Advertisment

பொக்கிஷமாக மிளிரும் அபூர்வ போட்டோஸ்; சென்னையின் ஆச்சரிய மனிதர் ஆனந்த்

பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் கடையில் சேகரித்து வைத்திருக்கிறார், ஆனந்த் குமார் பௌமிக்.

author-image
Janardhan koushik
New Update
பொக்கிஷமாக மிளிரும் அபூர்வ போட்டோஸ்; சென்னையின் ஆச்சரிய மனிதர் ஆனந்த்

ஆனந்த் குமார் பௌமிக் (Source: Express Photo)

Chennai News - பல்வேறு விதமான சமூகத்தில் இருந்து வரும் மனிதர்கள் ஒன்றுபட்டு எந்த ஊரில் வாழ முடியும்? என கேட்டால் அது சென்னையில் மட்டும் தான் என்ற பதில் மட்டுமே நமக்கு கிடைக்கும். பல விதமான சமூகத்திலிருந்து, பல விதமான கதைகளுடன், பல விதமான வரலாற்றை கொண்டு மக்கள் இங்கு பாகுபாடு இல்லாமல் வாழ்வது ஆச்சரியத்தையும் மன நிறைவையும் கொடுக்கும். 

Advertisment

அப்படிப்பட்ட நம்மூரில் இன்னொரு அறிய கதையைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னையின் பழமையான இடங்களில் ஒன்றான சவுகார்பேட்டையின் குறுகிய பாதை, பலவிதமான இனிப்பு மற்றும் சாட் பொருட்கள், ஷாப்பிங் பொருட்கள் மற்றும் நகரத்தில் உள்ள வட இந்திய சமூகத்தின் மையமாக கருதப்படும் கடைகளுக்கு பெயர் பெற்றது. அங்கு, ஆனந்த் குமார் பௌமிக் (வயது 56), காசி செட்டி தெருவில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை விற்பதை தொழிலாக வைத்து வருகிறார்.

இந்த மனிதரின் பொழுதுபோக்கு என்னவென்று கேட்டால் யாருக்கும் கிடைக்காத அறிய புகைப்படங்களை நாற்பது வருடங்களாக சேகரித்து வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.

அவரின் கடை வாசல் அருகில் இரண்டு வரிசை கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களை காண முடியும். அந்த புகைப்படங்கள் அவரது 30,000 க்கும் மேற்பட்ட புகைப்பட தொகுப்புகளில் ஒரு பகுதியாகும். புகழ்பெற்ற பிரமுகர்களின் பிறந்த நாள், இறப்பு மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், ஆனந்த் இந்த புகைப்படங்களை தனது கடையின் முன் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்.

அந்த அட்டை புகைப்படங்களில் ஒன்றான தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் புகைப்படம் ஆனந்திற்கு மிக முக்கியமானது. ஏனென்றால் அவரை ஆனந்த் தனது ‘கடவுளாக' பார்ப்பதாக கூறுகிறார். டிசம்பர் 24, 1987 அன்று எம்.ஜி.ஆர் மறைந்ததை அறிந்த ஆனந்த் இரண்டு நாட்கள் சுயநினைவின்றி இருந்ததாக கூறுகிறார்.

"எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்திற்கு என்னை அழைத்துச் சென்ற எனது தந்தைதான் எம்.ஜி.ஆரை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் அவரின் நடிப்பிற்கு ரசிகனாக மாறிவிட்டேன்.

அவரது கவர்ச்சி, கருப்பு கண்ணாடி அணிந்திருந்த விதம், தொப்பிக்கு இடையூறு விளைவிக்காமல் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடமிருந்து மாலைகளை கவனமாக ஏற்றுக்கொள்ளும் விதம், இவை அனைத்தும் அவரை ஒரு சிறந்த மனிதராக எனக்கு தோன்ற செய்தது.

அக்காலத்திலிருந்து அவருடைய புகைப்படங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும், நான் முதலில் என் பிராத்தனையை அவருக்குச் செலுத்திவிட்டு என் வேலையைத் தொடங்குகிறேன், ”என்று அவர் கூறுகிறார்.

