lung cancer symptoms | நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் | இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததும், அறியாமையும் தான் பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம்.
உடலில் உள்ள உயிர் அணுக்களின் இயல்புக்கு மாறான வளர்ச்சியே புற்றுநோய். இந்த ஒழுங்கற்ற விபரீதமான வளர்ச்சியானது, பக்கத்தில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மையுடையது.
இது மரணத்தை விளைவிக்கக்கூடிய மிகவும் கொடிய நோய். உடலில் எங்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம்.
60 வயதைத் தாண்டி வாழ்பவர்களில் 30 சதவீதம் பேருக்குப் புற்றுநோய் இருப்பதாகப் புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் சமீபகாலமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புகைப் பழக்கம் அதற்கு முக்கியக் காரணம் என்றாலும், அப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் அதிக அளவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 55 சதவீதம் பேர் புகைப் பழக்கம் இல்லாதவர்கள் என்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அந்த வகையான புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு காற்றில் உள்ள மாசுதான் முக்கியக் காரணம்.
எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அதனை குணப்படுத்த இயலும். நுரையீரல் புற்றுநோயும் அப்படித்தான். ஆனால், இறுதி நிலையில்தான் பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
அறிகுறிகள் என்ன?

புற்றுநோய் சுவாச பாதையில் இருக்கும்போது, வறட்டு இருமல், மூச்சு திணறலை ஏற்படுத்தும். இருமும்போது ரத்தம் வருதல், எடை குறைவு, அதீதத் தலைவலி, சுவாசக் கோளாறு, சில சமயங்களில் மார்பு அல்லது முதுகில் மந்தமான வலி ஏற்படுத்தலாம். முகத்தில் வீக்கம், குரலில் மாற்றம் மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகியவையும் இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால், அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக பரிசோதனை மேற்கொண்டால் புற்றுநோய் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகள் இல்லாமல் சிறிய அறுவை சிகிச்சை மூலமாகவே நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த இயலும்.
சில காரணங்களால் அறுவை சிகிச்சை செய்ய முடியாவிட்டால், ஸ்டீரோயோடாக்டிக், ஆப்லேடிவ் ரேடியோ தெரபி அல்லது ஸ்டீரியோடாக்டிக் பாடி ரேடியோதெரபி ஆகியவற்றை பயன்படுத்தி, கதிர்வீச்சு சிகிச்சை செய்ய இயலும்.
பெரும்பாலும் பரம்பரையாக வருகிற புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். அதற்கு, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் ஆரம்ப நிலையில் அதைக் கண்டுபிடிப்பதும்தான் முக்கியம். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“