ஆகி உடன் பணிபுரிபவர்களையும் டென்ஷன் ஆக்கிவிடுகிறார்கள்.
வேறு சிலரோ, திங்கட் கிழமையை எதிர்கொள்ளத் தயங்கி, பாட்டி செத்துட்டாங்க, உடம்பு சரியில்லை என்பதைப் போன்ற காரணங்கள் சொல்லி அன்று வேலைக்கே செல்ல மாட்டார்கள். இந்தப் பிரச்னையை 'மண்டே மார்னிங் ப்ளூ' என்கிறார்கள். இது ஒரு உளவியல் பிரச்னை. மனஅழுத்தம், சோர்வு, நம்பிக்கையின்மை, வேலை, பணியிடச் சூழல் குறித்த எதிர்மறை எண்ணங்கள், வேலைக்குச் செல்வதில் ஆர்வமின்மை போன்றவை 'மண்டே மார்னிங் ப்ளூ' பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள். முறையாகத் திட்டமிட்டு சில பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மண்டே மார்னிங் ப்ளூவை ஈஸியாய் வெல்லலாம்.
பொதுவாக, திங்கள் கிழமை பணியின் முதல் நாள் என்பதால், கடுமையான வேலைப்பளு இருக்கக்கூடும். திங்கள் காலையில் அவசர அவசரமாக வந்து, 'என்ன செய்வது?' எனக் கையைப் பிசைந்துகொண்டு இருக்காமல், சனிக்கிழமை வேலையை முடித்துவிட்டு செல்லும்போதே, திங்கட் கிழமைப் பணிகளுக்கான முன் தயாரிப்பைச் செய்துவிடுங்கள் அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலையில் அமர்ந்து, மறு நாளையும் அந்த வாரத்தையும் எப்படிச் சமாளிப்பது எனப் பணிகளைத் திட்டமிட்டு வகுத்துக்கொள்ளுங்கள்.
திங்கட் கிழமை தாமதமாக எழுந்து அரக்கப்பறக்க அலுவலகம் வராமல், நேரமே எழுந்து உடற்பயிற்சி, தியானப் பயிற்சி செய்து, குறித்த நேரத்தில் பணியிடத்துக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் வேலையைத் தொடங்குவதே அதைப் பாதி வெற்றியாக முடித்தது போலத்தான். எனவே, திட்டமிட்டு பணிகளைத் தொடங்குங்கள். கடினமானப் பணிகளைக் காலையில் வந்ததும் செய்துவிடுங்கள்.
திங்கட் கிழமைகளில் உங்களுக்குப் பிடித்த, உற்சாகம்கொள்ள வைக்கும் உடைகளை அணியலாம். இது, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நம்மைப் பற்றிய பெருமிதமான உணர்வை உண்டாக்கும். நம்மை மற்றவர்கள் மதித்திடச் செய்யும். 'இது போன்ற எளிய விஷயங்கள் நிஜமாகவே நன்றாக வொர்க்அவுட் ஆகும்' என ஆய்வுகள் சொல்கின்றன.
உங்கள் வேலையைப் பற்றி, உங்களைப் பற்றி, உங்கள் நிறுவனைத்தைப் பற்றி, உடன் பணிபுரிபவர்கள் பற்றி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். அது உங்கள் வேலை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். அது நமக்கு மட்டும் அல்ல நாம் பணி செய்யும் சூழலுக்கே மிகச் சிறந்த உற்சாகத்தை வழங்கும்.
இப்படி, திட்டமிட்டு சில பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் மண்டே மார்னிங் ப்ளூ என்ற பிரச்னையை ஈஸியாக வெல்வதோடு, நமது கரியரையும் சிறப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.
(அப்புறம் ஒரு முக்கிய செய்தி: இன்றைக்கு இலங்கைக்கு எதிராக இந்தியா தோற்குமோ, ஜெயிக்குமோ-னு அதற்கெல்லாம் கவலைப்படாதீங்க. நமது வீரர்களே அதைப்பற்றி கவலைப்படமாட்டாங்க.. புரியுதா! அடுத்த மேட்ச்சுல வச்சு செஞ்சுக்கலாம்!)
அப்புறம் என்ன யோசனை! திங்களை வெல்ல இப்போதே ஆயத்தமாகுங்க.. கிளம்புடா கைப்புள்ள...!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.