ஆனந்தின் மனம் ஒரு கணினி போல வேலை செய்கிறது. அவர் தனது சேகரிப்புகளைப் பற்றி பேசுகையில், மகாத்மா காந்தி கப்பலில் இருந்து இறங்கும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி, காந்தி எந்த நாட்டிற்கும் விமானத்தில் பயணம் செய்ததில்லை என்று குறிப்பிடுகிறார். 

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் இருந்து தண்டி மார்ச், ஜாலியன் வாலாபாக் படுகொலை, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அடால்ஃப் ஹிட்லரின் சந்திப்பு, பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதல், என அனைத்து சம்பவங்களையும் தேதியுடன் நினைவில் வைத்திருக்கிறார் ஆனந்த்.

அவரது சேகரிப்புகளை ஒருவர் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், ​​போர்கள் தொடர்பான ஏராளமான புகைப்படங்களை காணலாம். அவற்றைப் பற்றி கேட்டபோது, ​​அந்த போர்களின் தாக்கம் மற்றும் அவர்களின் தலைவர்களின் முடிவுகளால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை வருங்கால சந்ததியினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாக ஆனந்த் கூறுகிறார்.

"எதிர்காலத்தில் ஒருபோதும் போர் ஏற்படக்கூடாது, நாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ வேண்டும் மற்றும் தங்களுக்கு இடையே என்ன வித்தியாசம் இருந்தாலும், ஒரு சுமூகமான தீர்வைத் தேட வேண்டும். போரின் தாக்கத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், எனது கடைக்குள் வைத்திருக்கும் புகைப்படங்களை பாருங்கள்,” என்று அவர் கூறுகிறார்.

ஆரம்ப காலத்தில் சார்லி சாப்ளின் முதல் திலீப் குமார் வரையிலான நடிகர்களின் மிகப்பெரிய புகைப்படத் தொகுப்பும் அவரிடம் உள்ளது. 

ஆனந்த் 10 வயதிலிருந்தே தன்னால் முடிந்த பணத்தில் புகைப்படங்களை சேகரிக்கத் தொடங்கினார். மற்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் பரிசளித்த புகைப்படங்கள், நெகடிவ் பிரிண்ட்கள், குறுந்தகடுகள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் புத்தகங்களின் பெரிய தொகுப்பு தன்னிடம் இருந்ததாகவும், ஆனால் 2015 சென்னை வெள்ளத்தில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

"நான் இறந்து, அப்புகைப்படங்கள் காப்பாற்றப்பட்டிருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன், ஏனென்றால் அவை தான் எனக்கு எல்லாமே. எனது வீட்டின் தரை தளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டது. சில வெளிநாட்டவர்கள் பரிசளித்த அரிய புத்தகங்கள் அடித்துச் செல்லப்பட்டன. நான் இப்போது அவற்றை ஆன்லைனில் தேடினால், ஒரு பொருளின் விலை 6,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்பனைக்கு இருக்கிறது, அவற்றில் சில புத்தகங்கள் விற்பனைக்கும் கிடைக்கவில்லை, ”என்று அவர் கூறுகிறார்.

ஆனந்த் தனது ஃபோனையோ அல்லது வேறு எந்த கேட்ஜெட்டையோ பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, அவர் சந்திக்கும் நபர்களின் பெயர்களையும் எண்களையும் கூட டைரியில் தான் குறிப்பிடுகிறார். குறிப்புகளைப் படிக்கும்போது கிடைக்கும் திருப்தி வேறு எந்த வகையிலும் பெற முடியாது என்கிறார்.

அவர் தனது புகைப்படங்களை எவ்வாறு சேகரிக்கிறார் என்று கேட்டபோது, ​​ஆனந்த் புத்தகக் கண்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களை சார்ந்து இருப்பதாக கூறுகிறார்.

“புத்தகக் கண்காட்சிகள் எனது முதுகெலும்பாக இருந்திருக்கின்றன. புகைப்படங்களைச் சேகரிக்க நான் நாடு முழுவதும் பயணம் செய்துள்ளேன். எனது சொந்தப் பணத்தில் இதைச் செய்துள்ளேன். எனது வருமானத்தில் ஒரு பகுதி குடும்பத்திற்குச் செல்கிறது, ஆனால் மீதமுள்ளவை புகைப்படங்களை சேகரிப்பதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது, ”என்று அவர் கூறுகிறார்.

