அமெரிக்காவை சேர்ந்த சாரா கெர்ட்ஸ்-க்கு ஏழு வயதிருக்கும். அப்போது மற்ற குழந்தைகளின் போல் சாராக்கு இல்லாமல், தோலில் சுருக்கங்கள் ஏற்பட ஆரம்பித்தன. எதனால் இது ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவே மூன்று ஆண்டுகளாகின. மிகவும் விநோதமான, அரிதான நோயால் அவர் பாதிக்கப்பட்டார். அதற்கு பெயர் எஹ்லர்ஸ்-டன்லோஸ் எனும் குறைபாடு. இந்த குறைபாடு இருந்தால் தோலில் வலியும், தோலில் இளமையிலேயே சுருக்கம் ஏற்பட்டு முதியவரைப் போன்ற தோற்றம் ஏற்படும். இந்த குறைபாட்டானது உடலிலுள்ள இணைப்பு திசுக்கள், தோல் , உள்ளுறுப்புகள், ரத்த திசுக்கள் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரம்பத்தில் இந்த குறைபாடு ஏற்பட்டபோது, “மற்றவர்களை போல் தனக்கு தோல் இல்லாமல், வித்தியாசமாக இருக்கிறது.”, என சாரா மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால், 20 வயதானதிலிருந்து தன் உடம்பையே அவர் வெறுக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தன் வெளிப்புறத் தோற்றத்தினால் அவருக்கு பலவித ஏமாற்றங்களும், கேலிகளும் சாராவிற்கு வந்துசேர்ந்தன.
”இந்த குறைபாட்டால் உடல் முழுவதும் வலி ஏற்படும். முதுகு வலி, மூட்டு வலி, என எல்லா இடங்களிலும் தாங்கமுடியாத வலியை உருவாக்கும். இந்த வலி என்னுடைய தினசரி வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்றாக பழகிவிட்டது.”, என சாரா ஒருமுறை தன் குறைபாடு குறித்து கூறினார்.
நீண்ட நேரம் அவரால் தன் அலுவலகத்தில் கால்மீது கால் போட்டு அமர்ந்திருக்க முடியாது. வாகனம் ஓட்ட முடியாது.
தன் வெளிப்புறத் தோற்றத்தால் அவருக்கு விருப்பமான காதல் வாழ்க்கை கைகூடவில்லை. 22 வயதில் காதல் முறிவை சாரா சந்திக்க வேண்டியிருந்தது.
22 வயதில் ஏற்பட்ட காதல் முறிவுக்குப் பின் சாரா சோர்ந்திருந்தார். அப்போதுதான் லண்டனில் உள்ள அவரது உறவினர் ஒருவர், அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை ‘லவ் யுவர் லைன்ஸ்’ (Love your Lines) என்ற பிரச்சாரத்திற்கு எழுதி அனுப்புமாறு கூறினார். அந்த பிரச்சாரமானது, மற்றவர்களைப் போல் அல்லாமல், வெளிப்புற குறைபாடுகளால் பாதிக்கப்பட்டோருக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவும், அவர்களை புகழ்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒன்று.
அதன்பிறகு தன்னுடைய வலியையும், உடம்பையும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார். தன்னுடைய வெளிப்புறத்தோற்றத்தை மற்றவர்களுக்காக மாற்றிக்கொள்ள முடியாது என தீர்மானித்தார். தன் உடம்பை காதலிக்கக் கற்றுக்கொண்டார். தன்னுடைய குறைபாட்டால் உறவுகளையும், நட்புகளையும் அவர் இழக்க விரும்பவில்லை. அவருடைய வாழ்க்கை மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவதுதான் என நம்பினார்.
அதன்பிறகு, அவரைபோலவே குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சாராவை தொடர்புகொண்டு பேசினர். அவர்களுக்காக சாரா செயல்பட ஆரம்பித்தார். அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவும், அவர்களுடைய உடலை காதலிக்க கற்றுக்கொடுப்பதற்காகவும் சாரா மாடலாக மாறினார். இன்ஸ்டக்ராமில் நம்பிக்கை அளிக்கக்கூடிய புகைப்படங்களை அவர் தினமும் பகிர்கிறார்.
அவரைப் போன்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் சாரா சொல்லக்கூடியது 4 விஷயங்கள் தான்:
1. ”நீங்கள் ஒரே நாளில் உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாது. அதற்கென வழிமுறைகள் உண்டு. அதை கற்றுக்கொண்டால் நம்முடைய குறைகளிலிருந்து விடுபடலாம்.”
2. “உங்களிடம் நீங்கள் மென்மையாக இருங்கள். உங்களை நீங்கள் காதலியுங்கள்.”
3.”உங்களை யார் ஊக்கப்படுத்துகிறார்களோ அவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.”
4.”நீங்கள் தினந்தோறும் அழகாக இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்”.