ஒரு குளிர்ச்சியான செய்தி : மனித உடலின் சராசரி வெப்பநிலை 97.7°F ஆக குறைப்பு

Human body temperature : உடலின் இந்த இயல்பு வெப்பநிலையை 98.6° F-லிருந்து 0.9° F அளவு குறைத்து, இப்போது 97.7° F எனக் கணக்கிட...

நமது உடலின் சராசரி வெப்பநிலை 98.6°F அல்லது 37°C என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், நமது உடலின் இந்த இயல்பு வெப்பநிலையை 98.6° F-லிருந்து 0.9° F அளவு குறைத்து, இப்போது 97.7° F எனக் கணக்கிட வேண்டும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

‘கமிட்டட்’கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

உடலின் வெப்பநிலை 98.6°F அல்லது 37°C என்ற அளவைக் காட்டிலும் அதிகரிப்பதும் குறைவதும் இயல்பானதல்ல. உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையை, காய்ச்சல் எனப் பொதுவாக நாம் அழைக்கும்போதிலும், அதிக வெப்பநிலை சாதாரணக் காய்ச்சலாகவோ, ஹைபர்தெர்மியா (Hyperthermia) என்ற தீவிர நிலையாகவோ இருக்கக்கூடும். அதேபோல், உடலின் வெப்பநிலை குறைவதை, நாம் குளிர் நிலை என்று பொதுவாக அழைக்கும்போதிலும், அது சாதாரண குளிராகவோ, ஃப்ராஸ்ட் பைட் (Frost Bite) என்ற தீவிர நிலையாகவோ இருக்கக்கூடும்.

இயல்பாகவே நமது உடலின் வெப்பநிலை அதிகாலையில் (6 மணியளவில்), அதாவது நல்ல ஓய்வுக்குப் பிறகு குறைந்தும், மாலைப்பொழுதில் (4 – 6 மணியளவில்), அதாவது தொடர்ந்து பணிபுரிந்த பிறகு, சற்று அதிகமாகவும் காணப்படும்.
இவற்றுள் முக்கியமாக நமது மூச்சு, வியர்வை, சிறுநீர் மற்றும் தோலின் பரப்பளவு கூலிங் சிஸ்டங்கள் நம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன என்றாலும், இவை அனைத்தையும் தீர்மானிப்பது நமது மூளை என்ற தலைமைச் செயலகத்தின் ஹைப்போதலாமஸ் பகுதியில் உள்ள வெப்பநிலை சென்சார்கள்தான் (Thermal Sensors). அதனால்தான், ஹைப்போதலாமஸ் உயிரியல் வெப்பமானி (Biological Thermometer) என்று அழைக்கப்படுகிறது..

1851-ம் வருடம், மனிதர்களுக்கு 98.6°F தான் ஸ்டாண்டர்ட் வெப்பநிலை அளவு என்று அறிவிக்கப்பட்டது. இதுவே ஒரு தோராயமான முடிவுதான் என்றாலும் இதுதான் மிகவும் பொருந்திவரக்கூடியது என்பதால், இந்த ஸ்டாண்டர்ட் அளவு இத்தனை வருடங்களாக மருத்துவ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மனித உடலின் வெப்பநிலை சராசரியாக, 0.05°F அளவு குறைந்து வருகிறது. தற்கால மனிதனின் உடல் உயரமும் ஆரோக்கியமும் முன்பைவிட அதிகரித்துள்ளது என்பதாலும், உடலின் வளர்சிதை மாற்ற வினைகள் குறைந்து வருவதாலும் உடலின் வெப்பநிலை குறைந்துள்ளது என்கிறது, இந்த ஆய்வை மேற்கொண்டுள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்.
மனிதனின் நோய் எதிர்ப்பு ஆற்றல் முன்பைவிட அதிகரித்து, அதன் விளைவாகக் காசநோய், அம்மை நோய் போன்ற பல்வேறு தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்கம் குறைந்துகொண்டே வருவதால், இவற்றின் காரணமாக ஏற்படும் செல் வீக்கங்களும் வளர்சிதை மாற்றங்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. பல்வேறு நோய்களுக்குத் தடுப்பூசிகள், புதிய மருந்துகள், பெருகி வரும் மருத்துவ உபகரணங்கள் என மருத்துவ அறிவியலின் கண்டுபிடிப்புகள் மட்டுமன்றி, தனிமனிதனின் சுகாதாரமும் பெருமளவு மேம்பட்டுள்ளதால்தான் இந்த மாற்றம் உருவாகி உள்ளது.

அனைத்துக்கும் மேலாக, நம் உடலின் இயல்பு வெப்ப நிலையைத்தான் 97.7° F எனக் குறைத்திருக்கிறதே தவிர, 98.6° F என்ற பழைய அளவைக் காய்ச்சல் என்றோ, அதற்கு மருத்துவம் பார்க்கச் சொல்லியோ, காய்ச்சலின்போது நாம் பயன்படுத்தும் காய்ச்சல் மருந்துகளின் அளவுகளிலோ, அதன் சிகிச்சை முறைகளிலோ எந்த மாற்றங்களையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பதால், இது வியாபாரத்திற்கான குறியீடு அல்ல, நமது ஆரோக்கியம் வளர்ந்திருப்பதற்கான அறிவிப்புக் குறியீடு என்றே நாம் கருத வேண்டும்.
புவி வெப்பமடைதல், புதிய வகையான தொற்றுநோய்கள் என அன்றாடம் நாம் கலங்கி நிற்கும் இச்சமயத்தில், நமது ஆரோக்கியத்தின் குறியீடுகளுள் ஒன்றாக 97.7°F என்று காய்ச்சலின் சூட்டைக் குறைத்திருக்கும் இந்தச் செய்தி நமக்கான குளிர்ச்சியான செய்திதான் என்று புரிந்துகொண்டு இதை நாம் வரவேற்போம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close