Motivation for Women's : பிரச்னைகள் இல்லாத வாழ்க்கையே கிடையாது என நாம் துவண்டு போயிருக்கும் போது பலர் ஆறுதல் கூறுவார்கள். அது உண்மையும் கூட தான். ஒவ்வொருவருக்கும் பிரச்னைகளின் வடிவம் மட்டுமே மாறும், ஆனால் அது இல்லாத ஒருவரும் இந்த உலகத்தில் இல்லை. ’நமக்கு மட்டும் ஏம் இப்படியெல்லாம் நடக்குதுன்னு’ பல நேரம் நமக்குள்ளேயே புலம்பியிருப்போம். ஆனால் நம் அருகில் இருப்பவருக்கு, அதைவிட பெரிய பிரச்னை இருக்கும். அவர்களுடன் ஒப்பிட்டால் நமது பிரச்னை காற்றில் பறக்கும் மண் துகள் போல தெரியும்.
சரி... இதுவரை வாழ்க்கையில் பல சோதனைகளை அனுபவித்து, கடினமான தருணங்களில் வாழ்ந்து, இனி என் கைல எதுவும் இல்ல எனும் கையறுநிலையில் இருப்பவர்களா நீங்கள்? அப்படியெனில் இந்த கட்டுரை நிச்சயம் உங்களுக்குள் புது ரத்தத்தை பாய்ச்சும். பெண்கள் மென்மையானவர்கள் கடினமான எதையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது, என காலம் காலமாக இந்த சமூகம் பெண் மீது புகுத்திய புனிதத்தை பலர் பொய்யாக்கியிருக்கிறார்கள். அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த லதா அருண்குமாரும்... விழுந்து விழுந்து தான் வாங்கிய அடிகளால் இன்னும் வலிமையாகியிருக்கிறார். பொதுவாக, வாழ்க்கையில் பெருஞ்சோகம் என ஒன்று இருந்தாலே, அதை நினைத்து நினைத்தே மொத்த காலத்தையும் கரைத்து விடுவோம். ஆனால் லதா எதிர் கொண்டதோ பல பெருஞ்சோகங்கள். புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல, அத்தனை பிரச்னைகளைக் கடந்தும், முகத்தில் அமைதியும், பேச்சில் கனிவுமாக பேச ஆரம்பிக்கிறார்... (லதா யார் என்பதை நாம் கூறுவதற்கு பதிலாக அவர் வார்த்தைகளிலேயே குறிப்பிடுகிறோம்)
“நா லதா அருண்குமார், மேக்கப் ஆர்டிஸ்ட், பியூட்டிஷியன், ஆர்ட்ஸ் & கிராஃப்ட்ஸ் பயிற்றுவிப்பாளர். தேஜுஸ் பியூட்டி பார்லர் & அகாடமி, தேஜுஸ் ஆர்ட்ஸ் & கிராஃப்ட்ஸ்ன்னு 2 நிறுவனங்களை நடத்திட்டு வர்றேன். அடிப்படைல நான் மேக்கப் ஆர்டிஸ்ட். தூர்தர்ஷன்ல டெம்பரவரியா வேலை செஞ்சிட்டு இருந்தேன். அங்க மேக்கப் ஆர்டிஸ்டா நிரந்தர வேலைல இருந்த அருண் குமாரும் நானும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர் மங்களூர்ல செட்டில் ஆகியிருக்கும் மலையாளி குடும்பத்தைச் சேர்ந்தவரு. எங்க வீட்ல 4 அண்ணன்களுக்கும் நான் ஒரே செல்ல தங்கச்சி. ஸோ, எங்க வீட்ல கடைசி வரைக்கும் எங்க காதல ஒத்துக்கவே இல்ல. உயிருக்கு உயிரா நேசிச்ச அருண், என்ன உயிரா பாத்துக்கிட்ட அப்பா, இவங்க ரெண்டு பேரையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலைமைல நான் இருந்தேன். வீட்ல ஒத்துக்க மாட்டேன்னதும், ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு எல்லாம் நான் யோசிக்கல. ஒரு கட்டத்துல தற்கொலை முடிவெடுத்து தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன்” என்ற லதா தனது பழைய நினைவுகளை கொஞ்சம் குரல் நடுங்க பகிர்கிறார்.
“3 ஹாஸ்பிடல் போய் இது கஷ்டம்ன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. அப்புறம் 4-வது ஹாஸ்பிடல்ல ஒருவழியா என்ன காப்பாத்திட்டாங்க. எனக்கு ஹாஸ்பிடல் சைடுல நடந்த ஒரே நல்ல விஷயம் இது தான். காரணம் என்னன்னு பின்னாடி சொல்றேன். அப்பாவ கூப்பிட்டு பேசிய டாக்டர், அவங்க ஆசைப்படுறத பண்ணி வைங்க-ன்னு அட்வைஸ் பண்ணாரு. அப்றம் ஒருவழியா 2005-ல திருமணம் ஆனது. அதுக்கப்புறம் கர்ப்பமானேன். மருத்துவர்களோட அலட்சியத்துனால கருவுல இருக்குறது ரெட்டைக் குழந்தைன்னு 5 மாசம் கழிச்சு தான் சொன்னாங்க. எனக்கு ஆரம்பத்துல இருந்தே ஒரு குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் தான் கொடுத்தாங்க. திடீர்ன்னு ரெட்டை குழந்தைன்னு சொன்னதும் எங்களுக்கே ஒண்ணும் புரில. எங்கக் குடும்பத்துலயும் யாருக்கும் ரெட்டைக் குழந்தை இல்ல. இதோட விளைவா, குழந்தைங்களுக்கு சப்ளிமெண்ட் பத்தாம ரொம்ப வீக்கா இருந்தாங்க.
ஒரு நாள் திடீர்ன்னு பிரசவ வலி வந்திடுச்சு. என்னோட ரெகுலர் டாக்டர் கிட்ட ஃபோன் பண்ணி கேட்டா, நாள் இருக்கு பொறுமையா வாங்கன்னு சொன்னாங்க. என்னால வலி தாங்க முடியாம குரோம்பேட்டைல வீட்டுப் பக்கத்துல இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனாங்க. அப்போ எனக்கு 7-வது மாசம் முடியுற நேரம். ஹாஸ்பிடல் வாசல்லயே (கார்ல) பெண் குழந்தை பிறந்துடுச்சு. வயித்துல இருந்த இன்னொரு குழந்தையோட, துணில சுத்தி கிட்டத்தட்ட மார்ச்சுவரிக்கு கூட்டிட்டு போற மாதிரி என்ன கூட்டிட்டு போனாங்க. என்ன பாத்த எங்கம்மா நான் இறந்துட்டேன்னு அதிர்ச்சியாகிட்டாங்க. அந்த மன அழுத்தத்துனால, அவங்க மனநிலை பாதிக்கப்பட்டது எங்களுக்கு 3 மாசம் கழிச்சு தான் தெரிய வந்துச்சு.
உள்ள என்ன கூட்டிட்டு போய் 10 நிமிஷத்துல ரெண்டாவது ஆண் குழந்தையும் பிறந்துடுச்சு. அப்போ இருந்ததுல அது தான் பெரிய ஹாஸ்பிடல், ஆனா அந்த மருத்துவமனைல அடிப்படை வசதி கூட இல்ல. மயக்கம் தெளிச்சு குழந்தைங்க எங்கன்னு கேட்டதுக்கு, குழந்தைங்க ரொம்ப சீக்கிரம் பிறந்ததால, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பிட்டோம்ன்னு சொன்னாங்க. இது சம்பந்தமா எங்க யார் கிட்டயும் எதுவும் கேக்கவும் இல்ல, சொல்லவும் இல்ல. சாயங்காலம் 6.30 மணிக்கு டெலிவரியாகி நைட் முழுக்க குழந்தைய பாக்க முடிலன்னு புலம்பிக்கிட்டே இருந்தேன். அடுத்த நாள் காலைல என்ன டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்புனாங்க.
எழும்பூர் ஹாஸ்பிடல்ல, எனக்கு பொண்ண மட்டும் தான் காட்டுனாங்க. பையன கேட்டதுக்கு, ஸ்பெஷல் கேர் தேவைப்படுதுன்னு, அவன் தனியா இருக்கான்னு சொன்னாங்க. மதியம் எனக்கு சாப்பாடு கொடுக்க வந்த அண்ணி என்னை சமாதானப்படுத்துனாங்க. அப்புறம் தான் குழந்தை இறந்தது எனக்கு தெரிய வந்துச்சு. அவனை நினைச்சு, இருக்க பொண்ண விட்டுடாதன்னு அண்ணி சொன்னது மட்டும் என் ஆழ் மனசுல பதிஞ்சது. நான் முதல் தளத்துல நின்னுட்டு இருந்தப்போ, கீழ எண்ட்ரென்ஸ்ல தூரமா நின்னு குழந்தைய காட்டுனாரு என் கணவர். அந்த குழந்தைக் கிட்ட போய்ட்டு, இந்த குழந்தைக்கிட்ட வந்தா இன்ஃபெக்ஷன் ஆகிடும்ன்னு கடைசி வரைக்கும் அவன் முகத்தை பக்கத்துல கூட பாக்க விடாம தடுத்துட்டாங்க.
