இந்திய பிரதமர் மோடி ஓரிரு நாட்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தபோது, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, மோடியைப் போல் தானும் முழு சைவப் பிரியராக மாற விருப்பம் உள்ளது என தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே 25 ஆண்டுகாலமாக தூதரக ரீதியிலான உறவு நீடித்தாலும், இந்தியாவிலிருந்து இதுவரை எந்த பிரதமரும் இஸ்ரேலுக்கு பயணம் செய்ததில்லை. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டனர். இதன் தாக்கமாக, கடந்த 2015-ஆம் ஆண்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். ஆனால், பாலஸ்தீன பிரச்சனை காரணமாக இந்திய பிரதமர் ஒருவர் கூட இஸ்ரேலுக்கு செல்லவில்லை. இதை தகர்க்கும் விதமாக, பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக செவ்வாய் கிழமை இஸ்ரேல் சென்றார்.
இஸ்ரேல் சென்ற அன்றைய நாள் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, மோடிக்கு இரவு விருந்து அளித்தார். அதில், அசைவ உணவே இல்லாமல், முழுக்க முழுக்க இந்திய சைவ உணவுப்பொருட்களே இடம்பெற்றிருந்தன. மூங் தால் பூரி, குருகுரி பிந்தி, மா கி தால், கும்ப் கா புலாவ் என இந்திய உணவுப்பொருட்கள் நிறைந்திருந்த அந்த இரவு விருந்தை பெஞ்சமின் நேதன்யாஹூ மிகவும் விரும்பியதாக தெரிகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/052fe258-6254-11e7-8e9a-26934b659213-225x300.jpg)
அப்போது, தன் நண்பர் மோடியைப் போல் தானும் முழு சைவைப்பிரியராக மாற பெஞ்சமின் நேதன்யாஹூ விருப்பம் தெரிவித்ததாக இஸ்ரேலின் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரும், மோடியின் இரவு விருந்திற்கு உணவு தயாரித்தவருமான ரீனா புஷ்கர்னா தெரிவித்தார்.
“இந்தியாவில் சைவ உணவுப்பொருட்களில் நிறைய வகைகள் இருப்பதை பெஞ்சமின் நேதன் யாஹூ விரும்பினார். அதனால், மோடியைப் போல் தானும் முழு சைவப்பிரியராக மாற அவர் விருப்பம் தெரிவித்தார்”, என ரீனா புஷ்கர்னா கூறினார்.
அதேபோல், பாரம்பரிய முறையில் செய்யப்படும் கிச்சடி வகையை பிரதமர் மோடி பெரிதும் விரும்பியதாக ரீனா புஷ்கர்னா குறிப்பிட்டார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரீனா புஷ்கர்னா, கடந்த பல வருடங்களாக இஸ்ரேலின் புகழ்பெற்ற சமையல் நிபுணராக உள்ளார்.
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இஸ்ரேலுக்கு ஒருமுறை சென்றிருந்த நிலையில், அப்போது மோடியின் சமையல் கலைஞராக இருந்தவரும் இதே ரீனா புஷ்கர்னா என்பது குறிப்பிடத்தக்கது.