ஆனந்தின் பெரும்பாலான சேகரிப்புகள் மிகவும் பழமையானவை. கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள் மாயாஜாலமானவை என்றும், வண்ணப் படங்களில் இல்லாத கலை நயம் அதில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்களில், எங்கள் முழு கவனமும் அந்த காலகட்டத்தில் இது எப்படி நடந்திருக்கும் என்பதை நாங்கள் கற்பனை செய்ய ஆரம்பிப்போம், அதேசமயம் வண்ண புகைப்படங்களில் இவ்வுணர்வு கிடைக்காது. விஷயத்தை விட, புகைப்படத்தில் பிடிக்கப்பட்ட பின்னணி, ஆடைகள் மற்றும் பிற விஷயங்களை நோக்கி நமது கவனம் நகர்கிறது, ”என்று அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் தின கொண்டாட்டத்தின் போது, ​​​​ஆனந்த் தனது கடையின் முன் நகரத்தின் சில அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்துவார். அவர் தனது புகைப்படங்களைக் காண்பிக்கவும் அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசவும் பல நிறுவனங்களுக்கு விருந்தினராக அடிக்கடி அழைக்கப்படுகிறார்.

“என்னிடம் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் பழைய மெட்ராஸின் பல புகைப்படங்கள் உள்ளன. சென்ட்ரல் ரயில் நிலையம் கட்டும் போது அதன் படங்கள் என்னிடம் உள்ளன,” என்று அவர் குறிப்பிடுகிறார்.

மறைந்த தமிழக முதல்வர்களான எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோரிடம் தனது படைப்புகளைக் காண்பிக்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும், அவர்களின் பாராட்டைப் பெற்றதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனந்தின் மனைவி விஷாகா பௌமிக் கூறுகையில், அவர்களது குடும்பத்தினரின் எதிர்ப்பு இருந்தபோதிலும், தனது கணவர் விரும்பியதைச் செய்வதற்கு எப்போதும் ஊக்கப்படுத்தியதாக கூறுகிறார்.

“அவர் (ஆனந்த்) சிறு வயதிலிருந்தே இந்த புகைப்படங்களை சேகரித்து வந்தார். எனக்கு திருமணமான பிறகு, அவர் எதற்காக புகைப்படங்களை சேகரிக்கிறார் என்று எனக்கு முதலில் புரியவில்லை, மேலும் இது பொருளாதார ரீதியாக எங்களைப் பாதிக்கிறது என்பதால் இதை நிறுத்தச் சொன்னேன். ஆனால் அவர் இந்த செயலில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை நான் மெதுவாக புரிந்துகொண்டேன். புத்தகங்கள், பத்திரிகைகளில் இருந்து புகைப்படங்களை வெட்டி லேமினேட் செய்து வந்தார். இப்போதும் கூட, குடும்ப உறுப்பினர்கள் என்னை நிறுத்திவிட்டு மேலும் சம்பாதிக்க ஏதாவது சிறப்பாகச் செய்யும்படி அவரிடம் அறிவுறுத்துகிறார்கள், ஆனால் என் கணவர் அவர் விரும்பியதைச் செய்கிறார், அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என்று நான் அவர்களிடம் கூறுகிறேன், ”என்று அவர் கூறுகிறார்.

ஆனந்தின் அடுத்த புகைப்படக் கண்காட்சி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னைக்கு அருகிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாடில் நடைபெறும். அந்த நிகழ்வின் புகைப்படங்களையும், அதில் பங்கேற்க உள்ள சிறந்த செஸ் வீரர்களின் புகைப்படங்களையும் சேகரிக்கப் போவதாக அவர் கூறுகிறார். 

அவரது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி கேட்டபோது, ​​ஆனந்த் கூறுகையில், "படங்களைச் சேகரிப்பது தனது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது, தனது கடைசி மூச்சு இருக்கும் வரை இதைச் செய்து கொண்டே இருப்பேன்," என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment