21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிக்கு பின்பு, அனைத்து தகவல்களும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. இது மக்கள் மத்தியில் தகவல்கள் சென்றடைவதற்கு சுலபமாக இருக்கிறது. தகவல்கள் மட்டுமல்லாமல் உலக வர்த்தகம், அறிவியல், பண்பாடு, என எல்லாவகை அனுபவங்களையும் மக்களால் அனுபவிக்க முடிகிறது. அதில் ஒன்று தான் கலை துறை.
பாரம்பரிய முறையிலிருந்து டிஜிட்டலுக்கு மாறிய கலைத்துறை பல கலைஞர்களுக்கு தங்களின் திறமைகளையும் கருத்துக்களையும் காட்சிப்படுத்த உதவுகிறது. இதனால் கலையின் மூலம் மக்களுக்கு தெரியாத கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்த முடிகிறது.
தற்போது இணையதளத்தில் பல டிஜிட்டல் ஆர்ட்டிஸ்ட் தங்களின் திறமையை வெளிக்கொண்டு வருகிறார்கள், அவர்கள் மத்தியில் சமூக கருத்துக்களை பகிர்ந்து வரும் ஓவியர் ஷாஜனிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பேசியபோது, அவர் கூறியதாவது:
“நான் இணையதளத்தில் விளக்கப்படங்கள், கார்ட்டூன்கள் வரைந்து வருகிறேன். நான் விஜய் வரதராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிகிறேன். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தேன், ஆனால் சிறுவயதிலிருந்தே கலையின் மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது. முதலில் பென்சில் உருவப்படம் வரைந்து இந்தப் பயணத்தைத் தொடங்கினேன், பின்னர் டிஜிட்டல் கலைக்குள் நுழைந்தேன்.
பின்னர் நான் ஒரு சுவரொட்டி வடிவமைப்பாளருடன் பணிபுரிந்தபோது, விளக்கப்படங்கள் செய்ய கற்றுக்கொண்டேன். கலை என்பது கலைஞர்களுக்கானது என்பதை தாண்டி அவை மக்க்களுக்கானது என்ற எண்ணமே என்னை கலைத்துறைக்குள் கொண்டுவந்தது.
இந்த சமுதாயத்தில் நடக்கும் பல பிரச்சனைகள் நம்மை பாதித்திருக்கும், பல தருணங்களை நம் மனதில் புதைத்து வைத்திருப்போம், அவற்றை என் வலி மற்றும் சமூகத்தின் வலியுடன் சேர்த்து மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஊடகமாக கலையை பார்க்கிறேன்.
கலைப்படைப்பு என்று கூறி மனிதர்களை மட்டும் வரைவதில் எனக்கு உடன்பாடு கிடையாது, அவர்களுக்கு பின்னல் இருக்கும் வரலாற்றையும் மக்களின் முன் காட்சிப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறன். கலை பார்வையாளர்களுக்கு கற்பிக்கும் இடத்தில் மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை, அது அவர்களின் சொந்த கற்பனைக்கு தீனிபோடும் இடத்திலும் இருக்கவேண்டும்.
ஒரு விஷயம் மக்களின் மத்தியில் பரிட்சையம் ஆகாமல் இருந்தால் கூட, என்னுடைய கலைப்படைப்பின் மூலம் அவர்களிடம் அந்த தகவலை கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.
உதாரணத்திற்கு, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் அவர்களை சமீபத்தில் வரைந்திருக்கிறேன், அதற்கு காரணம் இங்கு 2000 ஆண்டுகளாக கல்வி பயிலும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்கவில்லை. 18ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கூடங்கள் தொடங்கியும் பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சமூகத்தின் பல தடைகளை தாண்டி ஒரு பெண்ணாக இந்த மண்ணில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதையும், பெண்களின் கல்வி முக்கியத்துவத்தை மக்களிடம் விழிப்புணர்வாக கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் இந்த கலைப்படைப்பை உருவாக்கினேன்.
என் கலைப்படைப்புகள் மூலமாக என்னால் என்னவெல்லாம் வெளிப்படுத்த முடிகிறதோ அதையெல்லாம் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று எண்ணுகிறேன். என் கலைப்படைப்புகளை பார்வையாளர்கள் அழகியல் என்று வர்ணித்தாலும் உண்மை தான், கருத்துள்ள கலைப்படைப்பு என்று நினைத்தாலும் உண்மை தான்" என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.