திருந்துதல் என்பது கடுமையான நடவடிக்கை அல்லது கைதிகளை கடுமையாக நடத்துவதன் மூலமாக வராது. அன்பால் திருத்தும் போதுதான் உண்மையான திருந்துதல் என்பது வரும் என்கிறார் தமிழ்நாடு சிறைத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற கோவிந்தராஜன்…
சிறையில் மிகக் கடினமான நேரங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். இதுல எல்லாருமே வேறுவேறு குற்றங்கள் செய்திருந்தாலும் அடியாழத்தில் அத்தனை பேரும் மனிதர்களே என்று நம்ம புரிஞ்சுகிட்டா நிச்சயமா இவர்களை மீட்டெடுப்பதில் சிரமம் ஏதுமே கிடையாது.
கோவிந்தராஜன் கைதிகள் மேல் கொண்ட அன்பாலும், மனித நேயத்தாலும் இன்றும் விடுதலை பெற்ற கைதிகளின் மறுவாழ்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
ஒரு கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற திருவள்ளூரைச் சேர்ந்த தாமோதரன் 18 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு அறம் சார்ந்து வாழ இயங்கிக் கொண்டிருக்கிறார். இந்த மாற்றத்துக்கு வித்திட்டவர் ஒரு ஜெயிலர்…
நான் 19 வயதில் சிறைக்கு போனேன். 18 வருசமா சிறை வாழ்க்கை அனுபவிச்சிருக்கேன், இந்த 18 வருசத்துல 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் பண்ணிருக்கேன். Value education, B.A. History முடிச்சிருக்கேன். நர்சிங் வேலையும் பண்ணியிருக்கேன்.
ஒரு ஜெயிலர் நினைச்சா சிறைக்குள்ள ஒரு நல்லவன கூட கெட்டவனா மாத்தலாம், அதேமாதிரி ஒரு கெட்டவனையும் நல்லவனா மாத்தலாம். ஜெயில் ஓட முழு கண்ட்ரோல் ஜெயிலர் தான்.
நேத்துக் கூட ஜெயில்ல இருக்கிற மாதிரி கனவு வந்து பயந்தேன். இப்போவரை அந்த பயம் இருக்கு என்றார் தாமோதரன்.
அதிகாரிங்க என்னை ஒரு புள்ள மாதிரி பார்ப்பாங்க, சில நேரங்கள அவுங்க எடுத்துட்டு வர்ற சாப்பாடுக் கூட எங்களுக்கு கொடுப்பாங்க..
காந்தி ஜெயந்தி வர்ற அந்த ஒரு மாசம் எங்களுக்கு திருவிழா மாதிரி இருக்கும். ஃபுட் பால், கிரிக்கெட், கேரம், செஸ்-னு எல்லா விளையாட்டு போட்டியும் நடத்துவாங்க.. உள்ளே எல்லாரும் கஷ்டப்பட்டு மன உளைச்சல் இருக்கும் போது, எங்களுக்கும் இந்த மாதிரி பொழுதுபொக்கு வேணும் அதிகாரிங்க வருஷா வருஷம் இதை நடத்துவாங்க..
இன்னைக்கு நான் வாழுற வாழ்க்கையே இந்த மாதிரி அதிகாரிங்களால தான். நான் உள்ளே இருக்கும் போது அந்த நல்ல அதிகாரி என்கிட்ட நடந்துகிட்டது, இப்படித்தான் இருக்கணும் சொல்லிக்கொடுத்து என்னை வழிநடத்துனது அதன்படிதான் நான் இன்னைக்கு வாழ்ந்துட்டு இருக்கேன் என்று கண்ணீர் பொங்க கூறுகிறார் தாமோதரன்….
இதேபோல ஒரு கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட நீலகண்டன் சிறையிலேயே படித்து 10ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி. முடித்துள்ளார். 10ஆம் வகுப்பில் புழல் சிறை அளவில் முதல் இடத்திலும், மாநில அளவில் 3ஆம் இடத்தையும் பெற்றவர்… நீலகண்டன் போன்றவர்களின் மறுவாழ்வில் சில அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானது.
”இதுக்கு அடுத்து நல்ல விஷயங்களை எடுத்துக்கிட்டா மட்டும் தான் எதிர்காலத்துல நாம வாழ முடியும் நான் புரிஞ்சுகிட்டேன்…
ஜெயிலர், நாடகம் நடிக்கிறது, கதை சொல்றது இதுமாதிரியான விஷயங்களை எல்லாம் ஊக்குவிப்பாரு. நாங்க நாடகம் எல்லாம் பண்ணோம். அந்த இடத்துல தான் முதல்முறையா நான் என் வாழ்க்கையில கைத்தட்டல் வாங்குனேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு…
கிரிமினலா இருந்து நம்ம பல லட்சம், பல கோடி சம்பாதிக்கலாம், அது ரொம்ப ஈஸி, ஆனா நேர்மையா இருந்து உழைச்சு சம்பாதிக்கிறது தான் உண்மையில் பெரிய கஷ்டம்” என்றார் நீலகண்டன்
”குற்றம் செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்குள் வரக்கூடிய மனிதனை, அவர் சமூகத்தில் நோயுற்றவர், அவரை மீட்டெடுப்பது நமது கடமை. ஆகவே, இந்த சிறைச்சாலைகள் ஒரு மருத்துவமனை போல செயல்படணும் சொல்லிருக்காங்க” என்றார் கோவிந்தராஜன்…
ஒரு சிறை அலுவலருக்கு முதன்மையான பொறுப்பு பாதுகாப்பாக வைக்கிறது. அப்புறம் இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கீழ்நிலை பணியாளர்கள் சரியாக செயல்படுகிறார்களானு கண்காணிக்கிறது..
சொல்லப்போனா, சிறை அலுவலரினுடைய தொடுதல் அதிகமா இருக்கணும். யாரோ ஒரு சிறைவாசி வந்திருக்கான், அவனை நீங்க தொட்டாவே போதும், அப்படியே அவருடைய பாதி துயரங்கள் போயிரும்…
உள்ளே கொடுமையான குற்றவாளிகள், கொலை குற்றவாளிகள், திருடர்கள், ரேபிஸ்ட் எல்லாம் இருக்காங்க, மிகக் கடுமையான இடமா இருக்கும் நீங்க நினைப்பிங்க…
ஆனால் மென்மையான பக்கங்களும் அந்த சிறைக்குள்ளே இருக்கிறது…
ஒரு சிறைவாசி வந்து சொன்னாரு…
’அய்யா என்னால கொலைப்பண்ணபட்ட சகோதரர் வீட்டுல ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. என்னோட பையன் படிச்சி இப்போ வேலைக்கு போயிட்டாரு. அவருக்கு நான் பெண் தேடிட்டு இருக்கேன். நான் கொலை செய்ஞ்சேன் பாருங்க அவரு வீட்டுல பொண்ணு இருக்குது. அந்த பொண்ண நான் மருமகளா ஏத்துக்கிறேன். முடியுமா ஐயா-னு கேட்டாரு.
அதுக்கு என்.ஜி.ஆ. மூலமா உதவி பண்ணோம். அந்த என்.ஜி.ஆ. அந்த திருமணத்தை நடத்தி வச்சாங்க…
இப்போ ஒரு கைதி 2, 3 வருடம் தண்டனை பெற்றுருக்கான்னா, அவருக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில வேலை ஒதுக்கிறாங்கனா அந்த வேலைக்கு தகுந்தமாதிரி அவுங்களுக்கான தண்டனை குறைப்பு இருக்கும்..
சிறைக்குள்ள ஒரு மருத்துவமனை இருக்கும். அந்த மருத்துவமனையில வேலை செய்ஞ்சா அவுங்களுக்கு 7 நாட்கள் வரைக்கும் தண்டனை குறைப்பு கொடுக்கலாம்..
அதேமாதிரி கிச்சன் வேலை செய்ஞ்சாலும் தண்டனை குறைப்பு இருக்கும்.
நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு இந்த சமூகத்தில் அதிகாரம் செலுத்துவதற்கு மட்டுமல்ல. இந்த சமூகத்தில் எங்க தேவை இருக்குதோ அதை நிவர்த்தி செய்வதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்பாகவும் நம்ம கருதலாம்” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் கோவிந்தராஜன்…..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.