இது நடந்து கொஞ்ச நேரம் கழிச்சு, ட்ரிப் பேடோட இருக்கக் கூடாது, அதனால போய்ட்டு நாளைக்கு வாங்கன்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. எனக்கு அவ்ளோ ஆத்திரம் வந்தது. இத முதல்லயே சொல்லிருந்தா, நான் அந்தக் குழந்தைய பாத்திருப்பேனேங்கற ஏக்கத்தை என்னால கட்டுப்படுத்த முடில. இப்படி இயற்கைக்கு புறம்பா என்னல்லாம் நடக்கக் கூடாதோ, அதெல்லாம் என் வாழ்க்கைல நடந்தது.
15 நாள் பொண்ணுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க. நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்குன்னு டாக்டர்ஸே சொன்னாங்க. சிரிப்பா, என் கூட நல்லா ஒத்துழைப்பா... எப்படியும் மீண்டு வந்துருவான்னு நம்பிக்கையோட இருந்தோம். திடீர்ன்னு ஒருநாள் வந்து எங்க 2 பேர் கிட்டயும் பிளட் குரூப் கேட்டாங்க. குழந்தைக்கு ரத்தம் தேவைன்னு சொன்னதும், நான் கொடுக்குறேன்னு என் கணவர் சொன்னாரு. அதெல்லாம் வேணாம், நாங்களே வச்சிருக்கோம்ன்னு சொன்னாங்க. நாங்க எவ்வளவோ சொல்லியும், அவங்க அத ஏத்துக்கல. சரின்னு அங்க இருந்த ரத்தத்தையே குழந்தைக்கு ஏத்துனாங்க. ரத்தம் ஏற ஏற மூச்சு திணறி குழந்தை இறந்துடுச்சு” அமைதியாகிறார் லதா.
”இதுல இருந்து எங்களால மீண்டு வரவே முடில. ரொம்பப் பெரிய மன அழுத்தத்துல இருந்தோம். என் கணவர் ரொம்ப சென்ஸிடிவானவர், ஆனா என் முன்னாடி எதையும் காமிச்சிக்காம, அவருக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டாரு. இதுல இருந்து வெளில வர தான், குழந்தைங்களுக்கு டிராயிங் & கிராஃப்ட்ஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். தவிர, வேறு சில வகுப்புகளுக்கும் என்னை, என் கணவர் அனுப்பி வச்சார். முதல்ல 3 குழந்தைங்க தான் வந்தாங்க. அதுக்கப்புறம் தலா 50 ஸ்டூடெண்ட்ஸ் வீதம் ஒருநாளைக்கு 4,5 பேட்ச் எடுக்குற அளவுக்கு டெவலப் ஆனேன். இதெல்லாத்துக்கும் என் கணவர் எனக்கு உறுதுணையா இருந்தாரு.
ஒன்றரை வருஷம் கழிச்சு 2-வது முறை கர்ப்பமான நேரம் எங்களுக்கு நிறைய மாற்றம் நடந்தது. மனசு லேசாகி, பாஸிட்டிவ் வைப்ரேஷன்ஸ் தெரிய ஆரம்பிச்சது. பெண் குழந்தையும் பிறந்தா, பேரு தேஜல். அவளுக்கு மூன்றரை வயசு இருக்கப்போ, 2012 ஜூன்ல என் கணவருக்கு காய்ச்சல் வந்தது. 6 வருஷம் அவர் கூட வாழ்ந்திருக்கேன், அவருக்கு உடம்பு சரியில்லாம போகவே போகாது. அந்த காய்ச்சல் எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. ஹாஸ்பிடல்ல பேக்டீரியல் இன்ஃபெக்ஷன்னு சொன்னாங்க. சில நாள் கழிச்சு காய்ச்சல் சரியானாலும், அவர் வீக்காவே இருந்தாரு. திரும்ப ஜூலைலயும் காய்ச்சல் வந்தது, அவருக்கு உடல் எடையும் குறைஞ்சது. வெவ்வேறு ஹாஸ்பிடல்ல மாத்தி மாத்தி பாத்தோம். எல்லாரும் சாதாரண காய்ச்சல்ன்னு தான் சொன்னாங்க. அப்றம் ஒரு டாக்டர் இவருக்கு மஞ்சக்காமாலைன்னு சொன்னாரு. என் கணவர் டீ டோட்லர், அவருக்கு எப்படி இது வந்துச்சுன்னு டாக்டர்ஸே ஆச்சர்யமானாங்க.
