Madurai Melur Mr Blacky food truck restaurant : நம்ம எல்லாருக்கும் என்ன முக்கியம்னு கேட்டா அது நிச்சயமா சோறு தான். சாப்பாடு இல்லாத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையான்னு கேக்குற அளவுக்கு சாப்பாட்டின் பங்கு நம் வாழ்வில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. அதையே நம்முடைய விளம்பர யுக்திக்காக பயன்படுத்துவோமா என்று கேட்டால் கொஞ்சம் யோசிக்க வேண்டிய சூழலில் தான் இருப்போம்.
ஆனால் மதுரை மேலூரில் இயங்கி வரும் மிஸ்டர் ப்ளாக்கி, ஃபுட் ட்ரக் ரெஸ்டாரண்ட் கொஞ்சம் “மாத்தி யோசி” என்ற முறையில் விளம்பர யுக்திகளை பயன்படுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் இதன் கார்டுகளை பார்க்கும் போது ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும் அது தானே உண்மை என்று கடை குறித்து விசாரிக்க துவங்கினோம்.
மேலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்குகிறது இந்த கடை. ஏதாவது மதுரை ஸ்பெசல் உணவுகள் தயாரிக்கின்றீர்களா என்றால், மதுரையில் இருந்து கொண்டே மதுரை ஸ்பெசல் உணவுகள் தயாரிப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறார் கடை உரிமையாளர் மணிகண்டனின் சகோதரர் ராஜாராம்.
மேலும் படிக்க : ’பிறந்தநாள் பரிசா அம்மா வேணும்ப்பா’: நிறைவேறுமா கயலின் ஆசை?
எங்கள் ஊர் இன்னும் கிராமம் தான். இங்கு இருக்கும் நிறைய நபர்களுக்கு பர்கர் போன்ற உணவுகள் எல்லாமே பணக்காரர்கள் சாப்பிடும் உணவுகள் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே ஊரில் 10-ல் 8 கடைகளில் தாராளமாக பரோட்டாவும் சால்னாவும் கிடைக்கிறது. இந்நிலையில் புதிதாக கடையை திறந்து அதே உணவுகளை ஏன் கொடுக்க வேண்டும் என்று யோசித்தோம். அதனால் உருவானது தான் மிஸ்டர் ப்ளாக்கி உணவகம். பர்கரை டீவியிலும் விளம்பரங்களிலும் கேட்டவர்கள் எல்லாரும் முதன்முறையாக நாங்கள் தயாரித்த உணவினை ருசித்துவிட்டு, வீட்டிற்கும் வாங்கிச் செல்கிறார்கள். இதில் ஏனோ தெரியவில்லை மனம் நிறையும் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது என்கிறார் ராஜாராம்.
இந்த நிறைவு எங்களுக்கு பிடித்திருப்பதால் தான் நாங்கள் தரமான உணவுகளை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். அக்கம்பக்கத்தில் எங்கு சிக்கன் பர்கர் வெறும் ரூ.50க்கு கிடைக்கும் என்றால் சந்தேகம் தான். கையேந்தி பவன் மாதிரி ஆனால் கையேந்தி பவன் இல்லை. ஏன்னா நாங்க சேர் போட்டு வச்சுருக்கோம் என்று பேசும் ராஜாராமும் அவருடைய அண்ணன் மணிகண்டனும் முதலில் ஹோட்டலுக்காக கடை பார்க்கலாம் என்று விசாரித்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு தர வேண்டிய அட்வான்ஸ், வாடகை எல்லாம் பார்க்கும் போது, தள்ளுவண்டி கடை தான் நமக்கு சரிப்பட்டு வரும் என்று யோசித்திருக்கிறார்கள். தள்ளுவண்டி என்று வந்த பின்பு புதுமையை செய்வது தான் சரி என்று யோசனை வந்திருக்கிறது. அதனால் இந்த ஃபுட் ட்ரெக் ஐடியாவிற்கு தங்களை அப்டேட் செய்துள்ளனர். செகண்ட் ஹேண்டில் டாட்டா ஏசை புக் செய்து, கன்னியாகுமரியில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து மேலூரில் மிஸ்டர் ப்ளாக்கியாக உருமாற்றம் செய்திருக்கிறனர்.
மேலும் படிக்க : எங்க தான் கிடைக்கும் இந்த இளநீர் சர்பத்? கோவை மக்களை தேட வைக்கும் சூப்பர் கடை!
கடை உருவாக்கத்திற்கு பின் இருக்கும் உருக்கமான காரணம்
கடை உரிமையாளர் மணிகண்டன் கம்போடியாவில் சமையற்கலை நிபுணராக பணியாற்றி வந்திருக்கிறார். இரண்டு மாத விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். ஆனால் அதுவே கொரோனா ஊரடங்கால் நீண்ட கால விடுப்பாக மாறிவிட்டது. கையிருப்பு எல்லாம் கரைய, அருகே இருக்கும் ஹோட்டலுக்கு சமைக்க கூட சென்றிருக்கிறார் மணிகண்டன். ஆனால் பகுதி நேர சேவை, இரவு 8 மணிக்கு முன்பே கடைகளை மூட வேண்டும், குறைவான வாடிக்கையாளர்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று என்பன போன்ற ஊரடங்கு தளர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட, சம்பளமும் குறைந்துள்ளது. 3 வயது கூட நிரம்பாத சின்னஞ்சிறு குழந்தையை வைத்துக் கொண்டு குடும்பத்தை எப்படி வழிநடத்துவது என்று தெரியாமல் தவித்திருக்கிறார் மணிகண்டன். தொழில் அறிவு இருக்கும் போது கவலை ஏன் என்று யோசித்து துணிந்து இந்த தொழிலில் இறங்கியிருக்கிறார் மணிகண்டன். அவருக்கு பக்கபலமாய் உடன் இருக்கிறார்கள் அவரின் சகோதரரும், நண்பர்களும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil