Kidney disease warning signs | சிறுநீரக நோய் எச்சரிக்கை அறிகுறிகள் | நம் உடலில் உற்பத்தியாகின்ற நச்சுப்பொருள்களை சிறுநீரகம் தான் வெளியேற்றுகிறது. தினமும் இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து 150- 180 லிட்டர் ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லிட்டர் சிறுநீரை உற்பத்திச் செய்கிறது.
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றி விடுங்கள்.
இன்று பெருகியிருக்கும் சிறுநீரக நோய்களுக்கு முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுவது நீரிழிவு நோய்தான்.
சா்க்கரை நோய், உடல் பருமன், உயா் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், சிறுநீரகத் தொற்றுகள், காசநோய், மாத்திரைகளின் பக்கவிளைவு ஆகியவை சிறுநீரக நோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகள்.
உடற்பயிற்சியின்மை, துரித உணவு, குறைந்த அளவு நீா் பருகுதல் போன்றவை குழந்தைகளின் சிறுநீரகங்களைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாகும்.
சிறுநீரக பாதிப்பு பெரும்பாலும் அறிகுறிகள் ஏதுமின்றி அல்லது சில அறிகுறிகளுடன் தீடீரென உருவாகிறது. அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கும்போது, ஒருவரின் சிறுநீரகச் செயல்பாடு 25 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகிவிடும்.
சிறுநீரக பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பிரச்சினைகள் குறையும். தவறினால் நாளடைவில் எந்த வேலையும் செய்யமுடியாத அளவுக்குச் சிறுநீரகம் செயலிழந்து விடும்.
சிறுநீரகக் கோளாறின் அறிகுறிகள்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் சிறுநீர் பிரிவது குறையும். பசி குறையும். வாந்தி வரும். தூக்கம் குறையும். கடுமையான சோர்வு, உடலில் அரிப்பு, முகம் மற்றும் கை கால்களில் வீக்கம் தோன்றுவது, சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகளும் தோன்றும்.
குழந்தைகளை பொறுத்தவரையில், திடீா் எடை அதிகரிப்பு, ரத்த சோகை, பலவீனம், சோர்வு, தொடா் சிறுநீா்த் தொற்று போன்றவை சிறுநீரக நோய்களின் ஆரம்ப அறிகுறிகள். எனவே இதை கவனிக்கும் பொறுப்பும் கடமையும் பெற்றோருடையது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனா்.
மேற்சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் சில இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி முதலில் ஆலோசனைகளைப் பெறுங்கள்.
சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். புகை பிடிக்காதீர்கள். தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள். இதுபோன்ற வாழ்க்கை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் சீறுநீரக நோய் வராமல் தடுக்கவும், வந்தபிறகு கட்டுப்படுத்தவும் முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“