scorecardresearch

ஊட்டி, கொடைக்கானல் விடுங்க.. இந்த மழையில நீங்க கண்டிப்பா இந்த இடங்களை பாக்கணும்

நீங்கள் முதல் முறையாக இதுபோன்ற பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் மற்றும் எவ்வாறு தொடங்குவது என்று தெரியவில்லை என்றால், நீங்கள் ஒரு டிராவல் ஏஜெண்டின் உதவியை நாடலாம்.

ஊட்டி, கொடைக்கானல் விடுங்க.. இந்த மழையில நீங்க கண்டிப்பா இந்த இடங்களை பாக்கணும்
Monsoon destinations in Tamilnadu

மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் அற்புதமான மற்றும் அழகான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுடன் தென்னிந்தியா இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பருவமழையின் போது இந்த இடங்களை சுற்றி பார்ப்பது, உங்கள் நினைவுகளை இன்னும் அதிகமாக நேசத்துக்குரியதாக மாற்றும்.

பசுமையான மலைகள், நீர்வீழ்ச்சிகள், மூடுபனியால் மூடப்பட்ட மலைகள் என மழைக்காலத்தில் நீங்கள் இங்கு செல்லும் போது, இந்த இடங்களின் மீது காதல் கொள்வீர்கள்.

இருப்பினும், நீங்கள் முதல் முறையாக இதுபோன்ற பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் மற்றும் எவ்வாறு தொடங்குவது என்று தெரியவில்லை என்றால், நீங்கள் ஒரு டிராவல் ஏஜெண்டின் உதவியை நாடலாம்.

தமிழ்நாட்டின் மலைவாசஸ்தலம் என்றால் உடனே அனைவரின் நினைவுக்கும் வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். ஆனால் அது மட்டும்தான் இங்கு இருக்கிறதா என்ன? எண்ணற்ற அழகை தன்னுள் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இந்த பருவமழையில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டிய மற்ற இடங்களும் உள்ளன.. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

மேகமலை

மேகமலை தமிழ்நாட்டின் அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. உயரமான அலை அலையான மலைகள் என்று அழைக்கப்படும் இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 1500 மீ உயரத்தில் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் அமைதியான மற்றும் நிம்மதியான வார விடுமுறையை விரும்புவோருக்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது.

மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு, தூவானம் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 10000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்.

வால்பாறை

மேற்கு தொடர்ச்சி மலையின் ஆனைமலை மலைத்தொடரில் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகான மலைவாசஸ்தலம் பருவமழை காலத்தில் நல்ல மழையைப் பெறும். வால்பாறையின் தேயிலை மற்றும் காபி தோட்டங்களுடன், காட் சாலைகளில் உள்ள 40 ஹேர்பின் வளைவுகள், செழுமையான தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை இங்கு முக்கிய சுற்றுலா அம்சமாகும்.

அடர்ந்த காடுகள், தேயிலை தோட்டங்கள், அருவிகள், நிரம்பி வழியும் அணைகள் மற்றும் என இனிமையான காலநிலையை நீங்கள் அனுபவிக்கலாம்.. மலையேறுபவர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் இந்த இடத்தை உங்கள் பயண விருப்பப்பட்டியலில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

பாலாஜி கோயில், அக்கா மலை, வெள்ளமலை சுரங்கப்பாதை, சின்னக்கல்லார் அணை, சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சி, கீழ்நீரார் அணை, கூழாங்கல் ஆறு ஆகியவை வால்பாறையில் அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்.

ஏற்காடு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு, மழைக்காலத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையானது. ஆகஸ்ட் மாதத்தில் நீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் கண்டிப்பாக இந்த இடத்திற்கு சென்று வாருங்கள்.

கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற பிரபலமான பகுதிகள் காரணமாக இது பெரும்பாலும் இன்னும் அறியப்படாத இடமாகவே உள்ளது. இந்த கண்கவர் இடம் கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஷெவராய் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம் ஆகும். நீங்கள் இங்கு, ​​அண்ணா பூங்கா, ஷெவராய் ஹில்ஸ், லேடி சீட் மற்றும் ஜென்ட்ஸ் சீட் போன்ற சில இடங்களை பார்க்கலாம்.

இதன் நல்ல அம்சம் என்னவென்றால், இயற்கை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, சாகச ஆர்வலர்களுக்கும் கூட இந்த இடம் பிடிக்கும், நீங்கள் எமரால்டு ஏரியில் படகு சவாரி செய்யலாம் மற்றும் பகோடா பாயிண்டில் இருந்து அமைதியாக சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசிக்கலாம். மழைக்காலத்தில் இதன் சராசரி வெப்பநிலை 20°C முதல் 25°C வரை மாறுபடும்.

மூணாறு

தேயிலை தோட்டங்கள் மற்றும் சிறிய பாறைகளால் மூடப்பட்டிருக்கும் மூணாறு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்தியது போல இருக்கிறது. மூணாறைச் சுற்றிலும் உள்ள அணைகளில் படகுசவாரி, பசுமையான பள்ளத்தாக்கு, பூங்கா, மலையேற்றம், நீர்வீழ்ச்சி போன்ற பொழுது அம்சங்களும் அதிகம் உள்ளன.

தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், பசுமையான தாவரங்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற இந்த இடம் மழைக்காலத்தில் சொர்க்கமாக காட்சியளிக்கும். இங்கு திடீர் திடீரென கிளைமேட் மாறி விடுவது அதன் அதிசயத் தக்க அம்சம்.

மூணாறில், இறவிக்குளம் தேசிய பூங்கா, மாட்டுப்பட்டி அணை, நியமக்கடா எஸ்டேட், எக்கோ பாயிண்ட் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.  மூணாறு யானைச் சவாரி மிகவும் பிரபலம்.  சின்னாறு ட்ரெக்கிங் பாயிண்ட், சந்தன மரக்காடு, செங்குளம் போட்டிங், குந்தளா, லக்கோம் நீர்வீழ்ச்சி போன்றவை மூணாறில் பார்த்துப் பரவசம் அடையவேண்டிய முக்கிய இடங்கள்.

மழைக்காலங்களில் சுற்றிப் பார்ப்பது நல்ல யோசனையாக இருக்காது, ஏனெனில் அப்போது மிகவும் வழுக்கும். இருப்பினும், உள்ளூர் வழிகாட்டியுடன் பெரும்பாலான இடங்களைப் பார்வையிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Monsoon destinations in tamilnadu megamalai yercaud munnar valparai

Best of Express