Exclusive: சவால்கள் நிறைந்தது தானே வாழ்க்கை! நெவர் கிவ் அப் – டாக்டர் மாளவிகா!

வாழ்க்கை உங்க மேல எத்தனை பந்துகள வீசுனாலும், அத திருப்பி அடிச்சு, சிக்ஸரா மாத்துங்க.

By: Updated: March 6, 2019, 06:16:51 PM

International Women’s Day: தென் சென்னையின் முக்கிய பகுதியில், அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது அந்த வீடு. நாங்கள் உள்ளே நுழைந்ததும், எங்களை இன்முகத்துடன் வரவேற்கும் டாக்டர் மாளவிகா ஐயர், உடனே கேட்டை தாழிடுகிறார். வீட்டுக்குள் நுழைந்ததும் தண்ணீர் பாட்டிலை தனது இரு கைகளால் அணைத்து ஒரு குழந்தைப் போல் எடுத்து வந்து தருகிறார். இதிலென்ன ஆச்சர்யம் எனக் கேட்கிறீர்களா?ஆம் ஆச்சர்யம் தான்!

Dr Malavika Iyer - Bomb Blast Survivor

13 வயதில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் தனது இரு கை மணிக்கட்டுகளையும் இழந்தவர் தான் இந்த அழகுப் பெண் மாளவிகா. அதோடு அவரது இரு கால்களும் வெகுவான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் முகத்தில் எந்தக் கலவரமும் இல்லாமல் புன்னகையை அள்ளித் தெளித்து நம்முடன் உரையாடுகிறார்.

”நான் வெறும் மாளவிகா இல்ல, டாக்டர் மாளவிகா, ஏன்னா ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே என்னோட பி.ஹெச்.டி படிப்ப முடிச்சிட்டேன்” என செயற்கையான கண்டிப்புடன் கூறி சிரிக்கிறார்.

Dr Malavika Iyer - Bomb Blast Survivor

”நான் பிறந்தது கும்பகோணம், அப்பா கிருஷ்ணன் ராஜஸ்தான்ல இன்ஜினியரா இருந்தாரு. அதனால குடும்பம் அங்க மாறிடுச்சி. ராஜஸ்தான்ல இருக்க பீகானிர் சிட்டில தான் நாங்க இருந்தோம், 2002 மே 26-ல எனக்கு சரியா 13 வயசு இருக்கும் போது, நான் அந்த குண்டு வெடிப்பை சந்திச்சேன்.

ராணுவத்துக்குத் தேவையான வெடிமருந்துகள் எல்லாத்தையும் அந்த இடத்துல தான் சேமித்து வைப்பாங்க. விபத்து நடக்குறதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடியே அங்க ஒரு தீ விபத்து நடந்து, அணு துகள்கள் எல்லாம் அந்த சிட்டி முழுக்க பரவியிருக்கு. அப்படித்தான் எங்க வீட்டுக்கும் அது வந்திருக்கு. ஸ்கூல் நாட்கள்ல நான் தான் கை வேலைப்பாடுகளுக்கு (கிராஃப்ட்) சிறந்த பரிசு வாங்குவேன். எனக்கு அது அவ்வளவு பிடிக்கும். அந்த அணு துகள்கள் வந்ததும், நம்ம கிராஃப்ட்ஸ் எல்லாம் எரிஞ்சிடுமேன்னு, ஓடிப்போய் அத எடுத்துப் பாதுகாக்கப் போனேன். ஆனா எதிர்பாராதவிதமா கைகள பாதுகாக்க மறந்துட்டேன்.

Dr Malavika Iyer - Bomb Blast Survivor

அதுல ஒரு நல்ல விஷயம் என் முகத்துக்கும், உள்ளுறுப்புகளுக்கும் எதுவும் ஆகல. ரெண்டு கால் மற்றும் கைகளோட முக்கிய நரம்புகள் எல்லாமே கட் ஆகிடுச்சி. 80 சதவீத ரத்தத்த அன்னைக்கு இழந்தேன். மருத்துவர்கள் பலபேர் நான் பிழைக்க மாட்டேன்னு சொன்னாங்க. கை கூட ஓரளவு சமாளிச்சிட்டேன். ஆனா கால்கள் ரெண்டும் ரொம்ப பாதிச்சிருக்கு. இது நிறைய பேருக்குத் தெரியாது. ரெண்டு காலுமே மல்டிபில் ஃபிராக்ச்சர், ஒரு கால்ல உயரம் கூட கம்மியாகிருக்கு. எலும்புகள் நொறுங்கி, கால்கள் வடிவமிழந்துருக்கு. அந்த அணு துகள்கள் சின்ன சின்னதா ரெண்டு கால்லயும் ஒட்டிருந்தது. அதை தினமும் கிளீன் பண்ணி எடுக்க 2 மாசமானது. முதல் 2 நாள் உடம்பு மரத்துப்போனதால எனக்கு எதுவுமே தெரில. மூணாவது நாள் தான் வலியின் கொடுமையை உணரத் தொடங்குனேன். இந்த உலகத்துல வேற யாருமே இந்த மாதிரி வலியை அனுபவிக்கக் கூடாதுன்னு அப்போ தான் நினைச்சேன்.

Dr Malavika Iyer - Bomb Blast Survivor

ரெண்டு தொடைகள்ல இருந்தும் தோலை எடுத்து கால்களை கவர் பண்ணிருக்காங்க. அதிர்ஷ்டவசமா முதல் முயற்சிலேயே என் கால்கள் அந்த மாற்றுத் தோலை ஏத்துக்கிச்சு. அது தான் முதல் சர்ஜரி. அதுக்கப்புறம் எத்தனை சர்ஜரி பண்ணிருக்கேன்னே தெரில, என் உடம்புல அவ்வளவு சர்ஜரி இருக்கு. அழுதுட்டு இருந்து எதுவும் பிரயோஜனமில்லங்கற நிதர்சனத்தை புரிஞ்சிக்கிட்ட என் அம்மா ஹேமமாலினி, 2003-ல என்னை கூட்டிட்டு சென்னை வந்து, அண்ணாநகர்ல இருக்க ஒரு எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனைல சிகிச்சைக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்பா ராஜஸ்தான் கவன்மென்ட்ல வேலை செஞ்சதால அவரால வர முடியல. என்னையும் பாத்துக்கிட்டு அக்காவையும் பாத்துக்க முடியாதுன்னு, அக்காவை பெரியம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இப்படி எனக்கு நடந்த அந்த விபத்துனால எங்க குடும்பம் அப்படியே பிரிஞ்சிடுச்சி.

ஒன்றரை வருஷம் பெட் ரெஸ்ட்ல இருந்தேன். கால்ல நிறைய கார்பென்ட்ரி வேலை செஞ்சாங்க. அம்மாவோட கால் எலும்புகளை சுரண்டி என் கால் எலும்புகளை ஜாயிண்ட் பண்ணுனாங்க. ஒருவழியா நடக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் தனியா நடக்க ரொம்ப நாளாச்சு. என் கூட படிச்சவங்க எல்லாரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுறதா சொன்னாங்க. ஸோ, பிரைவேட் கோச்சிங் சென்டர்ல படிச்சு தேர்வு எழுதலாம்னு நினைச்சேன். அப்போ தான் முதன்முதல்ல நான் வெளியுலகத்தப் பாக்குறேன். அப்போ எனக்கு ரொம்ப இன்ஃபீரியரா இருந்துச்சு, கை இல்லையேன்னு எல்லாரும் என்ன பாவமா பாக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல. முழு கை வச்ச டிரெஸ் போட்டு ஆர்டிஃபிஷியல் கைகளை அதுக்காகவே பயன்படுத்துனேன். அந்த நேரத்துல எனக்கு அவ்வளவு கான்ஃபிடென்டெல்லாம் கிடையாது.

Dr Malavika Iyer - Bomb Blast Survivorஸ்கூல் படிக்கும்போது டான்ஸ், கதாக், கிராஃப்ட்ன்னு என்ன சுத்தி இருந்த எல்லாத்தையும் லவ் பண்ணேன். ஸோ, அப்போ நான் ரொம்ப ஆவரேஜ் ஸ்டூடெண்ட். ஆனா இப்போ என்னால படிக்கிறத தவிர வேற எதுவும் பண்ண முடியாது. 3 மாசம் நல்லா படிச்சேன். அம்மா துணையோட எக்ஸாம் ஹாலுக்கு போய், அழுகாம, மத்தவங்க பாக்குறாங்கன்னு கவலை படாம விடைகளை டிக்டேட் பண்ணுனேன். அம்மாவுக்கு நான் எக்ஸாம் எழுதுனதே பெரிய சாதனையா இருந்தது. கணிதம் மற்றும் அறிவியல்ல சென்டம் வாங்குனேன், இந்தில ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குனேன், மொத்தம் 483 மார்க். அதுக்கப்புறம் என் வாழ்க்கை ரொம்பவே மாறிடுச்சி.

இனி பின்னால் திரும்ப வேண்டாம்னு, நடக்க வேண்டிய தூரத்தைப் பத்தி யோசிச்சேன். ரெகுலர் ஸ்கூல்ல 11, 12-ம் வகுப்பு படிச்சேன். டெல்லில இளங்கலை, முதுகலை படிச்சேன். எம்.ஃபில், பிஹெச்.டி சென்னைல முடிச்சேன். இதுல என்னோட பி.ஹெச்.டி தீஸிஸ் முழுக்க நானே டைப் பண்ணேன். எப்படி தெரியுமா? என்னோட வலது கைல ஒரு சின்ன எலும்பு நீட்டிட்டு இருக்கும். முதல்ல அத வச்சி மொபைல்ல மெஸேஜ் டைப் பண்ணி பாத்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா என் எலும்புக்கு பயிற்சி கொடுத்து, மொத்த தீஸிஸையும் டைப் பண்ணி முடிச்சேன்.

சோஷியல் ஒர்க் தான் என்னோட மெயின் சப்ஜெக்ட். காலேஜ்ல தான் நான் ரொம்ப ஃபீல் பண்ணுனேன். மத்தவங்க மாதிரி இல்லாம, எல்லாத்துக்கும் எனக்கு டைம் எடுத்துச்சு, அப்போ நிறைய அழுதுருக்கேன். முதுகலை வந்ததும் நான் எடுத்த சோஷியல் ஒர்க் என்ன ரொம்ப மாத்திடுச்சி. எல்லாத்துலயும் பாஸிட்டிவ மட்டும் பாக்க சொல்லிக் கொடுத்துச்சு. ஒருநாள் ஹாஸ்பிடல் போகும்போது, ஒரு பெண் என்ன பாத்து, ஐயோ பாவம், இந்தப் பொண்ணுக்கு கை இல்லையேன்னு சொன்னப்போ தான், நான் முதல் முறையா எனக்கு கை இல்லையேன்னு அழுதேன். மாற்றுத்திறனாளிகள் மேல காட்டுற அந்த பரிதாப ஆட்டிட்யூட் மனநிலையை பத்தி தான் பி.ஹெச்டில ஆராய்ச்சி பண்ணி, தீசீஸ் சப்மிட் பண்ணுனேன். அதுக்காக 1000 மாணவர்கள் கிட்ட பேசிருக்கேன்.

26 மே 2012-ல என்னோட விபத்து நடந்து 10 வருஷம் ஆகிருக்குன்னு ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டேன். அப்போ தான் எல்லாருக்கும் என்னப் பத்தி தெரிஞ்சது. அதுக்கு நிறைய ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நாம இதப்பத்தி நிறையப் பேசணும்ன்னு நினைச்சேன். 2013-ல இருந்து பொது மேடைகள்ல பேசுறேன். உங்கக் கதையைப் படிச்சு எனக்கு தன்னம்பிக்கை வந்திருக்குன்னு நிறைய பேர் சொல்லும்போது, எல்லாமே நல்லதுக்குத்தான்னு தோணும். இந்தியாவைத் தவிர வெளிநாடுகள்லயும் பேசுறேன். நியூயார்க்ல இருக்க ஐ.நா சபைல கூட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பேசுனேன். அது தான் என்னோட பெரிய சாதனை.

Dr Malavika Iyer - Bomb Blast Survivor

அப்புறம் 2018-ம் வருஷம் பெண்கள் முன்னேற்றத்துல பங்கெடுத்துக்குறவங்களுக்கு இந்திய அரசு வழங்குற அங்கீகாரமான “நாரி சக்தி புரஸ்கார்” விருதை நம்ம ஜனாதிபதி கிட்ட வாங்குனேன். போன வருஷம் என் கைகளால சமைக்கக் கத்துக்கிட்டேன். அப்புறம் 2014-ல இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான ஃபேஷன் ஷோவுல ரேம்ப் வாக் பண்றேன். தேவையில்லாத விஷயங்கள மனசுல போட்டு குழப்பிக்காம, என்ன தொடர்ந்து ஒவ்வொரு என்கேஜ்டா வச்சிருக்கேன்.

