4 வகைப் பெண்கள்… யாருக்கு எப்படி ஜீன்ஸ் தேர்வு செய்வது? ஃபேஷன் கைடன்ஸ்

முதலில் உங்களின் உடலமைப்பைப் பற்றித் தெரிந்துகொண்டால், எந்த வகையான ஜீன்ஸ் சரியாக இருக்கும் என்பதும் தெரிந்துவிடும்.

By: September 20, 2020, 8:01:03 AM

Fashion Tips for Women : ஆண் பெண் என அனைவரும் விரும்பி அணிந்துகொள்ளும் உடை என்றால் அது நிச்சயம் ‘ஜீன்ஸ்’தான். பலரின் கம்ஃபோர்ட் ஆப்ஷனில் முதல் இடம் வகிக்கும் இந்த ஜீன்ஸ் சரியான அளவில் அணியப்படவில்லை என்றால் நிச்சயம் ஏமாற்றம்தான். சைஸ், ஃபிட் என ஏகப்பட்ட அளவுகோல்களைச் சரிபார்த்து வாங்கும் நமக்குப் பல நேரங்களில் அவற்றை உடுத்திய பிறகு திருப்தியாக இருக்காது. இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.

அதில் முதன்மையான ஒன்று உடலமைப்பு. எல்லோருக்கும் ஒரே போன்ற உடலமைப்பு இருப்பதில்லை. சிலருக்குத் தோள்பட்டை பெரிதாக இருக்கும், சிலரின் இடையளவு மிகவும் குறுகி இருக்கும். ஆனால், மார்க்கெட்டில் வெளிவருவதோ சில குறிப்பிட்ட அளவிலான ஆடைகள்தான். அனைவர்க்கும் ஏற்றபடி இந்த அளவுகள் இல்லையென்றாலும், அதன் தோற்றம் மற்றும் சில குறிப்புகளின் அடிப்படையில் எல்லோர் உடலமைப்பிற்கும் கச்சிதமாகப் பொருந்தும் ஜீன்ஸை தேர்ந்தெடுக்கலாம். பெண்கள் சரியான ஜீன்ஸை எப்படித் தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கான சிம்பிள் டிப்ஸ் இதோ.

முதலில் உங்களின் உடலமைப்பைப் பற்றித் தெரிந்துகொண்டால், எந்த வகையான ஜீன்ஸ் சரியாக இருக்கும் என்பதும் தெரிந்துவிடும். அந்த வரிசையில் பொதுவாகப் பெண்களின் உடலமைப்பை பியர் (Pear), ஆப்பிள், தலைகீழ் முக்கோணம், ஹவர்கிளாஸ் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

நீங்கள் எந்த உடலமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டுபிடிக்க, ஒரே ஒரு மேஷரிங் டேப் எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு, உங்களுடைய தோள்பட்டை, மார்பு மற்றும் இடை அளவுகளை அளந்து குறித்துவைத்துக் கொள்ளுங்கள். அந்த அளவுகளில் உங்களின் மார்பு மற்றும் தோள்பட்டை அளவுகளைவிட இடையளவு சற்று அதிகமாக இருந்தால், நீங்கள் பியர் அல்லது முக்கோண வடிவ உடலமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் பெரும்பாலும் இந்த வடிவமைப்பில்தான் இருக்கிறார்கள் என்ற தரவுகளும் உண்டு.

பியர் வடிவப் பெண்களின் இடைப் பகுதி பெரிதாக இருப்பதனால், அதனை மறைக்கும் விதத்தில் இருக்கும் ஜீன்ஸ் வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வரிசையில் இவர்களுக்கு ஹை-வெய்ஸ்ட் ஜீன்ஸ் (High Waist) பக்கா சாய்ஸ். மேலும், நேரோ (Narrow), மாம் (Mom) மற்றும் பாய் ஃபிரண்டு (Boy Friend) ஜீன்ஸ் வகைகளும் இவர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். உடலோடு ஒட்டியிருக்கும் ஸ்லிம் மற்றும் பென்சில் ஃபிட் ஜீன்ஸ்களை தவிர்ப்பது சிறந்தது.

இவர்களுக்கு நேரெதிராக மார்பு மற்றும் தோள்பட்டையின் அளவைவிட இடையின் அளவு சிறியதாக இருக்கும் உடலமைப்பு கொண்டவர்கள் ஆப்பிள் அல்லது தலைகீழ் முக்கோண உடலமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பார்ப்பதற்குச் சற்று பருமனாகத் தெரிவார்கள்.

ஆப்பிள் வடிவப் பெண்கள் லோ-வெயிஸ்ட்(Low-Waist) ஜீன்ஸை அணியலாம். இவர்களின் தோள்பட்டை அளவு பெரிதாக இருப்பதாலும், சற்றுப் பருமனாகத் தெரிவதாலும் இறுக்கமான ஜீன்ஸ் வகைகளைத் தவிர்ப்பது சிறந்தது. இந்த உடலமைப்பில் உயரம் அதிகமானவர்கள் பாய் ஃபிரெண்டு மற்றும் பூட் லெக் ஜீன்ஸ் வகை சரியாக இருக்கும். உயரம் குறைந்து காணப்படுபவர்கள், ஸ்கின்னி ஜீன்ஸ் வகையைத் தேர்வு செய்யலாம்.

தோள்பட்டை, மார்பு மற்றும் இடையளவைவிட மிகவும் குறுகிய வெயிஸ்ட் பகுதி கொண்டிருப்பவர்கள், ஹவர்கிளாஸ் உடலமைப்பைச் சேர்ந்தவர்கள். பொதுவாகக் கடைகளில் கிடைக்கும் எல்லா வகையான ஜீன்ஸ்களும் ஹவர்கிளாஸ் உடலமைப்பைக் கொண்டிருப்பவர்களுக்குப் பொருந்தும். என்றாலும், ஹை-வெயிஸ்ட், ஸ்கின்னி மற்றும் பென்சில் ஃபிட் ஜீன்ஸ் வகைகள் இவர்களின் தோற்றத்தை மேலும் மெருகேற்றும்.

உயரம் குறைந்து உடல் சற்றுப் பருமனாகத் தெரிபவர்கள் ஹை-வெய்ஸ்ட் (High-Waist) அல்லது மிட்-வெய்ஸ்ட்(Mid-Waist) ஜீன்ஸ் வகையைத் தேர்ந்தெடுக்கலாம். லூஸ் ஃபிட்டிங் ஜீன்ஸ் வகைகள் இவர்களுக்கான சரியான சாய்ஸ். நிச்சயம் இவர்கள் உடலை இறுக்கும் ஜீன்ஸ் வகைகளைத் தவிர்க்கவேண்டும்.

உடலமைப்போடு உயரத்தின் அளவையும் தெரிந்து வைத்துக் கொண்டால் நிச்சயம் பெர்ஃபெக்ட்டான ஜீன்ஸை எளிதில் தேர்ந்தெடுக்கலாம். இது மிகவும் கம்ஃபோர்ட் தோற்றத்தையும் கொடுக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:How to pick the right jeans according to your body type

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X