காஷ்மீர் முதல் கோலி வரை கோடிக்கணக்கான விவாதங்கள் நமது டிவியிலும், இன்டர்நெட்டிலும் நடத்தப்படுகின்றன. எந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவிற்கு செய்தி என்கிற வார்த்தை முக்கியத்துவம் அடைத்துள்ளது. வாழ்க்கை வார்த்தையாக்கப்பட்டுள்ளது.
முதலில், பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட சில மாற்றங்களை முதலில் கவனித்தாக வேண்டும். இன்று மனிதர்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் வெளிப்புறத்தில் வெவ்வேறாக இருந்தாலும், அவை அனைத்தும் அடிப்படையில் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளது. வாஷிங் மெஷின், தொலைக்காட்சி, ஏசி, ஸ்மார்ட்போன் போன்றவைகள் எல்லாம் உற்பத்தித் திறன் என்ற ஒற்றை மந்திர வார்த்தையால் மட்டும் தத்தெடுக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டிலும் சரி, எல்லாப் பொருட்களுக்கும் ஒரு வகையான....... ஒரே வகையான கிளிக். நமது அன்புக்குரியவர்களின் போட்டோவை போனில் ஏற்றுவதற்கும், அதே அன்புக்குரியவர்களின் போட்டோவை போனில் இருந்து நீக்குவதற்கும் அதே கிளிக்...... அதே செயல்முறை.
நவீன 5ஜி பொருளாதாரமும், அறிவியல் பார்வையும் நமது அன்றாட பொருட்களுக்கு இடையிலான வேறுபாட்டையும், குழப்பத்தையும், அழகையும் காட்டத் தயாராகவில்லை. இங்கு பொருட்கள் மட்டும் ஒன்றாக்கப்படவில்லை, மாறாக செயல்களும், அச்செயல்களோடு போட்டியிடும் மனிதப் பேச்சும் ஒன்றாக்கப்பட்டுள்ளது.
எல்லா நிகழ்வையும், உணர்வையும், இருத்தலையும் பேச்சுக்குள் கொண்டு வந்துக் கொண்டிருக்கிறோம், ஆனால்... பேசப் பேச அந்த நிகழ்வுகள் தரும் அடையாளத்தையும், அதிசயங்களையும் உணர முடியாத தூரத்தில் நாமே சென்று விடுகிறோம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து , பிரபல நடிகருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ், சென்னையில் தீபாவளி கொண்டாட்டம், எல்லாமே இன்றைய முக்கியத் தலைப்பு செய்திகள் தான். மூன்று செய்திகளுக்கும் ஒரே வகையான கட்டமைப்பு, வடிவம், நிறம், பேச்சு.
பொதுவாகவே எல்லா செய்திகளும், நம் மனதில் ஒரே வகையான உணர்வுகளை ஏற்படுத்தத் தான் முயற்சிக்கின்றன. உதாரணமாக, செய்தி வாசிப்பவர்கள் தீபாவளி தொடர்பான செய்திகளுக்கு கொண்டாட்டம் போடுவது கிடையாது, விபத்து பலி செய்திகளில் அழுவதும் கிடையாது. புறநிலையில், அதாவது சொல்லப்படும் செய்திகளுக்கு வெளியில் தான் ஒவ்வொரு செய்தியும், செய்தி வாசிப்பவர்களும், அச்செய்தியை கேட்பவர்களாகிய நாமும் இருக்கின்றோம்.
இந்த புறநிலைப் பேச்சால் நாம் அடைந்தது என்ன?
ஏற்கனவே , நமது உணர்வற்ற பேச்சால் - தர்மம் தலை காக்கும், புகைப் பிடித்தல் உயிரைக் கொல்லும், தலைக்கவசம் உயிர்க்கவசம், படியில் பயணம் செய்யாதீர்கள் என்ற வாக்கியங்கள் எல்லாம் தேய்துவிட்டன. இரண்டு குழந்தைகளைக் கொன்ற அபிராமி கதையாக இருக்கட்டும், பப் ஜி மரணங்களாக இருக்கட்டும்.... இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் நாம் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் பேச்சு, மொழி, செய்தி இவைகளுக்குள் கொண்டுவரப்பட முடியுமா? மொழியால் உணர்த்துவதற்கு பதில் நம் மொழியையும், பேச்சையும் கேள்வி கேட்பதாகவே உள்ளன.
'என்னைக் கற்பழிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள்' என்று இந்தியாவில் 20000க்கும் அதிகமான பெண்கள் இந்த வருடத்தில் மட்டும் கத்தியிருப்பார்கள்..... 20000 முறையும் இந்த பேச்சு சத்தம் தோல்வியில் முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
கெஞ்சல், கதறல், தவிப்பு, உதவி, சத்தமான அமைதி, வெற்றி, மனிதாபிமானம், மரணம் இவற்றிற்கான பேச்சை இழந்து விட்டோமா? அல்லது அவசரப்பட்டு பேச்சு வடிவில் இவைகளை கொண்டு வந்துவிட்டோமா?
வேறு வகையில் வெளிப்படுத்துவற்கான கற்பனையை இழந்து விட்டோமா? அல்லது வெளிப்படுத்த முடியாது என்று தெரிந்தும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா?
சுப ஸ்ரீ பேனர் மரணக் கதையை மறப்பதற்காக பேசினோமா? அல்லது பேசிபேசி நம்மை மறந்து புது அரசியல் பிறக்க பேசினோமா?
யாருக்குத் தெரியும், இது போன்ற கேள்விகளுக்கு பதில் நாளை காலை முக்கிய, அவசர, சூடான, விரிவான தலைப்புச் செய்திகளில் கிடைத்தாலும் கிடைக்கும்.