என்னோட பெரிய பலமே என் குடும்பமும் அம்மாவும் தான். விபத்து நடந்த முதல் நாள்ல இருந்து 2015 டிசம்பர் வரைக்கும் அம்மா எனக்காகவே முழு நேரத்தையும் செலவு பண்ணிருக்காங்க. அன்றாட தேவைகளுக்கு, கூட இருந்து என்னை ஊக்கப் படுத்தினது அம்மா தான்!

ஒருவேளை அவங்க, நொடிஞ்சு போய் உட்கார்ந்திருந்தாங்கன்னா, நான் இன்னைக்கு இந்த இடத்துல இருந்திருக்க மாட்டேன். கஷ்டத்தை எதிர் கொள்கிற மனநிலைய அம்மா கிட்ட இருந்து தான் கத்துக் கிட்டேன். எனக்காக அவங்க வாழ்க்கையை அர்ப்பணிச்சுருக்காங்க. அப்பாவும் அக்காவும் ரொம்ப சப்போர்ட்டானவங்க. இவளுக்கு இப்படி இருக்கேன்னு வீட்ல யாருமே என்னை வித்தியாசமா அணுகுனது இல்ல. அக்கா எப்படியோ, அப்படித்தான் நானும்.

நம்ம சென்னைல வெள்ளம் வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. அதனால தான் இப்போ அமெரிக்காவுல இருக்கேன். அன்பான கணவர், என்னை எல்லா விஷயத்துலயும் மோட்டிவேட் பண்ணுவார். 2017 அக்டோபர்ல நடந்த உலக பொருளாதார மன்ற இந்திய பொருளாதார சப்மிட்ல பேசுனேன். அதுல முன்னணி தொலைக்காட்சியின் பினராய் ராய், சசி தரூர் எம்.பி, சத்குரு இவங்களோட சேத்து என்னையும் இன்வைட் பண்ணிருந்தாங்க. நான் பேசி முடிச்சதும், எல்லாரும் எழுந்து நின்னு எனக்கு மரியாதை செலுத்துனாங்க. அந்தத் தருணத்தையெல்லாம் என் வாழ்நாள் முழுக்க என்னால மறக்க முடியாது.

இப்போவும் கால் ரெண்டுலயும் நிறைய பிரச்னைகள் இருக்கு, இருந்தாலும் பாத்துக்கலாம்ங்கற தைரியம் அதிகமாகிருக்கு. சவால்கள் நிறைந்தது தானே வாழ்க்கை. ”நெவர் கிவ் அப்” தான் என்னோட தாரக மந்திரம். நானோ, இல்ல என் ஃபேமிலியோ என்னையோ விட்டுக் கொடுத்திருந்தா நான் இன்னைக்கி இந்த நிலைமைல இருந்திருக்க மாட்டேன்.

நம்மள்ல நிறைய பேரு சின்ன விஷயத்துக்கு எல்லாம் நொடிஞ்சு போறாங்க. வாழ்க்கை உங்க மேல எத்தனை பந்துகள வீசுனாலும், அத திருப்பி அடிச்சு, சிக்ஸரா மாத்துங்க. ஒரு முறை அடிச்சு அந்த வெற்றியை ரசிக்க ஆரம்பிச்சிட்டோம்ன்னா, அதுக்கப்புறம் பாறாங்கல்லே நம்மள நோக்கி வந்தாலும், அசால்ட்டா தள்ளி விட்டுட்டு போகலாம்!

எல்லாத்துலயும் பாஸிட்டிவை மட்டும் பாருங்க, எதையும் நெகட்டிவா யோசிக்காதீங்க, வாழ்க்கை இன்பமாகும்” என கண்ணில் மின்னலுடன் புன்னகைக்கிறார் மாளவிகா.

மாளவிகாவின் வார்த்தைகளில் தான் எத்தனை அர்த்தம் உள்ளது!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Life is all about challenges never give up

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X