மனித மாண்பை உணர்த்தும் மகத்தான ஓவியங்கள்: வானம் கலைத் திருவிழா தொகுப்பு
ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைந்து சென்னையிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் 'வானம் கலைத்திருவிழா' என்ற ஓவியக் கண்காட்சி நடத்துகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைந்து சென்னையிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் 'வானம் கலைத்திருவிழா' என்ற ஓவியக் கண்காட்சி நடத்துகிறது.
கலை என்பது தமிழ் பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாகவும் மனித குலத்தின் தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அதைத்தாண்டி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதற்கும், கலைஞனின் புரட்சிகரமான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ஒரு மிகப்பெரிய கருவியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
சமூகத்தில் சாதிய, இனம், மொழி, மதம், வர்க்கம், பாலினம் போன்றவற்றைக்கொண்டு மக்களை ஒடுக்குமுறை செய்வது ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டு வருகிறது. இதில், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றையும் அவர்களின் எழுச்சியையும் ஆவணப்படுத்தும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைந்து சென்னையிலுள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் 'வானம் கலைத்திருவிழா' என்ற ஓவியக் கண்காட்சியின் மூலம் தலித் சமூகத்தின் எழுச்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கலைப்படைப்புகளையும், 23 கலைஞர்களையும் மக்களின்முன் கொண்டு சேர்க்கின்றனர்.
ஓவியர் சௌ செந்தில்
இந்த ஓவியக் கண்காட்சியில் பங்குபெற்ற ஓவியர் சௌ செந்தில் தமிழ் இந்தியன் எஸ்பிரஸிடம் கூறியதாவது:
Advertisment
Advertisements
"பொதுவாக அழகியலை காட்சிப்படுத்தும் கலைப்படைப்புகளில் இருந்து விலகி சமூகத்திற்காக கருத்துள்ள கலைப்படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் விழிம்பு நிலையில் இருக்கும் மக்களின் மனோபாவத்தை கலையின் மூலம் காட்சிப்படுத்தவேண்டும் என்பதே என் குறிக்கோள். இங்கு மதம் மற்றும் மொழி சார்ந்த அரசியல் இருப்பதனால், அறிவு சார்ந்து இயங்கும் ஒரு சமூகத்தில் குருவாக கௌதம புத்தரை பார்க்கிறேன், ஆகையால் அவரை மையப்படுத்தி என்னுடைய கலைகள் இருக்கும்.
தனித்தனியாக தன்னுடைய படைப்புகளை காட்சிப்படுத்திக்கொண்டிருந்த ஒரே சித்தாந்தத்தில் இருக்கின்ற கலைஞர்களை நீலம் பண்பாட்டு மையம் 'ஏப்ரல் மாதத்தின் வரலாற்றின்' அடிப்படையில் ஒருங்கிணைப்பது, எங்களுக்கு தருகின்ற சிறந்த அங்கீகாரம் என்று கூறுவேன்”, என்று கூறுகிறார்.
ஓவியர் ஷாஜன்
மேலும், ஓவியர் ஷாஜனிடம் பேசியபோது,
"நான் டிஜிட்டல் ஓவியங்கள் மற்றும் கார்ட்டூன்கள் வரைந்து வருகிறேன். பொறியியல் பட்டப்படிப்பை முடித்து தற்போது இணை இயக்குனராக பணிபுரிகிறேன். கலை மீதுள்ள ஆர்வம் எனக்கு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. கலைத்துறைக்குள் வருவதற்கான முக்கிய காரணமே, கலை மக்களுக்கானது என்பதை உணர்த்துவதற்காக தான். மேலும், சமூகத்தின்மூலம் நான் பெறப்பட்ட வலியையும், நான் உருவகப்படுத்திய காட்சிகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு ஊடகமாக கலை செயல்படுகிறது”, என்று கூறுகிறார்.
ஓவியர் நடராஜன்
கண்காட்சியின் தொகுப்பாளர் ஓவியர் நடராஜன் கூறியதாவது, "ஒரு கலை என்பது மக்களின் மனதில் புதிய கேள்விகளை உருவாக்கவேண்டும், அந்த கேள்விகள் சமூகத்தில் நடக்கின்ற அடக்குமுறைகளுக்கும், அதிகாரத்திற்கும் எதிராக இருக்கவேண்டும்.
எல்லாவற்றையும் சமமாக மதிப்பது, 'சமத்துவம் சகோதரத்துவம் ஜனநாயகம்' என்னும் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் மனிதமாண்பே இந்த ஓவிய கண்காட்சியின் முக்கிய கருவாக இருக்கிறது என்று நம்புகிறோம்”, என்று கூறுகிறார்.
ஓவியர் சரண்ராஜ்
ஓவியர் சரண்ராஜ் கூறியதாவது:
"தலித் சமூகத்தில் இருந்து வரும் கலைஞர்கள் கலையை எப்படி பார்க்கிறார்கள், அவர்கள் தங்களின் படைப்புகளை எவ்வாறு விளக்குகிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த ஓவியக் கண்காட்சி ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இதில் நான் ஒப்பாரி கலைஞர்களின் உருவப்படங்களை பறையில் செதுக்கியிருக்கிறேன். தென் தமிழகத்தில் திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற ஊர்களிலிருக்கின்ற ஒப்பாரி கலைஞர்களை நேரில் சென்று சந்தித்தபோது படைக்கப்பட்ட கலைவடிவம் இது”, என்று கூறுகிறார்.
ஏப்ரல் 27ஆம் நாள் ஓவிய கண்காட்சி முடிவடைகிற நிலையில், தலித் இலக்கியம் பற்றியக் கூடலை இரண்டு நாள் மாநாடாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கிறது. இது மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil