கேரளா மாநிலம் இடுக்கியிலிருந்து 14 கி.மீ தொலைவிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம், பளியன்குடி கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலும் இருக்கிறது மங்கலதேவி கண்ணகி கோயில்.
தமிழக எல்லையில் இருந்தாலும், கேரள தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தான் இந்த கோயில் இருக்கிறது.
இந்த கோயிலுக்கு கேரள மாநிலம் குமுளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதை உள்ளது. தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிமீ தூரத்துக்கு நடைபாதையும் உள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் திருவிழா நடைபெறும்.
இதில் தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இக்கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்குச் சொந்தம் என்பதில் தமிழக- கேரள மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.
கோயில் வரலாறு
கோவலன் கொலை செய்யப்பட்ட துக்கத்தில் மதுரையை எரித்த கண்ணகி, வைகை கரையோரமாக இங்கு வந்ததாக சிலப்பதிகார பதிவில் உள்ளது. இந்த இடத்தில் கோவலன் கண்ணகிக்கு மங்களநாண் பூட்டி விண்ணுக்கு புஷ்பரதத்தில் அழைத்துச் சென்றதாக ஐதீகம்.
இதன் சிறப்பை உணர்ந்த சேரன்செங்குட்டுவன் இமயத்தில் இருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு இந்த இடத்தில் கோயில் கட்டினார். அவர் கட்டிய கோயில்தான் ‘மங்கலதேவி கண்ணகி கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. பின்னர் குலசேகரபாண்டியன், ராஜராஜசோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. கண்ணகிக்கான பழங்கால சிற்பங்களும் இங்கு உள்ளன.
1905-லேயே இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட கோயில் முறையான சாலை வசதி இல்லாததால் பராமரிக்க முடியாமல் விட்டுவிட்டது. 1965 வரை இந்தக் கோயிலில் இருப்பது மங்கலதேவி என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால், அதே வருடம் பேராசிரியர் கோவிந்தராசனார் என்பவர்தான், 'சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோயில்தான் இது' என்று ஆய்வு செய்து கண்டுபிடித்தார். பிறகு, மங்கலதேவி கோயில்தான் கண்ணகி கோயில் என்று 1971-ல் அதிகாரபூர்வமாக்கத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
சித்திரை மாத பவுர்ணமி
இலக்கியச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கான பாதை கேரளப் பகுதியில் உள்ளது. இதனால் அம்மாநில வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு காலத்தில் நினைத்தபோதெல்லாம் தமிழக மக்கள் சென்று, 'சிலப்பதிகார முற்றோதல்' செய்து, வழிபட்டு வந்த கோயில் இது.
ஆனால் இப்போது ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாத பவுர்ணமி அன்று மட்டுமே இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.