பழம்பெரும் நடிகை லதா, எம்.ஜி.ஆரால் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கதாநாயகி, எம்.ஜி.ஆருடனும் ரஜினியுடனும் ஜோடியாக நடித்த ஒரே ஹீரோயின்... எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தின் நாயகியும் இவரே!
Advertisment
ஒருமுறை ஒரு தமிழ் நாளிதழுக்கு பேட்டியளித்த லதா, எனக்கு எம்.ஜி.ஆர்.தான் எல்லாமே.நடிக்க வந்தபோது நான் மிகவும் சிறியவள். வெளி உலகம் அதிகம் தெரியாது. எப்படி நடந்துகொள்ள வேண்டும். யாரிடம் எப்படி பேச வேண்டும், பண்பு, மரியாதை எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து, கல்லாக இருந்த என்னை சிற்பமாகச் செதுக்கியவர் எம்.ஜி.ஆர்தான்.
எனது நிஜப் பெயர் நளினி. சினிமாவுக்காக ‘லதா’ என்று பெயர் வைத்ததே அவர்தான். என் வீட்டு பூஜையறையில் தெய்வங்கள், தாய், தந்தையுடன் எம்.ஜி.ஆர். படத்தையும் வைத்து தினமும் வணங்குகிறேன்…
எம்.ஜி.ஆரோடு நான் நடித்த முதல் படமான 'நேற்று இன்று நாளை' படத்தின் படப்பிடிப்பு போதுதான் கட்சியைத் துவங்கினார்.
Advertisment
Advertisements
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், சத்தியவாணி முத்துவுக்குப் பின் நான் 3-வது பெண் உறுப்பினர். 1977-ல் முதல் சட்டப்பேரவை பொதுத் தேர்தலை சந்திக்கும் நேரம்.
கட்சியில் பணம் இல்லை. ‘சாகுந்தலம்’ என்ற நாட்டிய நாடகத்தைத் தயார் செய்து தமிழகத்தின் பல ஊர்களில் நடத்தி அதன் மூலம் வசூலான ரூ.35 லட்சத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத்தேன்.
45 ஆண்டுகளுக்கு முன் ரூ.35 லட்சம் என்பது இன்றைய மதிப்பில் பல கோடிக்கு சமம். ‘எல்லாருக்கும் நான் கொடுக்கிறேன். எனக்கு நீ கொடுக்கிறியா?’ என்று எம்.ஜி.ஆர். கிண்டல் செய்தது, ஒரு நடராஜர் சிலையை எனக்கு பரிசாக வழங்கியதை என்னால் மறக்க முடியாதது, என்று பல நினைவுகளை பகிர்ந்திருந்தார்.
சமீபத்தில் லதா குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு குறித்து லதா பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
’நிறைய மறக்க முடியாத பரிசுகள் இருக்கு, சின்ன வயசுல இருந்து எங்க அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்தது, நான் எதுவும் அவுங்ககிட்ட கேட்க மாட்டேன். ஆனா எங்க அம்மா எனக்கு நகையா வாங்கி வந்து கொடுப்பாங்க.. எனக்கு அதுல பெரிசா ஆர்வம் இல்ல…
நடிக்க வந்த பிறகு, எனக்கு பிறந்தநாள் வந்தது, அப்போ ஷூட்டிங்ல இருந்தேன். எம்.ஜி.ஆர்க்கு என் பிறந்தநாள் தெரிஞ்சி, எங்கிட்ட உனக்கு என்ன வேணும் கேட்டாரு. நான், ஒன்னும் வேண்டாம்னு சொன்னேன். ஆனா அவரு, விடாம வற்புறுத்தி கேட்டாரு…
அப்போ, நான் எனக்கு ஒரு மோதிரம் வேணும் கேட்டேன், அப்புறம் பார்த்தா பிரேக்ல போயிட்டு, மூணுக் கல்லு வச்ச வைர மோதிரம் வாங்கிட்டு வந்தாரு… அதை நான் இப்போவும் பத்திரமா வச்சிருக்கேன்.
அதேமாதிரி நான் அதிமுக தேர்தல் நிதிக்காக பணம் கொடுத்த போது எனக்கு பெரிய நடராஜர் சிலை கொடுத்தாரு, அதை இன்னும் வச்சிருக்கேன்… இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்ச பரிசு என்று, லதா பகிர்ந்து கொண்டார்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“