அழுதால் கண்களில் ரத்தம்; விசித்திர நோயின் பிடியில் 3 வயது பெண் குழந்தை!

இந்த நோயை நிரந்தரமாக க்யூர் செய்வது குறித்து மருத்துவர்களால் எந்தவொரு பதிலையும் தர முடியவில்லை.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தை அஹானா, ஒரு மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

16 மாதத்திற்கு முன்புவரை அஹானாவிற்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது அவளது காதுகள், கண்கள் மற்றும் பிறப்புறுப்பில் இருந்தும் ரத்தம் வழிந்துக் கொண்டிருக்கிறது. இதனால், தனியார் மருத்துவமனையில் அஹானா தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்.சிரிஷா கூறுகையில், “அந்தப் பெண் குழந்தை ‘ஹெமாடைட்ராசிஸ்’ எனும் ஒருவகை அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் ஏற்பட்டவருக்கு வியர்வை கூட ரத்தமாக தான் வரும்” என்கிறார்.

தற்போது சிகிச்சை தொடங்கிய பின்னர், அந்த குழந்தையின் ரத்தம் கசிவது குறைந்துள்ளது. இந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டால், அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்படும். ஆனால், இது அந்த குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதனை நிரந்தரமாக சரி செய்ய முடியாது, ஆனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அஹானாவின் தந்தை மொஹம்மத் அஃப்சல் கூறுகையில், “இந்த நோயை நிரந்தரமாக க்யூர் செய்வது குறித்து மருத்துவர்களால் எந்தவொரு பதிலையும் தர முடியவில்லை.

என் பெண்ணுக்கு ஒரு வயது இருக்கும் போது, அவளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அந்த நேரத்தில் அவள் ஜன்னியால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதனை நிரந்தரமாக சரி செய்ய மருத்துவர்களிடம் கேட்டேன், அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை” என்றார்.

மேலும், “என் பெண்ணின் சிகிச்சைக்காக தெலங்கானா மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உதவுவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

இந்த நோய் குறித்து கூறும் மருத்துவர்கள், “இந்த ஹெமாடைட்ராசிஸ் மிகவும் அரிதான ஒன்று. மிகச் சில கேஸ்களே இதுபோன்று உள்ளன. இந்த நோயின் முதன்மை நிலைக்கு காரணம், இரத்த நாளங்கள் உடைந்து, வியர்வை நாளங்களுடன் இணைந்து வியர்வைக்கு பதிலாக ரத்தத்தை வெளியேற்றுகின்றன. இந்த நோயால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருத தேவையில்லை. ஆனால், இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close