தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்த ஐக்கி பெர்ரி ஒரு ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் மருத்துவர் என பன்முகத் திறமை கொண்டவர்.
ஐக்கி ஜனவரி 2020 இல் தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம் பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.
அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.
ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி வெளிச்சத்துக்கு வந்தார்.
ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என நினைத்தனர். ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரிய வந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர். அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார்.
இப்போது ஐக்கி, ஆல்பம் பாடல்கள், இசை நிகழ்ச்சி என பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் நடந்த பிபி ஜோடிகள் சீசன் 2வில், ஐக்கி தனது காதலன் தேவ் மேஜருடன் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஐக்கி பெர்ரி சமீபத்தில் பாடிய தலையாட்டி பொம்மை பாடல் இணையத்தில் பயங்கர வைரல் ஆகியது. தேவ் மேஜர் இசையில், ஐக்கி மற்றும் சின்னபொண்ணு சேர்ந்து இந்த பாடலை பாடினர்.
இந்நிலையில், ஐக்கி பெர்ரி இப்போது இசையமைப்பாளர் யுவன் இசையில் புதிய பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். அப்போது யுவன் உடன் சேர்ந்து எடுத்த படங்களை ஐக்கி தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.
யுவன் இசையில் ஏற்கெனவே ஏராளமான ராப் பாடல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கியும் ஒரு ராப்பர் என்பதால், இதுவும் கண்டிப்பாக ஒரு ராப் பாடலாக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து உள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா தனது 16 வது வயதில், 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படம் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அவரது இசையில் இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
யுவன் இசையில் சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“