அமைதியான உப்பங்கழிகள், பசுமையான மலைத்தொடர்கள், கண்கவர் நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகள், கேரளா இயற்கையின் சிறந்த அருளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ‘கடவுளின் சொந்த நாடு’ என்று புகழப்படும் கேரளா, சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கையை அனுபவிக்க சிறந்த இடமாக உள்ளது.
எனவே, இந்த மழைக்காலத்தில் கேரளாவுக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்கள் பயணத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய சில சிறந்த இடங்கள் இதோ.
கோழிக்கோடு மலபார் நதி திருவிழா

கேரள சாகச சுற்றுலா ஊக்குவிப்பு சங்கம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் மற்றும் கோடஞ்சேரி மற்றும் திருவம்பாடி கிராம பஞ்சாயத்துகள் இணைந்து நடத்தும் மலபார் நதி திருவிழாவின் சர்வதேச கயாக்கிங் போட்டி உலகப் பிரசித்தி பெற்றது.
தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, விழா ஆகஸ்ட் 12 முதல் 14 வரை மீண்டும் தொடங்க உள்ளது. கோழிக்கோடு இருவழிஞ்சி புழா மற்றும் சாலிபுழா ஆகிய நீர்நிலைகளில் 20 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கயாகர்கள் படகோட்டிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்காதவர்களும் துஷாரகிரி அருவிக்கு அருகில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இருந்து இந்த சாகச நிகழ்வை கண்டுகளிக்கலாம்.
மூணாறு
மூணாறு, மலையேற்றப் பாதைகள், பரந்த தேயிலைத் தோட்டங்கள், கன்னி காடுகள், உருளும் மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏராளமான இயற்கை அழகுக்காக சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் சொர்க்க மலை வாசஸ்தலம் ஆகும்.
மழைக்காலங்களில் இப்பகுதி மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில் ஆங்கிலேய அரசின் கோடை வாசஸ்தலமாக விளங்கிய மலைவாசஸ்தலம், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ தாவரமான நீலக்குறிஞ்சிக்கு பெயர் பெற்றது.
எக்கோ பாயிண்ட், அட்டுக்காடு நீர்வீழ்ச்சிகள், டாடா டீ மியூசியம், இரவிகுளம் தேசிய பூங்கா, மாட்டுப்பட்டி அணை, மூணாறு சுற்றியுள்ள சில சிறப்பம்சங்கள். பரந்து விரிந்த அற்புதமான தேயிலைத் தோட்டங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவையாகும், இங்கு பயணிகள் மேலே பனிமூட்டமான வானத்தையும் கீழே பச்சை சொர்க்கத்தையும் ரசிக்கலாம்.
தேக்கடி ட்ரீ ஹவுஸ்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் இது, இயற்கை, வனவிலங்குகள் மற்றும் சாகசங்களை விரும்பும் மக்களுக்கு ஏற்ற இடமாகும்.
பெரியார் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை இங்குள்ள முக்கிய சிறப்பம்சங்கள். பெரியாறு ஏரி வழியாக சுற்றுலா செல்வது, இப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சுவதை மட்டும் காணுவது மட்டுமல்லாமல், ஏரியின் கரையில் இருக்கும் அரிய வனவிலங்குகளின் பார்க்கலாம்.
ஆசிய யானை, புலி, இந்திய காட்டெருமை, சாம்பார் மான், இந்திய காட்டு நாய், சிறுத்தை போன்ற 60 க்கும் மேற்பட்ட வகையான விலங்குகளை இங்கு காணலாம். மலபார் சாம்பல் ஹார்ன்பில், இந்தியன் பைட் ஹார்ன்பில் மற்றும் ஒயிட்-பெல்லிட் ட்ரீபி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் தேசிய காப்பகத்தில் காணப்படுகின்றன. இது மர வீடுகளுக்கு பிரபலமானது. வான்யா ட்ரீ ஹவுஸ் போன்ற ஒன்றில் தங்கி, ஏராளமான காட்டு விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் சுற்றித் திரிவதைக் காணலாம்.
வயநாடு நீர்வீழ்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமான மலைத்தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் அதன் அற்புதமான இயற்கை அழகு மற்றும் பசுமையான பசுமைக்கு புகழ் பெற்றது.
வயநாடு காடுகள், பச்சை புல்வெளிகள், மூடுபனி மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் இயற்கை நீரூற்றுகள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது, மேலும் மழையின் போது இப்பகுதி முழுவதும் பரந்து காணப்படும் அழகிய நீர்வீழ்ச்சிகளுடன் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கிறது.
சூச்சிப்பாரா நீர்வீழ்ச்சி, மீன்முட்டி நீர்வீழ்ச்சி, கந்தன்பாறை, செத்தலயம், கடச்சிக்குன்னு, பால்ச்சுரம் மற்றும் துஷாரகிரி அருவிகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
வர்கலா கடற்கரை

கேரளா 589 கிமீ வரை நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது, எனவே இது இயற்கையான கடற்கரைகளால் நிரம்பியுள்ளது. இவற்றில் வர்கலா கடற்கரை, மாநிலத்திலேயே அழகானது.
திருவனந்தபுரம் மாவட்டத்தின் புறநகரில் அமைந்துள்ள வர்கலா மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 80 அடி உயரத்தில் அமைந்துள்ள செங்கற் பாறை, கடற்கரையின் கண்கொள்ளா காட்சியை வழங்குகிறது. 2,000 ஆண்டுகள் பழமையான ஜனார்த்தனசுவாமி கோயில் குன்றின் அருகே அமைந்துள்ளது.
குன்றின் உச்சியில் பல ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன, அவை உள்ளூர் கடல் உணவுகள் முதல் உலகளாவிய உணவு வகைகள் வரை இங்கு ருசிக்கலாம். மேலும், குன்றிலிருந்து சூரிய அஸ்தமனம் நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்று.
கடற்கரையைத் தவிர, வர்கலா, சிவகிரி மடத்துடன் புகழ்பெற்ற புனிதத் தலமாகவும் உள்ளது, இது சிறந்த மத சீர்திருத்தவாதியும் தத்துவஞானியுமான ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்டது, கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“