காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும்ஒரு கோடி பேரின் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக, ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், காற்றிலுள்ள நுண்தூசிகளின் (பி.எம்.) அளவு அதிகரிக்கும்போது, சிறுநீரகம் பாதிப்படைவதற்கான வாய்ப்புகளும் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது, உலகம் முழுவதும் வருடத்திற்கு 10.7 மில்லியன் பேரின் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், அதனால் ஏற்படக்கூடிய இறப்புகள், சிறுநீரக நோய்களால் முன்கூட்டியே ஏற்படக்கூடிய இறப்புகள், உள்ளிட்டவை காற்று மாசுபாட்டால் அதிகரிப்பதாக அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இந்தியாவில், ஏற்கனவே டெல்லி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசுபாடு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்பட்டு, இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக பல ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு சொல்கின்றன. அதனால், கடந்த தீபாவளி பண்டிகையன்று டெல்லி நகரத்தில் பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நடவடிக்கையால், ஏதேனும் சிறியளவிலான மாற்றம் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என, நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த நடவடிக்கையாலும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என தெரிகிறது.
இந்த சமயத்தில், காற்று மாசுபாட்டால் சிறுநீரகங்களும் பாதிப்படைவதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இதனால், காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.