காட்டுயிர்களின் காதலரா நீங்கள்? இந்த 5 சரணாலயங்களுக்கு நிச்சயம் சென்றுவிடுங்கள்

காட்டுயிர் விரும்பிகள் இந்தியாவிலேயே இயற்கை அழகை மொத்தமாக அனுபவிக்கும் இந்த 5 சரணாலயங்களுக்கு நிச்சயம் சென்றுவிட வேண்டும்.

பயணம் என்பது எப்போதுமே மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. அதிலும், காடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதை வார்த்தையால் விவரிக்கை முடியாது. உரிய பாதுகாப்புகளுடன், கவனமாக காடுகளுக்கு பயணித்தால், அந்த பயணம் தரும் அனுபவம் இயற்கை மீதான பார்வையை நிச்சயம் மாற்றிவிடும். இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தமானது என்பதை உணர்வீர்கள். காடுகளுக்குப் பயணம் செய்வதற்கு நீங்கள் வெளிநாடுகளுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இந்தியாவிலேயே இயற்கை அழகை மொத்தமாக அனுபவிக்கும் வகையிலான காடுகள் உள்ளன. அவற்றைக் காண்போம்.

1. கும்பல்கர் காட்டுயிர் சரணாலயம், ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்சாமந்த் மற்றும் உதய்பூர் மாவட்டங்களுக்கு இடையே இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில், அழிந்துவரக்கூடிய நீல்கை, ஓநாய் இனங்கள், சிறுத்தை இனங்களைக் காண முடியும். அங்குள்ள கும்பல்கர் கோட்டையின் பெயரால் இந்த சரணாலயம் வழங்கப்படுகின்றது. உதய்பூர் விமான நிலையத்திலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது.

2. ஆரலாம் வனவிலங்கு சரணாலயம்:

1984-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சரணாலயம் கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் 55 சதுர கிலோமீட்டர் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. எங்குமே பார்க்க முடியாத தாவர மற்றும் விலங்குகளை இந்த சரணாலயத்தில் காணமுடியும். தலசெரி ரயில் நிலையத்திலிருந்து 55 கிலோ மீட்டர் பயணம் அல்லது கோழிக்கூடு விமான நிலையத்திலிருந்து 96 கிலோமீட்டர் பயணம் செய்தால் இந்த சரணாலயத்திற்கு சென்றுவிடலாம்.

3. பீம்காட் வனவிலங்கு சரணாலயம், கர்நாடகா:

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த சரணாலயம் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்கள் பல உள்ளன. அனைத்து வயதினரும் இங்கு சாகச பயணங்கள் மேற்கொள்ளலாம் என்பது இந்த சரணாலயத்தின் சிறப்பம்சம். பெல்கம் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் சாலை மார்க்கமாக பயணம் செய்தால் இந்த சரணாலயத்திற்கு எளிதில் சென்றுவிடலாம்.

4. கௌதலா சரணாலயம், மஹராஷ்டிரா:

மஹராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. 64,399 ஏக்கரில் இந்த சரணாலயம் பரந்து விரிந்துள்ளது. முழுவதும் புல் படுக்கை விரித்ததுபோலவே இந்த சரணாலயம் இருக்கும். ஔரங்காபாத் விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து எளிதில் இந்த சரணாலயத்திற்கு சென்றுவிடலாம்.

5. இந்திராவதி தேசிய பூங்கா, சத்தீஸ்கர்:

காட்டெருமைகளின் அரிய இனங்களை இந்த பூங்காவில் காணலாம். இந்திராவதி ஆற்றின் பெயரால் இந்த பூங்கா வழங்கப்படுகின்றது. மலைப்பிரதேசத்தில் உள்ள இந்த பூங்கா 2.799 சதுர கிலோமீட்டர் தூரம் வரை பரந்து விரிந்துள்ளது. ஜக்தல்பூர் ரயில் நிலையத்திலிருந்து 170 கிலோமீட்டர் பயணித்தால் இந்த சரணாலயத்திற்கு சென்றுவிடலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close