இரும்பு, நம் உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஹீமோகுளோபினை உருவாக்க உதவுகிறது, இது நமது நுரையீரலில் இருந்து நமது உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை மாற்றும் ஒரு புரதம், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது, அறிவாற்றல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது, சோர்வைக் குறைக்கிறது.
இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 1.62 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 24.8 சதவீதம் பேர் இரும்புச்சத்து குறைபாடு அல்லது ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹார்வர்டில் பயிற்சி பெற்ற ஊட்டச்சத்து மனநல மருத்துவர் உமா நைடூ இரும்பின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், இரும்பு என்பது ஹீமோகுளோபினின் (உங்கள் நுரையீரலில் இருந்து உங்கள் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜனை மாற்றும் ஒரு புரதம்) ஒரு முக்கிய அங்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா? போதுமான ஹீமோகுளோபின் இல்லாவிட்டால், உங்கள் திசுக்கள் மற்றும் தசைகள் ஆற்றலை இழக்கும்.
உங்கள் உடலில் ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை நகர்த்த உங்கள் இதயம் கடினமாக உழைக்க வேண்டும். இது சோர்வுக்கு வழிவகுக்கும், எரிச்சல் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருக்கலாம்.
மேலும் இரும்பின் ஆரோக்கிய நன்மைகளைப் பகிர்ந்து கொண்ட நைடூ, இரும்பு நியூரான்களைப் பாதுகாக்கிறது மற்றும் மனநிலையில் ஈடுபடும் இரசாயனங்களின் தொகுப்பைக் கட்டுப்படுத்துகிறது என்று கூறினார்.
இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்
டாக்டர் நைடூ பகிர்ந்தபடி, இரும்புச்சத்து குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் கீழே உள்ளன. அவை:
* தலைச்சுற்றல்
*மூச்சு திணறல்
* சோர்வு
*ரத்த சோகை
* கவனம் செலுத்துவதில் சிரமம்
சோர்வு, பலவீனம், வெளிர் தோல், மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், தலைவலி, குளிர்ந்த கைகள் மற்றும் பாதங்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவை இரும்புச்சத்து குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் என்று ஊட்டச்சத்து நிபுணர் சமீனா அன்சாரி கூறினார்.
இரும்புச்சத்து குறைபாடு எதனால் ஏற்படுகிறது?
ஆண்களும் பெண்களும் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்றாலும், மாதவிடாய் காலத்தில் ரத்தத்தை இழப்பதால் ஆண்களை விட பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்பம் மற்றும் பிரசவம் கூட இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
இரும்புச்சத்து குறைபாட்டிற்கு மிகவும் பொதுவான காரணம் ரத்த இழப்பு ஆகும். எனவே மாதவிடாய் பெண்களுக்கு இரும்புச்சத்தை இழக்கச் செய்கிறது. கூடுதலாக, ஒருவரின் உணவுகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தால், குறிப்பாக சைவ உணவுகள், இரும்புச்சத்து குறைபாட்டிற்கும் வழிவகுக்கும்.
அறுவைசிகிச்சைக்குப் பின் ஏற்படும் ரத்த இழப்பு அல்லது இரைப்பைக் குழாயில் சில ரத்த இழப்பு ஏற்படும் நிலைகளிலும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம், என்று டாக்டர் ப்ரீத்தி சாப்ரியா கூறினார்.
இரும்புச் சத்து போதிய அளவு உட்கொள்ளாததாலோ அல்லது உடலில் இரும்புச் சத்து சரியாக உறிஞ்சப்படாமலோ இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மோசமான உணவுப்பழக்கம், அதிகப்படியான ரத்த இழப்பு, கர்ப்பம் மற்றும் இரும்பை உறிஞ்சும் உடலின் திறனை பாதிக்கும் சில மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது நிகழலாம்.
இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் என்ன செய்வது?
உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உங்கள் மருத்துவரிடம் பேசி, அதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்யுங்கள். உங்களுக்கு அயர்ன் சப்ளிமெண்ட்ஸ் அல்லது உங்கள் உணவில் மாற்றங்களை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம், இது உங்கள் இரும்பு அளவை அதிகரிக்க உதவும்.

இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளான சிவப்பு இறைச்சி, பீன்ஸ், பருப்பு, கீரை மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்களை சாப்பிடுவதும் இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க உதவும். இரும்புச் சத்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், எனவே இரும்புச் சத்துக்களைத் தொடங்குவதற்கு முன் எப்போதும் உங்கள் சுகாதார வழங்குநரிடம் பேசுங்கள், என்று அன்சாரி அறிவுறுத்தினார்.
சில இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் பச்சை இலை காய்கறிகள், டார்க் சாக்லேட், பருப்பு வகைகள், ஆகியவை அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“