தமிழ்நாட்டின் பல முக்கிய அரசியல், திருப்பங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் கண்ட இடம் தான், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு. ஓடு பாவிய போர்டிகோவுடன் கூடிய பழங்கால வீடு இன்றும் அதே கம்பீரத்துடன் கலைஞரின் நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கிறது.
கோபாலபுரத்தில் உள்ள இந்த வீட்டை 1955-ம் ஆண்டு சர்வேஸ்வர அய்யர் என்பவரிடம் இருந்து கருணாநிதி வாங்கினார். கோபாலபுரம் நான்காவது தெருவின் கடைசியில் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது இந்த இல்லம். அப்போதிலிருந்து தனது கடைசி காலம் வரைக்கும், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இல்லத்திலிருந்துதான் கருணாநிதி தமிழக அரசியல் களத்தை இயக்கி வந்தார்.
கலைஞர் கோபாலபுரம் இல்லம்
பல வரலாற்று நிகழ்வுகளை கண்ட கலைஞரின் இல்லம் குறித்த தொகுப்பு இதோ!
வாசலில் நுழைந்தவுடன் முதலில் வரவேற்பறை இருக்கிறது, வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், பார்வையாளர்களை, கலைஞர் சந்திப்பது, இங்குதான். இந்த அறையில் திருவள்ளுவர், காந்தி, அண்ணா, காமராஜர், முரசொலி மாறன், கருணாநிதி முதல் முறை முதல்வர் ஆன போது எடுத்த படம் என முக்கியமான நிறைய புகைப்படங்கள் இருக்கிறது.
பல டென்ஷங்களுடன் வீட்டுக்கு வரும் கருணாநிதி வரவேற்பறையில் நுழைந்தவுடன் முதலில் பார்ப்பது முரசொலி மாறன் படத்தை தான். பிறகு தன் தாய் அஞ்சுகம் அம்மா, பெரியார், அண்ணா உடன் இருக்கும் புகைப்படங்களை பாத்துவிட்டு தான் வீட்டுக்குள் செல்வார். இதனால் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அவரது மனம் லேசாகி விடும்.
கலைஞருக்கு ஓட்டுநராக, உதவியாளராக இருந்த அனைவரும் இன்னும் இந்த வீட்டில் இருக்கின்றனர். கலைஞர் இல்லத்தை கவனிக்கும் உதவியாளர் வடிவேலு கூறுகையில், காலையில எழுந்தும் முதல்ல செய்தித்தாளை படிப்பாங்க.
பிறகு புத்தகங்கள் கேட்பார். இந்த அலமாரியில எல்லா புத்தகங்களுக்கும் நம்பர் இருக்கும். இதுல இருந்து படிச்சுட்டுதான் அறிக்கை, கடிதம் எல்லாம் தயார் பண்ணுவாங்க, என்றார்.
வரவேற்பறையில் இருந்து படிக்கட்டு வழியாக மேலே சென்றால் கலைஞர் அறை இருக்கும். உள்ளே நுழைந்ததும் புத்தகங்கள், அஞ்சுகம் அம்மாள் சிலை, சில விண்டேஜ் புகைப்படங்கள் இருக்கிறது. கலைஞர் அறையில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தால், வேணுகோபாலா சாமி கோயில் தெரிகிறது.
கலைஞருக்கு சமைத்துக் கொடுக்கும் பிரகாஷ் கூறுகையில், என்னைக்காவது சமையல்ல சொதப்பிட்டா அவருக்கு கோவம் வரும். சாப்பாடே வேண்டாம், வெளியில போலாம் சொல்லுவாரு. அந்தமாதிரி நேரங்கள்ல சாயங்காலம் அவருக்கு பிடித்த மாதிரி ஏதாவது பண்ணி கொடுப்போம்.
அய்யா நல்ல இருக்கும்போது பூரி சாப்பிடுவாரு. அப்புறம் உடல்நிலை சரியில்லாதபோது அதுக்கேத்த உணவுப்பழக்கத்தை மாத்திட்டாரு. மதியானம் லஞ்சுக்கு வறுவல் விரும்பி சாப்பிடுவாரு. அவர் சாப்பாட்டுல எப்போதுமே தயிர் இருக்கும். இட்லிக்கு கூட தயிர் தொட்டுதான் சாப்பிடுவாரு. என்றார்.
மாடியில் கலைஞரின் படுக்கையறை இருக்கிறது. 10க்கு 10க்கு சிறிய அறைதான் இது. கடைசி காலம் வரை அவருடைய படுக்கையறை இதுதான். இங்கு அவர் பாட்டு கேட்கும் ரேடியோ இருக்கிறது. திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் இசை அவருக்கு பிடித்த ஒன்று. படுக்கையறையில் அவருக்கு பிடித்தவர்களின் புகைப்படங்கள் இருக்கிறது.
இப்படி கலைஞரின் இல்லம் முழுக்க பல கதைகளை சொல்லும் புகைப்படங்கள் நிறைந்திருக்கிறது.
குமுதம் யூடியூப் சேனலில் வெளியான கலைஞர் கோபாலபுரம் இல்லம் வீடியோ இங்கே…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.