மழலை: பிரபஞ்சத்தின் கொடை!

இறுதியாக செயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது

சரவணன் சந்திரன்

மேரி கிஷோர் தம்பதியினருக்கு ஒரு தீராத கவலை. அந்தக் கவலை அந்தத் தம்பதியினருக்கு மட்டும் கிடையாது. உலகை அச்சுறுத்தும் கவலை அது. உலக மக்கள் தொகையில் பதினைந்து சதவீதம் பேருக்கு அந்தக் கவலை இருக்கிறது. இந்தியளவில் பார்த்தாலும் இதே அளவிற்குத்தான் கவலை கொள்கிற கூட்டம் இருக்கலாம். ஆனாலும் இந்தியளவில் இப்போதுதான் அந்தக் கவலை மெல்ல எல்லா திக்குகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. குழந்தையின்மை என்கிற கவலைதான் அது.

குழந்தையின்மை என்பது வெறும் குறைபாடு மட்டும்தான் என்கிற புரிதல் இப்போதுதான் வந்திருக்கிறது. ஆனால் எத்தனையோ போராட்டங்கள், தெளிவில்லாத சமூக அமைப்பின் ஏளனங்கள், சந்தேகங்கள் நிரம்பிய குடும்ப வாழ்வு இவற்றையெல்லாம் கடந்துதான் இந்தத் தன்னிறைவான இடத்தை அடையவே முடிந்திருக்கிறது. உதாரணமாக பேபி கிஷோர் தம்பதியினரையே எடுத்துக்கொள்வோமே. இருவருக்கும் 35 வயதில்தான் திருமணம் ஆகியிருக்கிறது.

ஏற்கனவே தாமதமான திருமணம். இத்தனை வயதான பின்னரும் குழந்தையில்லை என்கிற அம்சமும் வந்து சேர்ந்தால் என்ன ஆவார்கள்? அதுதான் அவர்களுக்கும் நடந்திருக்கிறது. வசைகள், கிண்டல்கள், ஏளனங்கள் இவற்றையெல்லாம் கடந்தே அவர்கள் இன்னொரு கட்டத்திற்கு நகர முடிந்திருக்கிறது.
என்ன செய்யலாம்?

இந்த வசைகளில் இருந்து தப்பிப்பதற்காக வாடகைக் குழந்தை முறைக்கோ தத்தெடுக்கும் முறைக்கோ போய்விடலாமா என யோசித்திருக்கிறார்கள். எல்லா பக்கங்களிலும் அவர்களைக் குழப்பங்கள் சூழ்ந்திருந்த காலகட்டமாக அது இருந்தது என வர்ணிக்கிறார்கள். எதைப் பார்த்தாலும் பயம் தயக்கம் என இனம்புரியாத மனவேதனைகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருந்தனராம். செயற்கை முறையில் கருத்தரிப்பதற்கு உடல்ரீதியிலாக பேபி தயாராக இருக்கிறார் என்கிற புரிதலும் அவர்களுக்கு எல்லா முறைகளையும் பரிசோதித்த பிறகுதான் வந்திருக்கிறது.

இறுதியாக செயற்கை முறையில் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற தெளிவான முடிவிற்கு அவர்கள் வந்த போது பேபிக்கு 39 வயது. 39 வயதில் இது சாத்தியமா என அவர்கள் கேள்வி எழுப்பிய போது மருத்துவ உலகம் தயாராக அதற்கான நேர்மறையான பதிலையும் வைத்திருந்தது.

சென்னையைச் சேர்ந்த மேரி 63 வயதில் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார். அதுதான் இந்திய அளவில் இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதில் அதிக வயது. மேரிக்காவது இந்த வயதில் ஒரு குழந்தைதான் இந்த முறையில் பிறந்தது. தமிழகத்தைச் சேர்ந்த பிருந்தாவிற்கு இதே முறையில் இரட்டைக் குழந்தை பிறந்த போது வயது 56. லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்த இரட்டை குழந்தைகள் பிறந்த சாதனை பதிவாகியிருக்கிறது.

இந்தத் தகவல்கள் பேபி மற்றும் கிஷோர் தம்பதியினருக்கு நம்பிக்கையைத் தந்தன. துணிந்து களத்தில் இறங்கிவிட்டார்கள். அவர்கள் நம்பிக்கை பொய்க்கவில்லை. முத்து முத்தான இரண்டு குழந்தைகள் ஒரே பிரசவத்தில். ஆணொன்று பெண்ணொன்று என அவர்கள் குடும்பத்தில் நிரந்தரமான சந்தோஷம் குடிகொண்டுவிட்டது.

இதில் பயன்பெற்றவர்கள் உண்மையில் லண்டனைச் சேர்ந்த லூயிஸ் பிரவுனிற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்தான் 1978 ஆம் வருடம் வெற்றிகரமாக இந்த மருத்துவ முறையை உலகிற்குத் தாரை வார்த்தார். இதைக் கண்டுபிடிப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து அது குறித்த ஆராய்ச்சிகளைச் செய்திருக்கிறார். அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டவும் செய்தார். அதைத்தான் இன்றளவும் உலகம் முழுக்கவும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close