குழந்தைகளுக்கு நிதிக் கல்வி தேவையா?

குழந்தைகள் வளரும்போதே பணத்தின் அருமையையும் பணத்தைக் கையாளும் விதத்தையும் புரிந்துகொள்வது நல்லது.

ராசி

குழந்தைகளுக்கு நிதிக் கல்வி தேவைதான் என்கிறார்கள், நிபுணர்கள். அப்படி அவசியம் என்றால் எந்த வயதில் வழங்கலாம் என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக பலரும் குழந்தைகளிடம் பணம் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். இன்னும் சிலர், அவர்களிடம் பணம் தொடர்பான பிரச்சினைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், குழந்தைகளிடம் பணம் பற்றிப் பேசத் தயக்கம் காட்டக் கூடாது என்பதே நிபுணர்களின் கருத்து.

பொதுவாக பெற்றோர் கூறுவதைவிட ஆசிரியர் கூறுவதையும், சாதாரணமாக வேறு புத்தகங்களில் பார்ப்பது படிப்பதைவிட ‘புக்ல போட்ருக்கு’ என்பதற்கும் குழந்தைகள் கொடுக்கும் மரியாதையே வேறு. எனவே, பாடத் திட்டத்தில் குழந்தைகளுக்குத் தேவையான நிதி தொடர்பான விஷயங்கள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
பள்ளிப் பருவத்திலேயே புத்திசாலித்தனமான நிதித் தேர்வுகள், பட்ஜெட், சேமிப்பு இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதால் பின்னாளில் நிதி பற்றிய சிக்கல்களில் உழலாமால் இருக்கலாம்.

இது இளம் பருவத்தினரை நிதி குறித்த அறிவு, திறன்கள், தன்னம்பிக்கை உடையவராக மாற்றி, தன் வாழ்க்கை பொறுப்புகளை ஏற்று, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அதிக பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்வார்கள். பள்ளியில் நிதிக் கல்வியில் இலக்குகள் நிர்ணயம், கற்றலின் விளைவுகள், குழந்தைகளுக்கான சரியான அணுகுமுறை, நிதித் திட்டமிடல், முடிவெடுத்தல், நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

நிதிக்கல்வி எவ்வளவு சிறிய வயதிலிருந்து முடியுமோ அவ்வளவு சிறிய வயதிலிருந்து தொடங்குவது நல்லது, இது மாணவப் பருவம் முடிவடையும்வரை நீடிப்பது சிறந்த வழிமுறை. இது சாதாரண பிராஜக்டுகள் போல அல்லாமல் பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.

பணம் தொடர்பாகக் குழந்தைகள் முக்கியமாக அறிந்திருக்க வேண்டியவை என 10 விஷயங்கள் கருதப்படுகின்றன. சேமிப்பது எப்படி, பணம் பற்றி கணக்கு வைத்துக்கொள்வது, பணத்திற்கான மதிப்பை பெறுவது, பொறுப்பாக செலவு செய்வது, பணம் பற்றி எப்படி பேசுவது, பட்ஜெட்டுக்குள் வாழ்வது எப்படி, முதலீடு செய்வது எப்படி, தொழில்முனைவுப் பண்பை எப்படி வெளிப்படுத்துவது, கடனை எப்படிக் கையாள்வது, உலகை மாற்றப் பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது ஆகிய இத்தனை விஷயங்களும் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டியவை. அந்தந்த வயதிற்கேற்ப அந்தந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்கலாம்.

நிதி தொடர்பான விஷயங்களின் அறிமுகம்

குழந்தைகளுக்கு நிதி தொடர்பான விஷயங்களை 5 முதல் 8 வயதில் அறிமுகம் செய்யலாம். கொஞ்சம் பணம் கொடுத்து, செலவு செய்ய வைப்பது, சேமிக்கச் சொல்வது, பிறருக்கு கொடுப்பது ஆகியவற்றைச் செய்ய வைக்கலாம். பொத்தாம்பொதுவாக சேமிப்பு பற்றி அறிவுரை கூறி, சேமிப்பில் ஈடுபடுத்தாமல், எதற்காக சேமிப்பில் அவர்களுக்கு ஆர்வத்தையும் சாதனை உணர்வையும் தூண்டும் வகையில், அவர்களோடு சேர்ந்து விவாதித்து, வீடியோ கேம், வாங்குவது போன்ற, குறுகியகால மற்றும் சைக்கிள் வாங்குவது போன்ற நீண்ட கால இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

9-12 வயதில் சேமிப்பு, செலவு, பிறருக்கு கொடுப்பது ஆகியவற்றில் கட்டுப்பாட்டைக் கற்றுக்கொடுக்கலாம். தொழில்முனைவுச் செயல்களில் ஈடுபட ஊக்கம் அளிக்கலாம்.
13-15 வயதில் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். செலவுகளுக்குக் கணக்கு வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

16-18 வயதில் வீட்டின் நிதி நிலைமையில் பிள்ளைகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
மொத்தத்தில், குழந்தைகள் வளரும்போதே பணத்தின் அருமையையும் பணத்தைக் கையாளும் விதத்தையும் புரிந்துகொள்வது நல்லது. இது சிறுவர்களிடத்தில் பொறுப்புணர்ச்சியையும் உயர்ந்த விழுமியங்களையும் உருவாக்க உதவும்.

×Close
×Close