Know Your City: சென்னை அண்ணாசாலையில் உள்ள 'இரானி டீ ஸ்டால்' அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சூடான ‘டம் டீ’யை வழங்கி வருகின்றன.
1955 ஆம் ஆண்டு, அண்ணாசாலையில் உள்ள வால் டாக்ஸ் ரோட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த கடை, பின்நாட்களில் சென்னையிலேயே 13 கடைகளாக விரிவடைந்தது.
60 ஆண்டுகள் ஆனாலும், தேநீரின் தரத்தில் சமரசம் செய்யாமல், சாமானியர்களுக்கு மலிவு விலையில் வழங்கி வருகின்றனர்.
அண்ணாசாலையில் உள்ள இரானி டீ ஸ்டாலை நடத்திவரும் போமன் இரானி(வயது 70) இந்தியன் எஸ்பிரஸிடம் கூறியதாவது:
"என் தந்தை (மராஸ்பன் இரானி) 1955 இல் வால் டாக்ஸ் சாலையில் முதல் இரானி டீக்கடையை நடத்தினார். பின்னர் அவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தம்பு செட்டி தெருவில் தனது இரண்டாவது கடை தொடங்கி, ஒன்றன் பின் ஒன்றாக கடையை விரிவுபடுத்தினார்.
‘கஃபே நேஷனல்' என்ற பெயரில் நாங்கள் ஒரு ஹோட்டல் வைத்திருந்தோம். ஆனால் என் தந்தை இவ்வளவு பெரிய இடத்தை நடத்துவது செயல்படாது என்று நினைத்ததால் அதை மூடிவிட்டார். பின்னர் அவர் ஒரு சிறிய இடத்தை அமைத்து அதில் சமையலறை, பரிமாறும் கவுண்டர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேநீர் மற்றும் பிற சிற்றுண்டிகளை சாப்பிடுவதற்கு முன் பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரித்து நடத்த தொடங்கினார்", என்று போமன் கூறுகிறார்.
மற்ற இடங்களில் பேக்கரி உணவுகளின் தரம் திருப்தியடையாததால் தாங்களாகவே பேக்கரி தொடங்கியதாக கூறினார். "நாங்கள் எங்கள் கடைகளுக்கு மட்டுமே எங்கள் பேக்கரி பொருட்களை வழங்குகிறோம். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள எங்கள் மத்திய சமையலறையிலிருந்து, அனைத்து பொருட்களும் இரானி கடைகளுக்கு செல்கிறது, ”என்று அவர் மேலும் கூறினார்.
பேக்கரி பொருட்களில் பன் பட்டர் ஜாம், கேக்குகள், பஃப்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகள் அங்கு அனுப்பப்படுகிறது.
ஈரானிய தொடர்பு பற்றி கருத்து தெரிவித்த போமன், தனது தாத்தா பெஹ்ராம் இரானி, 1900-களின் முற்பகுதியில் ஈரானில் இருந்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்ததாக கூறினார்.
“ஈரானில் பிளேக் நோய் பரவியது. அவர் பம்பாய்க்கு வந்து, அங்கிருந்து புனேவுக்குப் பயணம் செய்தார், பின்னர் அங்கு அவர் வியாபாரம் செய்யத் தொடங்கினார்", என்றார்.
புனேவில் என்ஜினீயரிங் படித்து வந்த மரஸ்பன் இரானி, தனது தந்தைக்கு உதவுவதற்காக தனது கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டார். "அவர் புனேவில் ஒரு உணவகத்தைத் தொடங்கினார், அது பலனளிக்கவில்லை. யாரோ அவருக்கு அறிவுரை கூறியதையடுத்து, அவர் தனது கடையை சென்னைக்கு மாற்றினார்.
எனது தந்தை 300 சதுர அடியில் டீக்கடை அமைக்க வாய்ப்புள்ள பகுதிகளை தேடி சென்னை முழுவதும் பயணிப்பார். அந்த நாட்களில் எதையாவது தொடங்குவது இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது எளிமையாக இருந்தது,” என்று இரானி கூறினார்.
இரானி டீ ஸ்டால்களின் தனித்துவமான விற்பனைக்கு என்ன காரணம் என்று கேட்டபொழுது, இங்கு விற்கப்படும் தேநீர், தின்பண்டங்களின் குறைவான விலை மற்றும் உயர்வான தரம் தான் என்றார்.
“நான் இந்தத் தொழிலில் சேர்ந்தபோது நான்கு அணாவுக்கு டீயும், ஐந்து பைசாவுக்கு சமோசாவும் விற்றோம். நான் சமோசாவை ஆறு பைசாவுக்கு விற்க வேண்டும் என்று கூறியபோது அப்பா வேண்டாம் என்றார். மெதுவாக விலை உயர்ந்து இப்போது சமோசாவை 10 ரூபாய்க்கு விற்கிறோம்.
எங்கள் தேநீரின் டிகாக்ஷன் ஒரு செப்பு பாத்திரத்தில் தயாராகும், பால் மற்றொரு பாத்திரத்தில் தயாராகும். தேநீர் மாஸ்டர் ஒரு கிளாஸில் டிகாக்ஷனை எடுத்து அதில் சிறிது பால் சேர்ப்பார். அப்படித்தான் எங்கள் டீ தயாரிக்கப்படுகிறது,'' என்றார்.
இரானி டீக்கடையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் பணிபுரிகின்றனர். அவர்களில் 64 வயதான வல்சராஜ் மற்றும் டீ மாஸ்டர் டி பாபு(வயது 59) ஆவர்.
“கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது. கான்ரான் ஸ்மித் சாலையில் உள்ள இந்த தேநீர் கடையை 15 ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறேன். மற்ற டீக்கடைகளில், சில நாட்கள் வேலை இல்லாமல் இருக்கலாம், சரியான சம்பளம் கிடைக்காமல் போகலாம், ஆனால் இங்கு அப்படி இல்லை,” என்றார் வல்சராஜ்.
அடுத்த தலைமுறையினர் தங்களுக்கு அதிக பணத்தை வழங்கும் வேலைகளைத் தேடிக்கொண்டிருப்பதால், சமீப காலங்களில் அவர்கள் தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க சிரமப்படுவதாகவும், தொற்றுநோய்க்குப் பிறகு வியாபாரம் கடினமானதாகவும் போமன் கூறினார்.
“எதிர்காலத்தைப் பற்றி நான் சிந்திக்கவில்லை. என்னால் முடிந்தவரை தொடர்வேன், ஏனென்றால் எனக்கு 70 வயதாகிவிட்டதாக இன்னும் என்னால் உணர முடியவில்லை. ஒருவேளை, எனது காலத்திற்குப் பிறகு எனது உறவினர் பொறுப்பேற்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.