குழந்தையையும் வச்சிக்கிட்டு, அவரை கூட்டிட்டு தினமும் ஹாஸ்பிடல் போனேன். திடீர்ன்னு அவர் உடம்பு வைப்ரேட் ஆகுது, எல்லாரையும் வெறுக்குறாரு, ஆனா என் கிட்ட மட்டும் சாந்தமா இருந்தாரு. கடைசியா ஆகஸ்ட்ல அவர் தவறிட்டாரு. எனக்கு என்ன நடக்குதுன்னே தெரில. டாக்டர்ஸ் எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க. அவர் இறந்ததுக்கு அப்றம், காரணம் தெரிஞ்சே ஆகனும்ன்னு நான் சண்டை போட்ட பிறகு தான், அவருக்கு ‘மெனஞைட்டிஸ்’ன்னு சம்மரில கொடுத்தாங்க, அதாவது மூளைக்காய்ச்சல். இதுக்கு என்னன்னு காரணம் கேட்டு இன்னும் அதிர்ச்சியாகிட்டேன். தொடர்ச்சியா காய்ச்சல் இருந்தா ஃபைனலா இப்படி ஆகும்ன்னு சொன்னாங்க. காய்ச்சல் வந்த முதல் நாள்ல இருந்து 3 மாசமா நாங்க ஹாஸ்பிடலுக்கு தான வந்திட்டு இருந்தோம். அப்போ அத குணப்படுத்தாதது யார் தப்பு. மருத்துவர்களுக்கு ஒருத்தரோட உயிர் பத்தோட, பதினொன்னு, ஆனா நோயாளிக்கும், அவங்கள சார்ந்தவங்களுக்கும்? நான் எல்லா மருத்துவர்களையும் சொல்லல, ஆனா அலட்சியமான பல டாக்டர்களும் இங்க தான் இருக்காங்க.
என் கணவர் என்ன விட்டு போன அதிர்ச்சியில அவர் இறந்துப்போறதுக்கு முன்னாடி, பின்னாடி தலா 4 மாசம் நடந்த பெரும்பாலான விஷயங்கள் எனக்கு நினைவுல இல்ல. அது தான் நல்லது, பழச கிளறாதீங்கன்னு டாக்டரும் சொன்னாங்க. என் வாழ்க்கைல நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. என் கணவரோட வாரிசு வேலைக்காக 8 வருஷமா போராடிட்டு இருக்கேன். நமக்குன்னு ஒரு அடையாளம் வேணுங்கறதுக்காக, சொந்தக்கால்ல நிக்குறேன்.
பிரைடல் மேக்கப்ன்னு வந்ததும், ஒரு விதவையா இருக்க என்ன, கூப்பிடுவாங்களான்னு எனக்குள்ள அழமான கேள்வி இருந்துச்சு. ஆனா திறமையும், நேர்மையும் இருந்தா நம்மள யாராலும் எதுவும் செய்ய முடியாதுன்னு போக போக தெரிஞ்சுக்கிட்டேன். மாப்பிள்ளை பாக்குறாங்க ஃபோட்டோஷூட் பண்ணனும்ன்னு என் கிட்ட வந்த எல்லா பெண்களுக்கும் அதிகபட்சம் 3 மாசத்துல கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடும். உங்களோட ராசின்னு எல்லாரும் திரும்ப வந்து சொல்றப்போ, எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
இதெல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, எங்கக் கூட வான்னு அண்ணனுங்க கூப்பிட்டாலும், எனக்கு அந்த ஐடியா இல்ல. வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேணும், எனக்கான பிடிப்ப நான் தேர்ந்தெடுத்துட்டேன். எதிர்காலத்துல என் குழந்தை தேஜுவும் விருப்பப்பட்டா, அவள டாக்டராக்கி எனக்கு நடந்த எதையும் மத்தவங்களுக்கு நடக்காம பாத்துக்கணும்ங்கறது தான் என் லட்சியம்” என முடிக்கும் லதாவின் கண்களில் அதற்கான வேட்கை மின்னுகிறது.
”கடந்து போவது தான் வாழ்க்கை” எனும் வார்த்தைகளில் தான் பல லதாக்கள் இன்று சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.